Showing posts with label more articles. Show all posts
Showing posts with label more articles. Show all posts

Saturday, 23 June 2018

ஞானசாரரை விடுதலை செய்வதில் ஜனாதிபதிக்கு ஏன் இவ்வளவு அக்கரை?

ஞானசாரரை விடுதலை செய்வதில் ஜனாதிபதிக்கு ஏன் இவ்வளவு அக்கரை?

ஞானசார தேரருக்கு ஜனாதிபதியின் அதி விசேட அதிகாரத்தின் மூலம் பொது மன்னிப்பு வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாக அமைச்சரவையின் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

நீதி மன்ற அவமதிப்பு வழக்கில் கடூழிய சிறை தண்டனை பெற்றுள்ள ஒருவருக்காக தமது விசேட அதிகாரத்தை பயன்படுத்த ஜனாதிபதி எத்தனிப்பது ஏன்? என்பதே தற்போதுள்ள மில்லியன் டாலர் கேள்வியாகும்.

நாட்டின் அமைதிக்கு பெரும் குந்தகம் விலைவித்தது மாத்திரமன்றி பல இனவாத செயல்பாடுகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஞானசாரர் மீது நல்லாட்சி அரசின் ஜனாதிபதிக்கு ஏன் இவ்வளவு பாசம் என்பதே முக்கிய சந்தேகமாகவுள்ளது.

முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற அண்மைக் கால கலவரங்களில் அளுத்கமை கலவரம் தொடர்பாக இவர் மீது சுமார் 40க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளமை கவனிக்கத்தக்கதாகும்.

ஞானசாரர் மீது அதிக பாசம் செலுத்த முனையும் இந்த அரசாங்கம் ஏன் இதற்கு முன்னால் சிறை தண்டணை அனுபவித்து வரும் 15 பவுத்த பிக்குகள் மற்றும் கிருத்தவ, இந்து, முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்த 03 மதகுருக்கள் மீது பாசம் காட்ட முன்வரவில்லை?

சட்டம் அனைவருக்கும் சமமானது என்று பேசும் ஜனாதிபதி, சட்ட பீடமான நீதி மன்றத்தையே அவமதித்தவருக்கு பொது மன்னிப்பு வழங்க முனைவது எவ்வகை நியாயமோ?

அப்படியானால் இதே போல் நீதி மன்ற அவமதிப்பு வழக்கு விசாரனையில் தொடர்பு பட்டுள்ள அமைச்சர் ரன்ஜன் ராமனாயக்கவுக்கும் அடுத்ததாக பொது மன்னிப்பு வழங்கப்படுமா? 

இப்படி பல கேள்விகள் இந்த விவகாரத்தில் எழாமல் இல்லை.

எது எப்படியோ பூனைக் குட்டி தொடர்ந்து வெளியில் பாய்ந்து கொண்டு தான் இருக்கிறது.

பொது பல சேனாவை நாய்க் கூண்டில் அடைப்பேன் என்ற முஸ்லிம்களின் சகோதரி (?) சந்திரிக்கா எங்கிருக்கிறாரோ? 

இனவாதத்தை தூண்டுகிறார், முஸ்லிம்களை அழிக்க துடிக்கிறார் என்று ஞானசாரரை சாடிய நம் முஸ்லிம் தலைமைகள் இன்று மட்டும் ஏனோ வாய் திறக்காமல் மவுனம் காக்கிறார்கள்?

தேசிய அரசியலில் என்றைக்கும் கருத்துரைக்காமல் முஸ்லிம் பகடைக் காய் அரசியலை மாத்திரமே முன்னிருத்தி வரும் முஸ்லிம் அரசியல் தலைமைகளின் இந்நிலை காலத்தால் அழியாத வடுவென்பதில் ஐயமில்லை.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அளுத்கமை கலவரத்திற்கு நீதி கிடைக்கும்.

கலவரக்காரர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நஷ்டஈடு கிடைக்கும்.

என்றெல்லாம் இவர்கள் கொடுத்த வாக்குறுதிகள் கொஞ்சமா?

இவர்கள் கொடுத்த வாக்குறுதிகள் எல்லாம் பாராளுமன்றத்திற்கு முன்னால் அடித்த காற்றுடன் பரந்து போனதுதான் உண்மை.

தேடிச் சென்று நலம் விசாரிக்கும் பாசமிக்க அமைச்சர்கள்.

நீதி மன்ற அவமதிப்பு வழக்கில் கைதாகி சிறை சென்றுள்ள ஞானசாரரை சிறைச்சாலைக்கே நேரில் சென்று நலம் விசாரித்து வந்துள்ளார் ஜனாதிபதியின் கட்சியின் தேசிய அமைப்பாளரும் நல்லாட்சி (?) அரசாங்கத்தின் அமைச்சருமான துமிந்த திசானாயக்க.

அது மாத்திரமன்றி வெள்ளிக்கிழமைக்குள் ஞானசாரரை வெளியில் எடுப்பதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாகவும் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது அவர் தெரிவித்துள்ளார்.

ஞானசாரர் நீதி மன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை பெற்றதற்கே ஆடிப்போன இந்த அரசாங்கமும், இதிலுள்ள அமைச்சர்களும் தான் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத தாக்குதல்களுக்காக குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தரப் போகிறார்களா? இனியும் இதனை நாம் நம்பித்தான் ஆகவேண்டுமா?

இன்றைக்கு சிறை தண்டனை பெற்றுள்ள ஞானசாரரை தேடிச் சென்று நலம் விசாரிக்கும் ஜனாதிபதியின் கட்சியை சேர்ந்தவர்கள் இதற்கு முன்னர் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் 18 மத குருக்களில் எவரையும் சென்று நலம் விசாரிக்க வில்லையே ஏன்? 

தாம் ஆட்டிய பொம்மை என்பதினால் தாங்க முடியாத பாசம் வெளிப்படுகிறது இதுவே யதார்த்தமானது.

கடந்த ஆட்சியில் ஆட்டம் போட்ட ஞானசாரரை மஹிந்த ஆட்டு வித்தார் என்றால் இந்த ஆட்சியிலும் அதை விட அதிக ஆட்டம் போட்டார் ஞானர். 

இந்த ஆட்சியில் ஞானசாரரை ஆட்டுவிப்பது யார்? என்ற விடை தெரியா கேள்விக்கு தற்போதைய நல்லாட்சி (?) அரசாங்கம் தாமே தம் நடத்தை மூலம் பதிலளித்துக் கொண்டிருக்கிறது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

நாம் இனியும் அவதானமற்றிருக்கலாமா?
--------------

வேகமாக ஓடும் ரயிலைப் பார்த்து வெற்று வயலில் நின்று கத்தும் எறுமைகளாக இறாமல்... சுற்றும் முற்றும நம்மைச் சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை அடையாளம் கண்டு எதிர்கால அரசியலை மிகச் சரியாக முடிவெடுக்கும் வகையிலான செயல்திட்டங்களை முஸ்லிம் சமுதாயம் மேற்கொள்ள வேண்டிய தருணம் இருதான்.

குழந்தையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டி விடும் அசகாய அரசியலை முன்னெடுக்க முனையும் ஜனாதிபதியும் நல்லாட்சி (?) அரசாங்கமும் இனியும் இனவாதத்தின் பெயர் சொல்லி முஸ்லிம்களை ஏமாற்ற நினைத்தால் அது நரி சாப்பிட முயன்ற திராட்சையாக மாறிவிடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

-ரஸ்மின் MISc
சூடு பிடித்துள்ள துருக்கிய ஜனாதிபதித் தேர்தல்: மீண்டும் அரியணை ஏறுவாரா சாதனை நாயகன் அர்துகான்?

சூடு பிடித்துள்ள துருக்கிய ஜனாதிபதித் தேர்தல்: மீண்டும் அரியணை ஏறுவாரா சாதனை நாயகன் அர்துகான்?

ஹஸன் இக்பால், யாழ்ப்பாணம் 
(மூலம்: Middle East Monitor)
துருக்கியில் ஜனாதிபதி தேர்தல்
மற்றும் பாராளுமன்ற தேர்தல்கள் உரிய காலத்திற்கு 16 மாதங்கள் முன்னதாக நடாத்தப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளன. இதன்படி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 24 ஆம் திகதி துருக்கியில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் துருக்கிய தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

அரசின் கூட்டணியும் வலதுசாரிக் கட்சியுமான தேசிய முன்னணி கட்சியின் தலைவர் தெவ்லத் பசீலியின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு, துருக்கிய ஜனாதிபதி ரஜப் தையிப் அர்துகான் ஜனாதிபதி தேர்தலை உரிய காலத்திற்கு முன்னதாக நடாத்த இணக்கம் தெரிவித்திருந்தமை சகலரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியிருந்தது. சமகாலத்தில் துருக்கி எதிர்நோக்கி வரும் சவால்கள் மற்றும் துருக்கிக்கு எதிராக சர்வதேச ஆதிக்க சக்திகள் குறிப்பாக அமெரிக்கா தீட்டி வரும் சதித் திட்டங்கள் என்பவற்றை வெற்றிகரமாக எதிர்நோக்குவதற்கு இவ்விரு கட்சிகளும் முன்னின்று உழைத்து வருகின்றன. இதில் அர்துகான் ஆதிக்க சக்திகளினால் இலக்கு வைக்கப்பட்டுள்ளார். 

துருக்கியானது நேட்டோவில் அங்கத்துவ நாடாகவும் மேற்குலகின் நட்பு நாடாகவும் இருந்து வரும் நிலையிலும் கூட அதற்கு எதிராக சதியாலோசனைகள் சர்வதேச ரீதியில் ஏன் தீட்டப்பட்டு வருகின்றன என்பதை புரிந்து கொள்வதற்கு 1924 இல் உஸ்மானிய கிலாபத் வீழ்ச்சியடைந்த காலகட்ட வரலாற்றை புரட்டியாக வேண்டும். 

உஸ்மானிய கிலாபத் வீழ்ச்சியும் மேற்குலகின் எழுச்சியும்:

முதலாம் உலகப் போரில் வெற்றி வாகை சூடிய நாடுகள் துருக்கியின் இஸ்லாமிய அடையாளங்களை களைந்து துருக்கியை மதச்சார்பற்ற நாடாக வெளிக்காட்டின. முஸ்லிம் நாடுகளின் கிலாபத்தாக விளங்கிய, 95 சதவீத ஸுன்னி முஸ்லிம்களை கொண்ட நாடான துருக்கியின் இஸ்லாமிய அடையாளங்களை பறித்து ஏனைய முஸ்லிம் நாடுகளுக்கு முன்மாதிரியாக மதச்சார்பற்ற நாடாக துருக்கி திகழ வேண்டும் என்பதையே மேற்குலக நாடுகள் விரும்பின.

மீண்டுமொரு முறை கிலாபத் தோன்றிவிடக் கூடாது என்பதில் மேற்குலக நாடுகள் கொண்டிருந்த கரிசனையே அதுவாகும்.

மேற்குலகின் கெடுநோக்கிற்கு துருக்கியின் அப்போதைய இராணுவத் தளபதியும் முதலாவது ஜனாதிபதியுமான முஸ்தபா கமால் அதாதுர்க் தனது மறைவுக் காலம் (1938) வரை ஒத்துழைப்பாக இருந்தார். அவருக்குப் பின்னர் வந்த அத்தனை ஜனாதிபதிகளும் இராணுவத்தில் இருந்து வந்தவர்கள். அவர்களும் இஸ்லாமிய அடையாளங்களைத் துறந்த, மேற்கிற்கு வால் பிடிக்கும் முஸ்தபா கமால் அதாதுர்க்கின் பாதையையே பின்பற்றினர். இஸ்லாமிய மாண்புகளைப் பேணும் எந்தவோர் அரசியல்வாதியும் தெரிவு செய்யப்படுவதற்கு மேற்குலக அனுமதிக்கவில்லை.

இந்நிலையில் பிரதமராகத் தெரிவான நக்மத்தின் அர்பகான் துருக்கியை இயக்கி வந்த மேற்குலக நாடுகளின் மறைகரங்களை அகற்ற முனைந்தார். துருக்கியை பொருளாதார ரீதியில் மேற்குலகை சாராத தன்னிறைவு மிக்க நாடாக இஸ்லாமிய அடிப்படைகளைக் கொண்டதாக மாற்றியமைக்க முயற்சித்தார். விழித்துக் கொண்ட மேற்குலக ஆதிக்க சக்திகள் நாட்டில் இராணுவப் புரட்சியை தோற்றுவித்து கட்சியைக் கலைத்து, பிரதமரை சிறையில் தள்ளுவதில் வெற்றி கண்டது. 

இவ்வகையில் முஸ்லிம்களின் கிலாபத்தாக முன்னர் விளங்கிய துருக்கியானது அதன் முன்னைய நிலைக்கு மீளவும் உருப்பெற்று விடக் கூடாது என்பதில் மேற்குலக மறைகரங்கள் கண்ணுங்கருத்துமாக இருந்து வந்தன. மேற்குலகுக்கு ஆதரவாக செயற்பட்ட முதலாவது துருக்கிய ஜனாதிபதி அதாதுர்க் காட்டிய வழியில் இருந்தும் மாற்றமாக செல்லும், இஸ்லாமிய அடிப்படைகளை நிறுவ முயற்சிக்கும் அரசியல் ஆதிக்கத்தை இராணுவ கவிழ்ப்பு மூலமாக அழித்து வருவதற்கு இராணுவத் தளபதிகளை மேற்குலகு நன்கு பயன்படுத்திக் கொண்டன. 

சாதனை நாயகன் அர்துகானின் சாதுரியம்:

இஸ்லாமிய அடிப்படைகளை நிறுவ முயன்ற முன்னாள் பிரதமர் அர்பகானின் கட்சியை அடியொட்டிய வகையில் 2002 இல் நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி (Justice and Development Party) அர்துகான் தலைமையில் தோற்றுவிக்கப்பட்டமை துருக்கிய அரசியலில் மாபெரும் மைல்கல்லாக அமைந்து போனது. அர்பகானின் பயிற்சிப் பாசறையில் வளர்ந்த பலர் ஆட்சி அதிகாரத்திற்கு தெரிவு செய்யப்பட்டனர். பொருளாதார ரீதியில் உலகில் 111 ஆவது நாடாக துருக்கி காணப்பட்ட நிலையில், ஊழல் மோசடிகள் என அரசின் அனைத்துப் பாகங்களும் உருக்குலைந்திருந்த காலகட்டத்தில் அவர்கள் ஆட்சி அதிகாரபீடமேறினர். 

நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி துருக்கியை உலகளவில் வேறொரு மட்டத்திற்கு எடுத்துச் சென்றது. பொருளாதார வல்லுநர்களின் எதிர்வுகூறல்களை பொய்ப்பிக்கும் வகையில் பொருளாதார துறையில் சர்வதேச ரீதியில் மாபெரும் அடைவுகளை நோக்கிப் பயணித்தது. பொருளாதார ரீதியில் உலகளவில் 16 ஆவது நிலைக்கும் ஐரோப்பாவில் 6 ஆவது நிலைக்கும் துருக்கி சடுதியில் முன்னேற்றம் கண்டது. முஸ்லிம் நாடுகளிலே துருக்கியின் பொருளாதாரம் முதல் நிலை அடைந்தது. உலக வங்கியில் கடன் பெற்ற முஸ்லிம் நாடுகள் துருக்கியிடம் கடன் பெறும் நிலைக்கு துருக்கிய பொருளாதாரம் உயர்வடைந்தது.


அத்தனைக்கும் முத்தாய்ப்பாக அமைந்தது எதுவெனில் நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி துருக்கிய அரசியலை தன்னிச்சையானதாக, ஸ்திரமானதாக மாற்றியமைத்தமையாகும். துருக்கிய அரசியலில் மேற்குலகின் மறைகரம் பிடுங்கப்பட்டது.

ஈராக் மீதான அமெரிக்காவின் அத்துமீறிய தாக்குதல்களின்போது துருக்கியின் நிலைப்பாடு அதன் அரசியல் ஸ்திரத்தன்மையை வெளிக்காட்ட போதுமானதாக இருந்தது. ஈராக் மீதான அமெரிக்க அத்துமீறலுக்கு வளைகுடா நாடுகள் தமது நிலப்பரப்பையும் வான் பரப்பையும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கூறி அமெரிக்காவுக்கு அடிபணிந்து நின்ற தருணத்தில் துருக்கிய வான்பரப்பை அமெரிக்காவுக்கு தாரை வார்க்க முடியாது என நெஞ்சுறுதியுடன் அறிவித்திருந்தமை துருக்கியின் துணிச்சலுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்திருந்தது. 


பொருளாதாரத்தில் வீறுநடை போடும் துருக்கி:

அரபு வசந்தத்தை கண்கூடாக கண்ட அரபுலக இளம் சமுதாயத்தினருக்கு துருக்கியானது இஸ்லாமிய முன்மாதிரி நாடாக தோற்றம் பெற்றது. அரபு நாடுகளின் மக்கள் தத்தமது நாடுகளிலும் இவர் போன்றதோர் ஆளுமை மிக்க தலைவர் தோன்றிவிட மாட்டாரா என ஏங்கும் அளவுக்கு துருக்கிய ஜனாதிபதி அர்துகான் அனைவரது உள்ளங்களிலும் தலைவர்களுக்கான வரைவிலக்கணமாக, உதாரண புருஷராக உருவெடுத்துள்ளார்.

இவ்வாறாக, இஸ்லாமிய நாடுகள் மீது செல்வாக்கையும் அரசியல் தலையீடுகளையும் மேற்கொண்டு வரும் மேற்குலக நாடுகளின் கெடுகனவுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வரும் அர்துகான் எனும் ஆளுமையை மேற்குலகு வெறுப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லைதான்.

அரபுலகில் ஸ்திரம் வாய்ந்ததும் ஜனநாயகம் மிகுந்ததுமான நாடாக துருக்கி விளங்கி வருவது மேற்குலகுக்கு அச்சத்தை தோற்றுவித்துள்ளது. மேற்குலகுடன் ஒத்துழைப்புடன் செயற்பட்டு வரும் ஏனைய அரபு நாடுகளும் துருக்கியைப் பின்பற்றி தன்னிச்சையான நாடாக மாறி விடுமோ என்பதிலும், நூற்றாண்டு காலமாக அரபுலகின் மீது ஆதிக்கம் செலுத்தி வரும் தமது மறைகரங்கள் தம்மை விட்டும் நீங்கி விடுமோ என்பதிலும் மேற்குலகு பெரிதும் கரிசனை கொண்டுள்ளது. இவ்வாறான தோற்றப்பாடு ஏற்படுவதற்கு மேற்குலகு ஒருபோதும் அனுமதிக்காது என்பது நிதர்சனம். 

அத்துடன், அரபு நாடுகளின் மன்னர்கள் (குறிப்பாக வளைகுடா) தமது அரியாசனங்கள் ஆட்டம் கண்டுவிடுமோ எனும் அச்சத்துடனேயே அப்போதும் இப்போதும் தடுமாறிக் கொண்டிருக்கின்றனர். இதன் காரணமாக அரபு வசந்தத்தை வலிந்து அடக்குவதற்கும் அர்துகானுக்கு எதிராக சூழ்ச்சிகளை வகுப்பதற்கும் அவர்கள் இயல்பாகவே தள்ளப்பட்டுள்ளனர்.

தோல்வியுற்ற ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிகள்:

அமெரிக்காவினதும் இஸ்ரேலினதும் அனுமதியுடனும் ஆசிகளுடனும் இயங்கி வரும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வசந்தங்களை ஒடுக்கும் மத்திய கேந்திர நிலையமாக தொழிற்பட்டு வருகின்றது. 2016 இல் துருக்கியில் அர்துகானுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தோல்வியுற்ற ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்கான சதித் திட்டங்கள் அனைத்தும் அமெரிக்காவின் அனுசரணையுடன் எமிரேட்ஸ்ஸிலேயே தீட்டப்பட்டன. குறித்த தோல்வியுற்ற ஆட்சிக் கவிழ்ப்புக்கு வித்திட்ட பத்துல்லாஹ் கூலன் அமெரிக்காவிலேயே அடைக்கலம் பெற்று வாழ்ந்து வருகின்றமை இதனை மேலும் விளக்குவதாக அமைந்துள்ளது. 

தோல்வியுற்ற ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்கு அடுத்தபடியாக எவ்வகையிலேனும் அர்துகானை பதவியிறக்கியாக வேண்டும் என்பதில் மேற்குலகு அதிசிரத்தை கொண்டு இயங்குகிறது. அதன் ஓரங்கமாகவே சிரிய எல்லையில் போராடி வரும் குர்திஷ் போராளிக் குழுக்களுக்கு அமெரிக்கா ஆயுத உதவிகளையும் எமிரேட்ஸ் நிதியுதவிகளையும் வழங்கி வருகின்றது.

குர்திஷ் படைகளின் முதன்மை இலக்கு தெற்கு துருக்கியை சுயாட்சி உடையதாக மாற்றி துருக்கியின் அரசியல் உறுதிப்பாட்டை நிலைகுலையச் செய்வதும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்குவதுமாகும். எனினும், அப்ரின் பிரதேசத்தில் அதிரடியாக ‘ஒலிவ் கிளை’ எனும் பெயரில் தாக்குதல் முன்னெடுப்புகளை மேற்கொண்டு வெற்றிகரமாக அச்சுறுத்தல்களை முறியடிப்பதில் அர்துகான் வெற்றி கண்டு அமெரிக்க சதிகளுக்கு சேற்றை வாரி இறைத்தார். 

மேலும் ஒரு படி மேலே சென்று மன்பிஜ், அப்யாத், கஸ்மலி போன்ற சிரிய பிரதேசங்களிலும் தாக்குதல்களை நிகழ்த்தி எதிர்காலத்தில் தமக்கு அச்சுறுத்தலாக விளங்கும் என்ற வகையில் தீவிரவாதக் குழுக்களை அழித்தொழித்தார் அர்துகான். இது அமெரிக்காவின் ஆணவத்துக்கு பெருத்த அடியாகிப் போனது. 

மேற்குலகுக்கு சவால் விடும் துருக்கியின் ஆயுத தளவாடங்கள்:

சிரிய புரட்சி மற்றும் நேட்டோ தனது ஏவுகணை முறியடிப்பு தொகுதியை துருக்கியிலிருந்து அகற்றிக் கொண்ட பின்னர் அர்துகான் அதிரடியாக ஒரு முன்னெடுப்பை மேற்கொண்டார். அதன் பலனாக இன்று துருக்கி தனது ஆயுத தளவாடங்களில் 65 சதவீதமானவற்றை மேற்குலகின் தரத்துக்கு நிகராக தாமே உற்பத்தி செய்து கொள்ளும் வல்லமையை பெற்றுள்ளன. நூற்றாண்டு காலமாக ஆயுத தளவாட தேவைப்பாடுகளுக்கு மேற்குலகை முற்றிலும் சார்ந்திருந்த நிலைப்பாட்டை தடாலடியாக மாற்றியமைத்த பெருமை அர்துகானையே சாரும். ஆயுத விற்பனையில் ஏகாதிபத்திய ருசியை சுவைத்துக் கொண்டிருந்த மேற்குலகுக்கு இந்நிலைப்பாடு பாரிய அதிர்ச்சியைக் கொடுக்காமலில்லை.

முன்னொரு காலத்தில் மேற்குலக அடிவருடியாக திகழ்ந்த முன்னாள் ஜனாதிபதி அதாதுர்க் மற்றும் அவரது வழிவந்த இராணுவ தளபதிகளின் கீழிருந்த துருக்கி வேறு, இன்று அர்துகானின் ஆட்சி வல்லமையில் மிளிரும் துருக்கி வேறு. ஏனைய அரபு நாடுகளைப் போன்று ஆதிக்க சக்திகளின் கைப்பொம்மையாக துருக்கியை அமெரிக்காவால் கட்டுக்குள் கொண்டு வர இயலாதுள்ளமை தெளிவு. எனினும், துருக்கியின் சுயாதீனத்தை தன் கடிவாளத்தின் கீழ் கொண்டு வரும் முயற்சிகளை அமெரிக்கா இன்னும் கைவிடவில்லை. துருக்கியின் அசைக்க முடியாத அரணாகத் திகழ்ந்து வரும் அர்துகானை துருக்கிய அரசியல் களத்திலிருந்து அகற்றாத வரை இது துளியளவும் சாத்தியமில்லை என்பதனை அமெரிக்கா நன்குணர்ந்து கொண்டுள்ளது. 

துருக்கியின் சுயாதீனமான, யாருக்கும் அடிபணியாத தன்மை மற்றும் அதற்கெதிரான சதித் திட்டங்களின் வெற்றிகரமான முறியடிப்புக்கள் என்பன அமெரிக்காவுக்கு பெருத்த ஏமாற்றங்களைக் கொடுத்துள்ள அதேவேளை புதுவிதமான தந்திரோபாயங்களை வகுப்பதற்கும் அமெரிக்கா முனைந்துள்ளது.

துருக்கியின் வளர்ச்சியும் அமெரிக்காவின் திருகுதாளங்களும்:

துருக்கியை முன்னைய காலங்களைப் போன்று சீர்குலைக்கும் நோக்குடன் களமிறங்கியுள்ள அமெரிக்கா துருக்கிய பொருளாதாரத்துடனும் நாணய மதிப்புடனும் போட்டியிட்டு வருகிறது. துருக்கியின் நாணய மதிப்பிறக்கதிற்கு மறைமுகமாக அமெரிக்கா பாரிய திட்டங்களை வகுத்து வருகின்றது.

அமெரிக்காவின் இத்திட்டங்களுக்கு நேரடியாக ஒத்துழைப்பு வழங்கி வரும் எமிரேட்ஸ், சவூதி, லெபனான் போன்ற நாடுகள் துருக்கியிலிருந்து விவசாய மற்றும் கைத்தொழில் உற்பத்திகளை இறக்குமதி செய்வதில் இருந்து பின்வாங்கியுள்ளன. ஜோர்தானும் அண்மையில் துருக்கியுடனான வர்த்தக உறவுகளை முறித்துக் கொண்டுள்ளது.

எனினும், துருக்கியின் பொருளாதார வளர்ச்சியை தடுத்து நிறுத்தும் அளவுக்கு அவை காத்திரமானதாக அமையவில்லை. ஆக, இறுதி முயற்சியாக தேர்தலில் அர்துகானையும் அவரது கட்சியான நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சியை தோல்வியுறச் செய்வதற்கு அந்நாடுகள் சதித் திட்டங்களை வகுத்து வருகின்றன.

தன்னிகரற்ற தலைவனுக்கு எதிராக கூட்டிணைந்துள்ள கயவர் கூட்டம்:

அமெரிக்கா மற்றும் அதனுடன் கூட்டிணைந்து செயற்படும் அரபு நாடுகள் எதிர்பார்க்கும் வகையில் தன்னிகரற்ற தலைவன் அர்துகானை ஜனாதிபதித் தேர்தலில் வீழ்த்தும் காத்திரமான வேட்பாளர் இதுவரை தோற்றம் பெறவில்லை என்று கூறினால் மிகையாகாது. நியாயமான தேர்தல் ஒன்றின் மூலம் அர்துகானை வீழ்த்துவது என்பது சாத்தியமானதல்ல.

தேர்தல் களத்தில் அர்துகானுக்கு குறிப்பிடத்தக்களவு போட்டித் தன்மையை ஏற்படுத்தக்கூடிய வல்லமையைக் கொண்டவர்கள் என கருதப்படும் முன்னாள் பிரதமர் அஹ்மத் தாவுதொக்ளு மற்றும் முன்னாள் ஜனாதிபதி அப்துல்லாஹ் குல் ஆகியோர்கள் கூட தாம் அர்துகானை எதிர்த்துப் போட்டியிடப் போவதில்லை என்றும், மாறாக அர்துகான் ஜனாதிபதியாக மீளவும் பதவியேற்பதையே தாம் விரும்புவதாகவும் பகிரங்க அறிவிப்பு விடுத்துள்ளனர். 


சவூதி மற்றும் எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகள் அவர்களுக்கு நிதியுதவிகள் வழங்கி அர்துகானுக்கு எதிராகப் போட்டியிடுமாறு வலியுறுத்திக் கேட்டுக் கொண்டும் கூட அவர்கள் அம்முன்மொழிவை ஏற்க மறுத்து அர்துகானுக்கு சார்பான அறிக்கையையே விடுத்துள்ளனர். இதன் மூலம் அர்துகானுக்கு எதிரான சக்திகளின் முகத்தில் கரி பூசப்பட்டுள்ளது என்பது வெளிப்படையான அவமானமாகும்.

அர்துகானின் தன்னம்பிக்கையில் மிரண்டு போயுள்ள மேற்குலகு:

இஸ்லாமிய அடிப்படைகளுடன் பெருமளவுக்கு ஒத்துப் போகும் அல்லது இஸ்லாமிய சார்புக் கொள்கைகளுடன் வெற்றிகரமாக துருக்கியை வழிநடாத்தி வரும் அர்துகான் மீதான காழ்ப்புணர்வுகள் மேற்குலகில் அதிகரித்து வருகின்றன என்பது தெளிவு. மீண்டுமொரு முறை இஸ்லாமிய நாடுகளை வழிநடாத்தும் கிலாபத் பொறுப்பை துருக்கி மீண்டும் கைப்பற்றிவிடக் கூடாது என்பதில் அரபு நாடுகளும் மேற்குலகும் காத்திரமாக உழைத்து வருகின்றன.

ஸுன்னி முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் இஸ்லாமிய நாடொன்று முன்னேற்றகர பாதையில் பயணிப்பதை அமெரிக்கா ஒருபோதும் விரும்பாது. ஸுன்னி பெரும்பான்மை நாடுகள் மீதான அமெரிக்காவின் யுத்தங்கள் அனைத்தும் உலகளாவிய இஸ்லாமிய தலைமைத்துவம் ஒன்று உருவாகிவிடக் கூடாது என்று எண்ணிய அரபு நாடுகளின் ஆதரவில் இடம்பெற்றவை என்பது கசப்பான உண்மையாகும். ‘தீவிரவாதத்துக்கு எதிரான யுத்தம்’ எனும் போர்வையில் நிகழ்த்தப்பட்டவை உண்மையில் ‘இஸ்லாத்திற்கு எதிரான யுத்தமே’ ஆகும். 

தனது பதவிக்காலம் முடிவடைய இன்னும் 16 மாதங்கள் மீதமிருக்கின்ற நிலையில் அதனைக் கருத்திற் கொள்ளாது மீண்டும் ஜனாதிபதித் தேர்தல்களில் போட்டியிடுகிறார் என்பது அர்துகான் தன் மக்கள் மீது கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கை, தன்னால் ஆற்றப்பட்டுள்ள சேவைகள், அடைவுகள் மீதுள்ள தன்னம்பிக்கை என்பவற்றை உலகுக்கு வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது.
நன்றி: நவமணி
கத்தாரைத் தனி தீவாக்கும் சவூதியின் புதிய திட்டத்தின் அப்டேட்!

கத்தாரைத் தனி தீவாக்கும் சவூதியின் புதிய திட்டத்தின் அப்டேட்!

சவூதி அரேபியா நாட்டின் அண்டை நாடான கத்தாரை ஒரு கால்வாயைத் திறப்பதன் மூலம் தனிமைப்படுத்துவதற்கு சவூதி அரேபியா திட்டங்களை முன்னெடுத்துச் செல்கிறது. (இது தொடர்பான பதிவே ஏற்கன நாம் இட்டு இருந்தோம்) தீபகற்பமாக இருக்கின்ற ஒரு நாட்டை இடையே கால்வாயைத் தோண்டி அதனை தனிமைப்படுத்த எண்ணுவது உலக அரங்கிலும் மத்திய கிழக்கிலும் சில கருத்தாடல்களைத் தோற்றுவித்துள்ளது. இது மிகவும் விவாதிக்கப்பட வேண்டிய மற்றும் மத்திய கிழக்கில் பேசு பொருளாகியுள்ள ஒரு விடயமாகும்.

ஜூன் மாதம் 25 ம் திகதி செவ்வாயன்று சவூதியின் தலை நகரான ரியாதில் நடைபெற்ற மாநாட்டில் "சல்வா கால்வாய்" திட்டத்திற்கான முயற்சிகளுக்கான தினம் அறிவிக்கப்படும் என்று சவூதி அரசு அறிவித்துள்ளது. இது கத்தார் நாட்டிலிருந்து 60 கிமீ நீளத்தையும் 200 மீற்றர் அகலத்தையும் கொண்டிருக்கும்.

ஐந்து புகழ்பெற்ற கால்வாய் தோண்டும் நிறுவனங்கள் ஏற்கனவே இத்திட்டத்திற்கு போட்டியிட அழைக்கப்பட்டன. இந்த திட்டத்தின் வெற்றியாளர் 90 நாட்களுக்கு பிறகு அறிவிக்கப்படுவர் எனவும் இக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து தனியார் முதலீட்டாளர்களால் முழுமையாக ($ 750 மில்லியன்) நிதியளிக்கப்படக்கூடிய 60 கிலோமீட்டர் (37.5 மைல்) நீளமும் 200 மீட்டர் (219 yards) அகலமும் இந்த சல்வா கால்வாய் திட்டம் கொண்டிருக்கும். எகிப்திய நிறுவனங்கள் சுயேஸ் கால்வாய் விரிவடைந்தது பற்றிய அறிவைப் பயன்படுத்தி இந்த திட்டத்தை செயற்படுத்தும்.

இந்தத் திட்டம் சவுதி அரேபிய தளத்தையும், கால்வாயின் Qatari பக்கத்தில் அணுசக்தி கழிவுகளையும் நிறுவ திட்டமிட்டுள்ளது.

சவுதி அரேபியாவிற்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் உள்ள தொடர்பை கத்தாரிலிருந்து முற்றாக இல்லாது செய்து தனிமைப்படுத்த முயல்கின்ற ஒரு வழிவகையாக இந்த நியாயமற்ற நடவடிக்கை பரந்த அளவில் கண்டனம் செய்யப்பட்டுள்ளது.

ஜூன் 5, 2017 ல், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து மற்றும் பஹ்ரைன் நாடுகள் கத்தார் அரசின் மீது பயங்கரவாதத்தை ஆதரிப்பதற்காக குற்றம் சாட்டி, பொதுவாக ஈரானுடன் நட்புறவைப் பேணி வருவதாக கத்தார் மீது சட்டவிரோதமாக தடை விதித்தது. அதன் பிறகு சவூதி கத்தாருக்கான அதன் ஒரே எல்லையையும் நிரந்தரமாக மூடியது.

Monday, 18 June 2018

புத்தளம் நாசமாகிறது!!! ஆண், பெண் கலப்பு, கூத்து, கும்மாளம், இசை, நடனம் என்பன போன்ற அனைத்து பித்னாக்களும் அரங்கேறுகின்றன.

புத்தளம் நாசமாகிறது!!! ஆண், பெண் கலப்பு, கூத்து, கும்மாளம், இசை, நடனம் என்பன போன்ற அனைத்து பித்னாக்களும் அரங்கேறுகின்றன.

ஆண், பெண் கலப்பு, கூத்து, கும்மாளம், இசை, நடனம் என்பன போன்ற அனைத்து பித்னாக்களும் அரங்கேறுகின்றன.

அனைவரும்(99%) நமது முஸ்லிம்கள்.

புத்தளத்தில் தான் தப்லீக், தௌஹீத், இக்வான், ஜமாஅதுல் இஸ்லாம் அனைத்தும் செறிந்து பரவலாக வியாபித்திருக்கின்றன, மிக முக்கியமாக நேற்று #போதை_ஒழிப்புத்தினமாக பிரகடணம் செய்த புத்தளம் ஜம்இய்யதுல் உலமா, புத்தளம் பெரிய பள்ளிவாயல், ஜமாஅதுல் இஸ்லாம் இவ்வனாச்சாரக் கச்சேரியைக் கண்டும் இடமளித்து மௌனித்திருப்பது ஏன்???

நம் நகரத்தை பாழ்படுத்தி, இஸ்லாத்தை குழி தோன்றி புதைத்து, அன்னியவர்களால் எமது பெண்கள் ரசிக்கப்பட்டு சிலபோது அவர்களது கற்புக்கு குந்தகம் விளைவிக்கும் சம்பவங்களும் ஏற்படலாம்! அல்லாஹ் பாதுகாப்பானாக

ஒரு மாத காலம் பக்குவத்துடன் நோன்பு நோற்று இராக் காலங்களில் நின்று வணங்கி இறைவனை நெருங்கிய எமது நன்மைகள் ஒரு சில வினாடிகளில் பறிபோகும் காட்சிகளே இவை! இவை உண்மையில் ரமழானை வணங்கினோமா அல்லது அல்லாஹ்வை வணங்கினோமா என்பதை பறைசாற்றும் அனாச்சாரங்கள்!!!

அதிகாரமுள்ள புத்தளம் நகரபிதா கௌரவ K.A. பாயிஸ், மற்றும் புத்தளம் பெரிய பள்ளிவாயல் இவற்றை முறையாக வரையறுகளுக்குட்பட்டவாறு ஏற்பாடு செய்யலாமே! அல்லது அனாச்சாரங்கள் அரங்கேறாமல் இவற்றைத் தடுக்கலாமே!

பொறுப்பாளர்கள், தங்களது பொறுப்பைப் பற்றி மறுமையில் விசாரிக்கப்படுவதை சற்று பயந்து செயற்படுவது காலத்தின் தேவையாகும்.

இஸ்லாமே எமது உயிர் நாடி என்று மூச்சுக்கு பல விடுத்தம் பேசு உங்களது வகிபாகம் எங்கே!!!

களியாட்டத்தை இஸ்லாம் தடைசெய்யவில்லை, ஆனால் அவை அதன் வரையறைகளுக்கு உட்பட்டிருத்தல் வேண்டும்

குறிப்பு: அவ்வழியில் போகும் போது பிடித்தவை

நட்புடன்
அ(z)ஸ்ஹான் ஹனீபா
17/06/2018

Monday, 11 June 2018

 ஒலுவில் -  தென் கிழக்குப் பல்கலைக்கழகத்திலிருந்து, ஒரு மாணவியின் குமுறல்!

ஒலுவில் - தென் கிழக்குப் பல்கலைக்கழகத்திலிருந்து, ஒரு மாணவியின் குமுறல்!

ஓரிரு நாட்களாக தென்கிழக்குப் பல்கலைக்கழகம் பற்றிய செய்தியொன்று நாடு பூராகவும் நகர்வலம் வந்து கொண்டிருக்கிறது. ஒரு தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மாணவியாக இருந்து கொண்டு அந்த செய்தியை வாசிக்க நேர்ந்த போது, அடுத்து என்ன செய்யலாம் என்கிற சிந்தனை கூட எழாத அளவுக்கு ஒழுக்கவீனமாக இருந்தது அந்தக் குற்ற அறிக்கை. இறைவனின் நாட்டம், இறைவன் எங்களை சோதிக்கிறான். நிச்சயமாக, அவன் நேசிப்பவர்களையே சோதனைக்குள் ஆட்படுத்துவான். அவனுக்கே எல்லாப் புகழும்.

இலங்கையின் அரச பல்கலைக்கழக வரிசைகளில் தென்கிழக்குப் பல்கலைக்கழகம் பின்னால் நிற்கிறது; பின்தங்கி நிற்கிறது; இனத் துவேஷம் காட்டுகிறது; முஸ்லிம்களுக்கு பக்கசார்பும் பாரபட்சமும் காட்டுகிறது; மாணவ உரிமைகளை அத்துமீறுகிறது என்று பல நாட்களாகவே குற்றச்சாட்டுக்களையும் குறைகளையும் திணித்துக் கொண்டிருக்கிறது இந்த சமுகம். பரவாயில்லை. அவர்கள் பார்வையில் அது அப்படியே இருந்து விட்டுப் போகட்டும். புதிதாக தென்கிழக்கின் விரிவுரையாளர்கள் மீதும் மாணவிகள் மீதும் அவதூறையும் குற்றச்சாட்டையும் அமைச்சர் ஒருவர் திணித்ததன் பின், இனியும், நாங்கள் நாக்கறுக்கப் பட்டவர்களாக இருக்க வேண்டுமானால், உண்மையில் அந்த அவதூறுகளுக்கு பதிலாக எங்கள் நாக்களை அறுத்து விட்டே போயிருக்கலாம்.

"ஒலுவில் பல்கலையில் மாணவிகள், சில பாடங்களுக்கு பாலியல் லஞ்சங்களை வழங்காவிட்டால், அப்பாடங்களில் அவர்களால் சித்தியடைய முடியாது…"
என ஆரம்பிக்கிற அந்த அறிக்கைக்கு தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவிகள் சார்பாக என்னிடம் ஒரேயொரு கேள்வி இருக்கின்றது.

இந்தக் குற்ற அறிக்கையின் பின்னராக, நீங்கள் எங்கள் பல்கலைக்கழக மாணவிகளுக் தேடித் தரப்போவதும் நாடுவதும் என்ன, நியாயங்களையா…?
அல்லது அவமானங்களையும் தலைகுனிவுகளையுமா…?

என் தரப்பில் கூறப்போனால், ஒட்டு மொத்த முட்டாள்தனத்தின் உச்சகட்ட அறிக்கையாகவே இதனை நான் பார்க்கிறேன். என்றோ ஒரு நாள், யாரோ ஒரு விரிவுரையாளரால், ஒரு பாடம் தொடர்பாக ஒரு சகோதரியிடம் பாலியல் லஞ்சம் கேட்கப் பட்டது நாமறிந்த விடயமேயாகும். ஆனாலும், ஆறேழு மாதங்களுக்குப் பின்னராகவே இது பற்றி நினைவு தெரிந்த அவ்வமைச்சருக்கு சில அறிக்கைகளை நாங்கள் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது.

எம் பல்கலைக்கழகத்தில் கடந்த வருடமே அதற்கான ஆர்ப்பாட்டமும் முறைப்பாடுகளும் அன்றிருந்த யூனியன் மற்றும் மஜ்லிஷ் மூலமாக முன்வக்கப் பட்டு தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன, அதற்கான விசாரணைகள் தொடர்கிறதாகவும் தகவல்கள் தெரிய வந்தன. அதற்கான ஆர்ப்பாட்டப் பேரணியின் போது, ஒவ்வொரு தனி மாணவிகளுமே குறித்த சகோதரிக்கு நடந்த அத்துமீறலைத் தனக்கு நடந்தது போல் கருத்திற் கொண்டு முழுமூச்சாக கோஷம் எழுப்பிய உண்மைகளையும் நினைவு படுத்துகிறோம். கூடவே, சகோதர ஆண் மாணவர்களும் எங்களுக்காக வழங்கிய ஆதரவுகளையும் உரிமைக் குரல்களையும் மறக்கவும் முடியாது.

'வேண்டாம்… வேண்டாம்…
வேண்டாம்… வேண்டாம்…
தன்மானம் காக்காத கல்வி வேண்டாம்…'
என, தொண்டைத் தண்ணீர் வற்ற வற்ற, கூவிய கூவல்களில் என் குரலும் இருந்தது என்பதாலேயே இதனை உறுதிப் படுத்துகிறேன். ஆர்ப்பாட்டத்தில் அன்று பேரணியுடன் கால் கடுக்க சுடும் பாதையில் நடந்தாலும் உரிமைக் குரலுக்குக் கிடைத்த நிம்மதியை, ஒரே நிமிடத்தில் இழுத்து அறைந்தது இந்தக் குற்ற அறிக்கை. வேதனை என்னவென்றால், தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவிகளாகிய எம்மிடமே இச்செய்தி உண்மையா, பொய்யா எனப் பலராலும் முகத்திலடித்தாற் போல் வினவப்படுவதுதான்.
அல்லாஹு அக்பர்.

இவற்றையெல்லாம் நோக்கும் போது, சில சம்பவங்களை நினைவு படுத்தி சிந்திக்கச் சொல்லக் கடமைப் படுகிறேன். ஜம்மு காஷ்மீரில் ஒரு ஆஷிஃபா கொல்லப் பட்டாள், 

வடக்கில் ஒரு வித்யா கொல்லப் பட்டாள். டெல்லியில் மருத்துவ மாணவியும் கொல்லப் பட்டாள். சிறுமி சேயாவும் கொல்லப் பட்டாள். இன்னும் பல பொது இடங்களிலும் வேலைத் தளங்களிலும் பாலியல் லஞ்சங்கள் கேட்கப் படத்தான் செய்கின்றன. மத அனுட்டானத் தலங்கள் மதிப்பிழக்கும் படி மனிதர்கள் நடக்கத்தான் செய்கிறார்கள். அதற்காக, ஏனையவர்கள் மீதும், ஒட்டு மொத்த நிர்வாகத்தின் மீதும் நின்று கொண்டு சம்பவ இடங்களை விமர்சிப்பதும் குற்றம் சாட்டுவதும் உகந்ததாகப் படவில்லை. ஒரு நாள் தென்கிழக்கில் நடந்த அசாதாரண சம்பவத்துக்காக, இன்றைய நாட்களில், மொத்த மாணவிகளையும் விரிவுரையாளர்களையும் விரல் நீட்டிக் குற்றம் சுமத்துவது ஏற்றுக் கொள்ள முடியாததுவே.

நாளை நாங்கள் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியாகி, பல இடங்களுக்கும் வேலைக்குப் போக வேண்டியிருக்கிறது. திருமணம் முடித்து, சமுகத்தில் பல பெண் கதாபாத்திரங்களை ஏற்று வாழ வேண்டி இருக்கிறது. பட்டதாரி என்ற ரீதியில், சமுகத்துக்குத் தலைகாட்டி வழிகாட்ட வேண்டியிருக்கிறது. இந்த நிலையில், தென்கிழக்குப் பலகலைக்கழக மாணவிகளின் நிலை இதுதான் என எம்மையும் எம் ஒழுக்கத்தையும் பல்கலைக்கழகத்தையும் தலைகுனியச் செய்ததில் குறித்த அமைச்சர் கொஞ்சம் சிந்தித்து செயற்பட்டிருக்கலாம். 

எதையும் உண்மைப்படுத்திய பின்னரேயே அது தொடர்பான அறிக்கையை வெளியிட வேண்டுமென்கிற சாதாரண விடயத்தைக் கூட புத்திக்குள் உணராத அமைச்சர், சம்பவ இடத்தில் இவ்விடயம் தொடர்பாக வேறு முறையில் அணுகியிருக்கலாம்; வேறு நல்ல விதமாக விளக்கியிருக்கலாம்.

எது எவ்வாறிருப்பினும், எம் மாணவிகளதும் கண்ணியமாய் நடந்து கொள்ளக் கூடிய விரிவுரையாளர்களதும் மற்றும் பல்கலைக்கழகத்தினதும் நற்பெயருக்கு 
பங்கம் ஏற்படும் வகையில் தெரிவிக்கப்பட்ட கருத்திற்காக எதிர்காலத்தில் வன்மையாக எதிர்ப்புத் தெரிவிப்போம் என்பதை தெரிவிக்கிறோம். ஆசிரியம் மற்றும் பெண்கள் விடயத்தில் குறைகளை ஏற்படுத்துபவர்கள் இதன் மூலம் படிப்பினைகள் பெற வேண்டும் என்பதையும் கருத்தி்ற் கொள்வோம்.

இன்ஷா அல்லாஹ்…

ஒலுவில் பல்கலையில் இருந்து,
ஒவ்வொரு மாணவி சார்பாகவும்…
ஒழுக்கத்தை நேசிப்பவளாகவும்…