Friday, 4 October 2019

ஓராண்டு கடந்தும் கிட்டாத நீதி! - சவூதிய பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி

பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொலை செய்யப்பட்டு நேற்றுமுன்தினம் (ஒக்டோபர் 2) ஓராண்டாகிறது. தனிமனிதர்கள் சிலரின் மரணங்கள் சர்வதேச அளவில் தலைப்புச் செய்தி ஆகி இருக்கின்றன, வரலாற்றில் பெரும் தாக்கத்தை உண்டாக்கி இருக்கின்றன,நாடுகளிடையேயான உறவுகளை மாற்றி அமைத்திருக்கின்றன. கஷோக்ஜி மரணமும் அப்படியான மரணம்தான்!

கடந்தாண்டு ஒக்ேடாபர் 2ம் திகதி ஜமால் இஸ்தான்புலில் உள்ள சவூதி தூதரகத்தில் கொல்லப்பட்டார்.சவூதி அரேபியாவைச் சேர்ந்த பிரபலமான பத்திரிகையாளர் அவர்.

முஸ்லிம்களின் புனித நகரமான மதீனாவில் 1958ஆம் ஆண்டு பிறந்தவர் ஜமால். அமெரிக்காவில் உள்ள இந்தியானா பல்கலைக்கழகத்தில் வணிகத்துறை பயின்றவர்.

வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளை ஒரு பத்திரிகையாளராக கஷோக்ஜி பதிவு செய்திருக்கிறார். குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்ட மாற்றங்களை, போர்களை, பிரச்சினைகளை அவர் வெளிப்படையாகவே எழுதி வந்தார்.சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தானுக்குள் ஊடுருவியது முதல் அல்_கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடனின் எழுச்சி வரை பல சம்பவங்களை பதிவு

செய்தவர் கஷோக்ஜி.1980_- 90ஆகிய காலகட்டங்களில் பல முறை இவர் ஒசாமாவை நேர்காணல் கண்டிருக்கிறார்.

கட்டார் அரசின் ஆதரவில் இயங்கும் 'அல் ஜசீரா'வுக்கு எதிராக சவூதி ஆதரவில் 'அல் அரப்' தொலைக்காட்சி 2012ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட போது, அதன் தலைமை பொறுப்பை இவர் ஏற்றார்.ஆனால், 2015ஆம் ஆண்டு பஹ்ரைனில் ஒளிபரப்பைத் தொடங்கிய 24மணி நேரத்திலேயே தன் ஒளிபரப்பை நிறுத்தியது அந்தத் தொலைக்காட்சி.

சவூதியின் விவகாரங்கள் குறித்து காத்திரமாக எழுதும் செய்தியாளராக பார்க்கப்பட்டார் ஜமால்.

ஒரு பத்திரிகையாளராக மட்டும் கசோக்ஜி இருக்கவில்லை. பல தசாப்தங்களாக சவூதி அரச குடும்பத்திற்கு நெருக்கமானவராக ஜமால் கஷோக்ஜி இருந்திருக்கிறார். அவர்களின் ஆலோசகராகவும் செயலாற்றி இருக்கிறார்.

2017ஆம் ஆண்டு சவூதி அரச குடும்பத்துக்கும் கஷோக்ஜிக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டது. அவர் சவூதியை கடுமையாக விமர்சித்தார். அதன் முடிக்குரிய இளவரசரை ரஷ்ய ஜனாதிபதி புட்டினுடன் ஒப்பிட்டார். அதற்கு பின்பு அவர் அங்கிருந்து அமெரிக்கா சென்றார்.

இளவரசர் முஹம்மதை விமர்சித்து 'வாஷிங்டன் போஸ்ட்' இதழில் கஷோக்ஜி தொடர்ந்து கட்டுரைகள் எழுதினார்.'வாஷிங்டன் போஸ்டில்' தாம் எழுதிய முதல் கட்டுரையில், சவூதியில் இருந்தால் தாம் கைது செய்யப்படலாம் என்று குறிப்பிட்டு இருந்தார்.

துருக்கியைச் சேர்ந்த ஹெடிஸ் செஞ்சிஸ் என்ற பெண்ணை திருமணம் செய்ய ஜமால் கஷோக்ஜி திட்டமிட்டிருந்தார். அதற்கு கஷோக்ஜியின் முதல் திருமணத்தின் மணமுறிவு சான்றிதழ் அவசியம்.

இதனைப் பெறவே இஸ்தான்புலில் உள்ள சவூதி அரேபிய தூதரகத்திற்குச் சென்றார் ஜமால்.

முதலில் செப்டம்பர் 28ஆம் திகதி சென்ற அவரை ஒக்டோபர் 2ஆம் திகதி வந்து சான்றிதழைப் பெற்றுக் கொள்ள வலியுறுத்தினர் அதிகாரிகள்.

ஒக்டோபர் 2ஆம் திகதி சென்ற அவர் அதன் பின்னர் மீண்டும் வீடு திரும்பவே இல்லை.சவூதி தூதுரகம் செல்லும் போது இரண்டு தொலைபேசிகளை ஹெடிஸ் செஞ்சிஸிடம் கொடுத்து, ஒரு வேளை நான் திரும்பவரவில்லை என்றால் துருக்கி ஜனாதிபதி எர்துவானின் ஆலோசகருக்கு அழைக்கச் சொல்லி இருக்கிறார்.

சுமார் 10மணி நேரம் தூதரக வாசலிலேயே காத்திருந்திருக்கிறார் ஹெடிஸ் செஞ்சிஸ். பத்திரிகையாளர் கஷோக்ஜி காணாமல் போனதாக தகவல்கள் வெளியான உடனே துருக்கி ஜனாதிபதி ரிசெப் தாயிப் எர்துவான் சவூதியை குற்றஞ்சாட்டினார்.கஷோக்ஜி கொல்லப்படுவதற்கு சில தினங்களுக்கு முன்பு பதினைந்து சவூதி உளவாளிகள் இஸ்தான்புல்லுக்கு வந்ததாகவும்,

அவர்கள் தூதரகத்திற்கு வெளியே இருந்த கமராக்களை அப்புறப்படுத்தியதாகவும் துருக்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

தூதரகத்திற்குச் சென்ற சில நிமிடங்களிலேயே கஷோக்ஜி மூச்சுத் திணறலுக்கு உள்ளாகி இருக்கிறார். அவரது உடல் அழிக்கப்பட்டு இருக்கிறதென விசாரணை அதிகாரி இர்ஃபான் கடந்தாண்டு ஒக்டோபர் 31ஆம் திகதி கூறினார்.

பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொலை பல நாட்களுக்கு முன்னதாவே திட்டமிடப்பட்ட ஒன்று என ஆளுங்கட்சியின் எம்.பிக்களிடம் துருக்கி ஜனாதிபதி ரிசெப் தாயிப் எர்துவான் கூறினார். இஸ்தான்புல்லில் உள்ள சவூதி தூதரகத்தில் ஒக்டோபர் 2ஆம் திகதியன்று, அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டதற்கான வலுவான ஆதாரங்கள் இருப்பதாவும் அவர் தெரிவித்து இருந்தார்.

கஷோக்ஜியின் உடல் எங்கே? அவரை கொலை செய்ய யார் உத்தரவிட்டது? போன்ற கேள்விகளுக்கு சவூதி அரேபியா பதிலளிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி எர்துவான் வலியுறுத்தி இருந்தார்.

முதல் இரண்டு வாரங்களுக்கு சவூதி தொடர்ந்து தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து வந்தது.

அந்தச் சமயத்தில் 'ப்ளூம்பெர்க்' ஊடகத்திடம் சவூதி முடி இளவரசர் முகம்மது பின் சல்மான், கஷோக்ஜி சில மணித் துளிகளிலேயே தூதரகத்தை விட்டு வெளியேறியதாகக் கூறி இருந்தார்.

"எங்களிடம் மறைக்க எதுவும் இல்லை" என்றும் அவர் கூறி இருந்தார்.

ஆனால், இரண்டு வாரங்களுக்குப் பின்னர் சவூதியின் நிலைப்பாடு மாறியது. முதற்கட்ட விசாரணையில் சவூதி அதிகாரிகளுடன் நடந்த சண்டையில் அவர் இறந்ததாகக் கூறியது.

2018ஆம் ஆண்டு நவம்பர் 15ஆம் திகதி சவூதி விசாரணை அதிகாரி ஷலான் பின் ராஜிஹ் அளித்த பேட்டியில், "கஷோக்ஜியை மீண்டும் சவூதிக்கு அழைத்து வரும் முயற்சியில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்" என்றார். "அளவுக்கு அதிகமான மயக்க மருத்து கஷோக்ஜிக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாகவே அவர் மரணித்து இருக்கிறார்" என்றும் அவர் கூறினார்.

ஆனால், இந்தக் கொலை குறித்து முடிக்குரிய இளவரசர் முகம்மது பின் சல்மானுக்கு எதுவும் தெரியாது என்றும் அவர் கூறி இருந்தார்.

கடந்தாண்டு ரியாத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய விசாரணை அதிகாரி ஷலான் பின் ராஜிஹ், "கஷோக்ஜி மரணம் தொடர்பாக 11பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதுடன், அதில் ஐந்து பேருக்கு மரண தண்டனை வழங்குவதற்கும் கோரிக்கை விடுக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது" என்றார். இப்படியான சூழ்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியான பேட்டி ஒன்றில் சல்மான், "சவூதி அரேபியாவின் தலைவராக இந்த விவாகரத்தில் நான் முழுப்பொறுப்பேற்கிறேன். குறிப்பாக சவூதி அரசுக்காக வேலை பார்க்கும் சில தனிநபர்கள் இந்தக் கொலையில் சம்பந்தப்பட்டிருப்பதால் நான் பொறுப்பேற்கிறேன்" என்றார்.

ஆனால் கஷோக்ஜியை கொலை செய்ய உத்தரவிட்டதாகவும், கஷோக்ஜி கொலை செய்யப்படுவது குறித்து ஏற்கனவே தனக்கு தெரியும் எனவும் கூறப்படும் குற்றச்சாட்டுகளை மறுப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதேவேளை கஷோக்ஜி கொலை தொடர்பாக 11பேரை ரியாத் நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

மூடப்பட்ட அறைகளில் இரகசியமாக இந்த விசாரணை நடப்பதால், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் யார் என்பது தெரியவில்லை. ஐ.நா சபை ஒக்னஸ் தலைமையிலான சிறப்புக் குழுவை கொண்டு கஷோக்ஜி கொலை தொடர்பாக விசாரித்தது. அவர் அளித்த அறிக்கையில் சவூதி அரேபியாதான் கஷோக்ஜி கொலைக்கு காரணமென குற்றஞ்சாட்டி இருந்தார். மேலும், இந்தக் கொலை தொடர்பாக முகம்மது பின் சல்மானையும், சவூதி உயர் அதிகாரிகளையும் விசாரிப்பதற்கான ஆதாரம் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இம்மாதிரியான சம்பவங்கள் அடிக்கடி நேரும் என்று அச்சப்படுவதாகவும், மேலும் இது 'வழக்கமான ஒன்றாக மாறிவிடும்' என்று அஞ்சுவதாகவும் ஐ.நா பொது செயலாளர் அண்டான்யு குட்டாரிஷ் அந்தச் சமயத்தில் தெரிவித்திருந்தார். இம்மாதிரியான சம்பவங்கள் அதிகரிக்கும் பட்சத்தில் சர்வதேச நாடுகள் இம்மாதிரியான சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்" என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

கஷோக்ஜி கொலையை சவூதி அரேபியாவுடன் இணக்கமாக இருந்த உலக நாடுகளே கண்டித்தன.

ஜமால் கஷோக்ஜியின் கொலைக்கு சவூதி பட்டத்து இளவரசரை குறை கூறி அமெரிக்க செனட் தீர்மானமே நிறைவேற்றியது. ஆனால், எந்த நாடும் அதற்கு மேல் பெரிதாக நடவடிக்கை எடுக்கவில்லை. அதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது சவூதிக்கும் பிற நாடுகளுக்கும் இடையே இருக்கும் வணிகத் தொடர்பு. அமெரிக்காவுடன் 110பில்லியன் ​டொலர் மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்தை சவூதி கையொப்பமிட்டு இருந்தது. பத்து ஆண்டுகளில் 350பில்லியன் ​டொலர்கள் அளவுக்கு இது உயரும் என்றும் கணிக்கப்பட்டது. சவூதிக்கு ஆயுத ஏற்றுமதி செய்யும் நாடுகளாக பிரிட்டன், பிரான்ஸ், மற்றும் ஜெர்மனி உள்ளன.

ட்ரம்பின் ஆலோசகரும், மருமகனுமான ஜரேத் குஷ்னர், சவூதி பட்டத்து இளவரசருடன் தொடர்ந்து நெருக்கமான உறவு கொண்டிருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

உலகில் எத்தனையோ கொலைகளுக்கான மர்மம் இன்னும் துலங்கவில்லை. அது போன்றதே இந்த மரணமும்!

Author: verified_user

0 comments: