Saturday, 18 May 2019

பயங்கரவாதிகளின் நோக்கங்களுக்கு இடம்கொடுக்க வேண்டாம்! மைத்திரி விடுத்துள்ள வேண்டுகோள்

இன ரீதியில் பிரிந்து ஒருவருக்கொருவர் முரண்பாடுகளை ஏற்படுத்திக்கொள்வதன் ஊடாகவே பயங்கரவாதிகளின் குறிக்கோள்கள் நிறைவேற்றப்படுகின்றன. எனவே இன ரீதியில் பிரிந்து பயங்கரவாதிகளின் குறிக்கோள்களை நிறைவேற்றிக்கொள்ள இடமளிக்க வேண்டாமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்று (17) முற்பகல் காலி, ஹிக்கடுவ, தொடகமுவ புராண ரத்பத் ரஜமகா விகாரையில் இடம்பெற்ற அரச வெசாக் வைபவத்தில் கலந்துகொண்ட போது அங்கு பேசிய அவர்,

கடந்த 21ஆம் திகதி நடந்த பயங்கரவாத தாக்குதல் எமது நாட்டுக்கு மட்டுமான பிரச்சினையல்ல. அது சர்வதேச பிரச்சினையாகும். எமது நாட்டுக்குரிய பிரச்சினையாக கருதி செயற்படுவோமேயானால் அதனூடாக எமது நாடுஅசௌகரியங்களை எதிர்நோக்கும்.

எத்தகைய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட போதிலும் ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலின் பின்னர் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்காகவும் அத்தாக்குதலின் பின்னர் மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்காகவும் மேற்கொள்ள வேண்டிய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

உண்மை மிக மெதுவாக பரவுகின்ற போதிலும் பொய் துரிதமாக பரவுகின்றது. எத்தகைய சவால்களுக்கு மத்தியிலும் பயங்கரவாதத்தை நாட்டிலிருந்து முற்றாக ஒழிப்பதற்காக அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

சமத்துவம். சமூக நீதி மற்றும் சகல உயிரினங்களின் மீதும் அன்பு செலுத்துதல் போன்ற பௌத்த கோட்பாடுகளின் ஊடாக சிறந்த வழிகாட்டல்கள் வழங்கப்படும் அதேவேளை எந்தவொரு ஆன்மீக கோட்பாட்டிலும் மனிதர்களை கொலை செய்யுமாறு கூறப்படவில்லை.

நாட்டில் வாழ்ந்த ஈடிணையற்ற மொழி புலமைவாய்ந்த தொடகமுவே ஸ்ரீ ராகுல தேரர் வாழ்ந்த புண்ணிய பூமியாகிய தொடகமுவ புராண ரத்பத் ரஜமகா விகாரையை மையப்படுத்தி ஆன்மீக அபிவிருத்திக்கு முக்கியத்துவமளித்து இம்முறை அரச வெசாக் வைபவம் மிக கோலாகலமாக இடம்பெற்றது.

இன்று பிற்பகல் விகாரைக்குச் சென்ற ஜனாதிபதி அவர்கள், முதலில் சமய அனுஷ்டானங்களில் ஈடுபட்டு ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டதுடன், தொடகமுக புராண ரத்பத் ரஜமகா விகாரை அமைந்துள்ள பிரதேசத்தினை புண்ணிய பூமியாக பிரகடனப்படுத்துவதற்கான நினைவுப்பலகையை திரைநீக்கம் செய்து வைத்தையும் குறிப்பிடத்தக்கது.

இதன்போது, அமைச்சர்கள் காமினி ஜயவிக்ரம பெரேரா, வஜிர அபேவர்தன, தென் மாகாண ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோன், முதலமைச்சர் ஷான் விஜேலால் டி சில்வா மற்றும் சீனிகம தெவொல் கோவில் பொறுப்பாளர் சரத் திசெந்துவாஹந்தி உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Author: verified_user

0 comments: