Thursday, 10 January 2019

இஸ்லாம் மதத்தைத் துறந்த சௌதி பெண்ணுக்கு அகதி அந்தஸ்து வழங்கியது ஐ. நா

பதினெட்டு வயதாகும் சௌதி பெண் கடந்த வார இறுதியில் குடும்பத்தை விட்டு தப்பி தாய்லாந்து வழியாக ஆஸ்திரேலியா செல்லத் திட்டமிட்டார். ஆனால் பேங்காக்கில் அவர் விமானம் மூலம் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தற்போது அவரை சட்டபூர்வமான அகதியாக ஜ.நா அறிவித்துள்ளதாக ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.

முன்னதாக, ஏர்போர்ட் ஓட்டல் அறையில் உள்ளே தாழிட்டுக்கொண்டு வெளியே வராமல் இருந்த ரஹாஃப் மொஹம்மத் அல்-குனன் தற்போது தாய்லாந்து அரசின் பாதுகாப்பில் இருக்கிறார். ஐநா அகதிகள் முகமை அவரது விவகாரத்தை கையிலெடுத்திருக்கிறது.

இஸ்லாமை துறந்தால் தன்னை தனது குடும்பம் கொன்றுவிடும் என அஞ்சுவதாக அப்பெண் தெரிவித்துள்ளார்.

அவரது தந்தை மற்றும் சகோதரர் தாய்லாந்து வந்திருக்கின்றனர். எனினும் அவர்களை பார்க்க மறுத்துவிட்டார் ரஹாஃப்.

இந்நிலையில், ஐநா அகதிகள் முகமை இவரது விவகாரத்தை, அதாவது இவருக்கு மீள்குடியுரிமை அளிப்பது குறித்து பரிசீலிக்குமாறு ஆஸ்திரேலிய அரசிற்கு பரிந்துரைத்தது.

"இந்த விவகாரத்தை எல்லா வழக்குகள் போலவே இதனையும் கருத்தில் எடுத்துக் கொள்வோம்" என ஆஸ்திரேலிய உள்துறை அறிக்கை வெளியிட்டது.

அகதிகள் என்ற அந்தஸ்து பொதுவாக அரசாங்கம்தான் அளிக்க வேண்டும். ஆனால், அரசாங்கம் கொடுக்காத அல்லது கொடுக்க விருப்பமில்லாத பட்சத்தில் ஐ.நா வழங்கலாம் என்று அதன் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது மொஹம்மத் அல்-குனனுக்கு அகதி அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ள நிலையில், மற்றொரு நாடு அவரை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இஸ்லாம் மதத்தை துறப்பது சமய எதிர்ப்பாக அறியப்படுகிறது. இது குற்றமாக கருதப்பட்டு சௌதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்படும். தாய்லாந்து குடிவரவு அதிகாரிகள் இந்த விவகாரத்தின் ஆரம்ப கட்டத்தில் அப்பெண் குவைத்துக்குச் செல்ல வேண்டும் எனத் தெரிவித்தனர்.

முன்னதாக தனது பாஸ்போர்ட் தாய்லாந்து விமான நிலையத்தில் சௌதி அதிகாரியால் பிடிங்கி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது அவருக்கு பாஸ்போர்ட் திரும்ப கிடைத்துவிட்டதாக கூறியுள்ளார்.

பிபிசியிடம் பேசிய அல்-குனன் தற்போது நலமாக இருப்பதாகத் தெரிவித்தார். அந்நிய நாட்டில் தனக்கு தஞ்சம் கிடைக்கும் என நம்புவதாகவும் கூறினார்.

இந்த விவகாரம் குறித்து ஒவ்வொரு திருப்பங்கள் குறித்து ட்விட்டரில் அவர் பகிர்ந்து கொண்டார். இதனால் உலகம் முழுவதும் சமூக வலைதள பயனர்கள் இவ்விவகாரம் குறித்து உன்னிப்பாக கவனித்து வந்தனர். ஒன்றரை நாள்களில் மட்டும் சுமார் 50 ஆயிரம் பேர் அவரது ட்விட்டர் கணக்கை பின்தொடர்ந்துள்ளனர்.
ஏன் புகலிடம் கோருகிறார்?

''என் வாழ்க்கை அபாய கட்டத்தில் உள்ளது'' என மொஹமத் அல்-குனன் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தார்.

''எனது குடும்பம் கொன்றுவிடுவதாக என்னை மிரட்டியது'' என்றார்.

அல் - குனன் அப்பா வடக்கு சௌதி மாகாண நகரமான அல்-ஸுலைமியின் கவர்னராக இருக்கிறார்.

அவரது குடும்பத்தின் செய்தி தொடர்பாளர் பிபிசியிடம் பேசுகையில், இது குறித்து அக்குடும்பம் எந்தவொரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. இளம்பெண்ணின் பாதுகாப்பு குறித்தே குடும்பம் கவனம் செலுத்துவதாக கூறினார்.

கடந்த செவ்வாய்க்கிழமை காலையில் ஒரு ட்வீட் மூலமாக நான்கு நாடுகளில் தஞ்சம் கோரினார். இன்னொரு ட்வீட்டில் கனடா தனக்கு தஞ்சம் வழங்கவேண்டும் என விரும்புவதாக தெரிவித்திருந்தார்.

''ஐநாவின் அகதிகள் முகமை அவரது கோரிக்கையை ஏற்று உரிய செயல்முறைகளை முடித்தால், அல் -குனன் மனித நேய அடிப்படையில் விசா தருமாறு எந்தவொரு விண்ணப்பத்தை தந்தாலும் அதை கவனமாக பரிசீலிப்போம்'' என ஆஸ்திரேலியாவின் உள்துறை அமைச்சக அதிகாரி தெரிவித்துள்ளார்.
தாய்லாந்து அதிகாரிகள் அப்பெண்ணை அவரது சொந்த நாட்டுக்கு திரும்ப அனுப்பாதது குறித்து நன்றி தெரிவித்தது ஐநா முகமை.

அவரை மீண்டும் சொந்த நாட்டுக்கு கொண்டுவர சௌதி அரசு முயற்சி எடுத்துவருகிறது எனும் சேதியை தாய்லாந்தில் உள்ள சௌதி அரேபிய தூதரகம் மறுத்துள்ளது.
தாய்லாந்து இந்த விவகாரத்தை எப்படி கையாள்கிறது?

திங்கள் கிழமை மாலையில் தாய்லாந்தின் குடிவரவு காவல்துறையின் தலைமை அதிகாரி சுராசட் ஹக்பர்ன் ''எங்களால் முடிந்தவரை அவரை சிறப்பாக பார்த்துக் கொள்வோம்'' என்றார்.

''தற்போது தாய்லாந்தின் இறையாண்மையை பாதுகாக்கும் அரச நிர்வாகத்தின் பாதுகாப்பின் கீழ் இருக்கிறார். அவரை எந்தவொரு நபரும் அல்லது எந்தவொரு தூதரகமும் எங்கேயாவது செல்லுமாறு கட்டாயப்படுத்தமுடியாது'' எனக் கூறினார்.

''தாய்லாந்து புன்னகைகளின் தேசம். நாங்கள் யாரையும் சாவதற்காக அனுப்பமாட்டோம்''

தாய்லாந்தின் முடிவு குறித்து சௌதி அதிகாரிகளைச் சந்தித்து விளக்கபோவதாகவும் அவர் தெரிவித்தார்.

ராய்ட்டர்ஸிடம் பேசிய தாய்லாந்து குடிவரவு அதிகாரிகளின் தலைவர், அந்த இளம் பெண் மற்றும் அவரது தந்தை இடையிலான எந்தவொரு சந்திப்பும் ஐநாவின் ஒப்புதலுடன் நடக்க வேண்டும் என்றார். (BBC TAMIL)

Author: verified_user

0 comments: