Friday, 2 November 2018

முஸ்லிம்களுக்கெதிராக அரங்கேற்றப்பட்டவை அம்பலமாகின்றன

இனவாதிகளுக்கிடையில் சண்டையும், சச்சரவும், குழப்பமும், முறுகல் நிலையும் உருவாகியுள்ளதால் அவா்களின் சூழ்ச்சிகள் தொடா்பான செய்திகள் அன்றாடம் வெளிவர ஆரம்பித்திருக்கின்றன.

இன்று இலங்கையில் ஏற்பட்டுள்ள இந்த அரசியல் கொந்தளிப்புக்கும் இந்த இனவாத சக்திகளுக்கும் இடையில் மிக நெருங்கிய தொடா்பு இருந்தது இப்போது அம்பலத்திற்கு வந்திருக்கிறது.

முஸ்லிம்களுக்கெதிராக இடம்பெற்ற கண்டி திகன வன்முறைகளின் முக்கிய சூத்திரதாரியான அமித் வீரசிங்க ஏழு மாத தடுப்புக்காவலின் பின்னா் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளான்.

நாமல் குமார என்ற நபருக்கும் பயங்கரவாத தடுப்புப் பிரிவின் பொலிஸ் அதிகாரி நாலக டீ சில்வாவுக்கும் இடையில் இருந்த உறவு அம்பலத்திற்கு வந்து அரசியல் கொலை தொடா்பான திட்டங்கள் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்ததால் பொலிஸ் அதிகாரி நாலக சில்வா தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந் நிலையில் இந்த சூழ்ச்சிகளை அம்பலத்திற்கு கொண்டுவந்த நாமல் குமார நேற்று ஊடகங்களுக்கு வெளியிட்ட முஸ்லிம்கள் மீது வன்முறையைத் தூண்ட கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட ஒரு தகவல் இந்த இனவாதிகளின் சதி பற்றிய உண்மைகளை மீண்டும் ஒரு முறை வெளிக்கொணா்ந்திருக்கிறது.

கண்டி திகன வன்முறையின் போது பள்ளிவாசல்களில் ஆயுதங்களும், குண்டுகளும் இருப்பதாக ஒரு பொய்யான தகவலை பொலிஸ் அவசரப் பிரிவுக்கு (119) பல இடங்களிலிருந்தும் தகவல் கொடுக்குமாறு அமித், நாமல் குமாரவிற்கு உத்தவு கொடுக்கிறான். இந்த தொலைபேசி உரையாடலை நேற்று நாமல் குமார ஊடகங்களுக்கு அறிவித்தான்.

நாமல் குமார, அமித் வீரசிங்க, டேன் பிரியசாத் போன்ற தீவிர இனவாதிகளுக்கு இடையில் இருந்த நெருக்கமான உறவு பற்றிய தகவல்களும் இப்போது சந்திக்கு வந்துள்ளன.

அதே போல இந்த இனவாதிகளுக்கும் குறிப்பாக நாமல் குமாரவுக்கும் காவல்துறை அதிகாரி நாலக டீ சில்வாவுக்கும் இருந்த நெருக்கமான உறவும் இப்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. 2015ம் ஆண்டின் ஆட்சி மாற்றத்துக்கு காரணமான சிறுபான்மை சமூகங்களோடுகடுப்புற்ற தெற்கின் இனவாதிகள் தருணம் பார்த்து நின்றனா். மஹிந்தவின் அரசியல் அனுசரணை இவா்களுக்கு சிறுபான்மையினா் மீது வெறுப்பையும் அவா்களுக்கு எதிராக செயற்பட தெம்பையும் ஊட்டியது.

திகன கலவரம் தொடா்பில் முஸ்லிம்களும் முஸ்லிம் அரசியல்வாதிகளும் பொலிஸாாின் செயற்பாடு தொடா்பாக சந்தேகத்தையும் குற்றச்சாட்டையும் அப்போதே முன் வைத்திருந்தனா். பொலிஸார் இனவாதிகளுக்கு சார்பாக செயற்பட்ட பல சம்பவங்கள் பல சமூக ஊடகங்களில் ஆதாரத்தோடு வலம் வந்தன.

இது தொடா்பாக நல்லாட்சி அரசாங்கத்தின் மீது கூட கடுமையான ஆட்சேபனையும், குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டது. மஹிந்தவின் ஆட்சியில் போல இனவாதிகளின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதில் மெத்தனப் போக்கை நல்லாட்சி கடைப்பிடிப்பதாக கடுமையான விமா்சனம் எழுந்தது.

அன்று முஸ்லிம்களை அழிக்க இனவாதிகளும் காவல்துறையும் இணைந்து செயற்படுத்திய இந்த சதி நாசகார வேலைத் திட்டத்தை ஐதேக தலைமை கண்டுகொள்ளாமல் இருந்தது. இன்று அதே சதிகார கூட்டத்தின் விபரீதத்தை இன்று ஐதேக அனுபவிக்க ஆரம்பித்திருக்கிறது. மைத்திாி கோத்தா கொலை சதி முயற்சியை ஐதேக வின் முயற்சியாக இந்த இனவாதக்குழு அடையாளப்படுத்தியது.

அம்பாறை, திகன கலவரங்களுடன் தொடா்புள்ள இந்த சக்திகளே மைத்திரி, கோத்தாபய கொலை சதிக் குற்றச்சாட்டை முன் வைத்ததில் பிரதான பாத்திரங்களை வகிக்கின்றனா். இந்தக் குற்றச்சாட்டே நாட்டில் ஓர் அரசியல் கொந்தளிப்பை உருவாக்கக் காரணமாகியிருக்கிறது.

இந்த கொலைச் சதி தொடா்பான சட்ட ரீதியலான விடயங்கள் நீதித்துறைக்கு சமா்ப்பிக்கப்பட்டுள்ளன. இதன் சந்தேக முடிச்சுகள் இன்னும் அவிழ்க்கப்படாத நிலையில், ஜனாதிபதி சிறிசேனா இந்த குற்றச்சாட்டை பிரதமா் ரணிலை பதவி நீக்குவதற்கு ஒரு முக்கிய காரணமாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

இதேவேளை நாமல் குமார என்ற இந்த பொலிஸாருக்கு துப்பு வழங்கும் நபர், ஜனாதிபதி செயலகத்தின் போதை ஒழிப்புப் பிரிவில் செயற்பட்டவா் என்ற தகவலும் வெளியாகியிருக்கிறது. இவா் வறக்காப்பொல வங்கியொன்றிற்கு கடன் ஒன்றைப் பெறுவதற்கு வழங்கிய விண்ணப்பத்தில் தான் ஜனாதிபதி செயலகத்தில் பணியாற்றுவதாக குறித்த விண்ணப்பத்தில் அறிவித்திருப்பதாக ஈ நிவுஸ் இணைய தளம் ஆதாரத்தோடு அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தது.

நாட்டில் ஏற்பட்ட முஸ்லிம்களுக்கெதிரான கலவரங்கள் தொடா்பாக ஜனாதிபதி சிறிசேன ஓர் உரையாடலின் போது தொிவித்திருந்த கருத்துகள் முக்கியமானது.

அம்பாறை கலவரத்தை கோத்தாபயவின் எலிய அமைப்பில் செயற்படும் சரத் வீரசேகர வழி நடாத்தியதாகவும் , கண்டி திகன கலவரத்தை வழி நடாத்தியவா்கள் மஹிந்த ராஜபக்ஷவின் மொட்டு கட்சியினா் என்றும் குறிப்பிட்ட சிறிசேன திகன கலவரத்தில் கைது செய்யப்பட்டோா் அதிகமானோா் மொட்டு கட்சியினா் என்று குறிப்பிட்டிருந்தார். இன்று அதே இனவாத சக்திகளின் அரசியல் தலைமைக்கு சிறிசேன நாட்டை தாரைவார்த்து கொடுத்துள்ளார்.

இன்றைய அரசியல் நிகழ்வுகளையும், பிறழ்வுகளையும் பார்க்கும் போது இனவாதம், மதவாதம் என்ற தெற்கின் பிற்போக்குத் தனமான அரசியல் சித்தாந்த மையப்புள்ளியிலிருந்தே இவை ஊற்றெடுத்திருக்கின்றன என்பதை உணரக் கூடியதாக இருக்கிறது.

எது எப்படியிருப்பினும் ஓா் அரசியல் நாடகம் அரங்கேறியிருக்கிறது என்பதை மட்டும் உறுதியாக சொல்ல முடியும்.

மஹிந்த, மைத்திரி, அமித், நாமல், நாலக போன்றோர் இந்த இனவாத நாடகத்தின் முக்கிய கதாபாத்திரங்களாக இருக்கின்றனா்.

Azeez Nizardeen

Author: verified_user

0 comments: