Monday, 22 October 2018

சவூதி அரேபிய புலனாய்வு சேவையால் பழிவாங்கப்பட்ட ஊடகவியலாளர் ஜமால் கஷோகி.

உலக முஸ்லிம்களினதும் ஏனைய மக்களினதும் வெறுப்புக்கு ஆளாகியுள்ள சவூதி அரேபிய அரசு மனித உரிமைகளினதும், ஜனநாயகத்தினதும் காவலர்கள் என தம்மை அழைத்தக் கொள்ளும் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளால் தான் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. இரண்டாவது உலக மகா யுத்தம் முதல் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இடம்பெறுகின்ற அனைத்து நாசகார முயற்சிகளிலும் அமெரிக்க ஐரோப்பிய மற்றும் இஸ்ரேலிய சதித் திட்டங்களின் பிரதான பங்காளியாகவும் சவூதி அரேபியா செயற்பட்டு வருகின்றது. மக்கா, மதீனா ஆகிய முஸ்லிம்களின் புனித பிரதேசங்களின் பாதுகாவலனாக இருந்து கொண்டு ஜமால் கஷோகி போன்ற ஒரு ஊடகவியலாளரை மிகக் கொடூரமான முறையில் கொலை செய்துள்ளமை மிகவும் வேதனைக்குரிய ஒன்றாகும். இந்த மரணம் முழு உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

மத்திய புலனாய்வு பணியகத்தின் சிரேஷ்ட புலனாய்வு சேவை அதிகாரியும் அரசியல் இஸ்லாம் மூலோபாய பகுப்பாய்வு நிகழ்ச்சித் திட்டத்தின் பணிப்பாளருமான டொக்டர். எமில் நக்லே சவூதி அரேபியாவின் ஆட்சிக்கு எதிரான அமைதியான அதிருப்தியாளர்களையும் அந்த நாட்டில் மனித உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர்களையும் கையாளும் இளவரசர் சல்மானின் அயோக்கியத்தனமான நடவடிக்கைகள் பற்றி ஒரு கட்டுரை எழுதி உள்ளார். இந்த விடயத்தில் சவூதி அரேபியாவுக்கு உள்ளேயும் வெளியேயும் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் பற்றி அவர் விரிவாகக் குறிப்பிட்டுள்ளார். தனது உள்நாட்டு வெளிநாட்டுக் கொள்கைகளை துணிச்சலாகக் கண்டிப்பவர்கள் எவராக இருந்தாலும் சரி அவர்களுக்கு எதிராக நவீன நாகரிக உலகால் ஏற்றுக் கொள்ள முடியாத, தனது பண்டைய பாரம்பரிய காட்டுமிராண்டித்தனமான பழி வாங்கும் படலத்தை அவர் கட்டவிழ்த்து விட்டுள்ளார் என்பதைத் தவிர வேறு எதையும் இந்த நடவடிக்கைகள் புலப்படுத்தவில்லை

தனது அதிருப்தியாளர்கள் மீது கடந்த ஒரு வருட காலத்தில் அவர் காட்டியுள்ள மிக மோசமான பிரதிபலிப்புக்கள் அவை குறித்து வெளியில் பேசும் குற்றத்துக்காக அதிருப்தியாளர்களின் குடும்பத்தவர்கள் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் என்பன அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பும் அவரது மருமகன் ஜெராட் குஷ்னரும் தனது சட்டைப் பைக்குள் இருக்கின்றார்கள் என்ற தோரணையில் தான் அமைந்துள்ளது. இது மிகவும் துரதிஷ்டவசமான ஒரு நிலைமையாகும். சவூதி ஆட்சியாளர்களைப் பொறுத்தமட்டில் டிரம்ப் தனது வெளிநாட்டுக் கொள்கைகளில் இருந்து மனித உரிமை என்ற விடயத்தை தூரப்படுத்தி விட்டார். அரபு நாடுகளில் சல்மான் உற்பட அவரது சகாக்களின் தனி மனித ஆதிக்கம்; சர்வாதிகார ஆட்சி முறைக்கு டிரம்ப் மிகவும் நெருக்கமாகிவிட்டார் என்ற ரீதியில் தான் காணப்படுகின்றது. தனது ஆட்சியை விமர்சிக்கும் ஜமால் கஷோகி உற்பட அதிருப்பதியாளர்கள் மீது சல்மான் இழைத்து வரும் அயோக்கியத் தனமான கொடுமையான அடக்கு முறைகள், தனக்கு டிரம்ப் தரப்பில் இருந்து எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று இவரசர் சல்மான் உறுதியாக நம்பியிருக்க வேண்டும் என்றே எண்ணத் தோன்றுகின்றது.

உள்ளுரில் மட்டும் அன்றி துருக்கி, அமெரிக்கா, கனடா மற்றும் மேலைத்தேச ஐரோப்பிய நாடுகள் என்பனவற்றில் செயற்பட்ட தனது ஆட்சியின் அதிருப்தியாளர்களை கடத்தியும் அச்சுறுத்தியும் இன்னும் பல வழிகளிலும் சல்மான் தாராளமாகக் கையாண்டுள்ளார். ஆனால் அவை எல்லாம் மௌனமாக அனுமதிக்கப்பட்டிருக்கின்றன. சில சம்பவங்களுக்கு எந்த அக்கறையும் இல்லாத நயவஞ்சகத் தனமான அறிக்கைகள் மட்டுமே விடப்பட்டுள்ளன.

இதன் மூலம் தனிமனித ஆதிக்கத்தில் இருக்கும் தனது அண்டை நாடுகளுக்கு அதிருப்பதியாளர்களைக் கொல்லுவதும் துன்புறுத்தவதும் அனுமதிக்கப்படடுள்ளது என்ற தூதை சல்மான் மறைமுகமாக விடுத்துள்ளார். பிராந்திய மனித உரிமை அமைப்புக்களும் இதை தடுக்கவோ, தட்டிக் கேற்கவோ சக்தி அற்றவையாக உள்ளன. அமெரிக்கா உற்பட மேலைத்தேச ஐரோப்பிய நாடுகள் மனித உரிமைகளை விட ஆயுத விற்பனையிலும் ஏனைய தமது பொருளாதார நலனில் மட்டுமே அக்கறை எடுத்துக் கொள்கின்றன. இதனால் ஏனைய சர்வாதிகார ஆட்சியாளர்களுக்கு சல்மான் சொல்லும் தூது மிகவும் எளிமையானதாகவே உள்ளது. உங்கள் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ளும் நிலை வருகின்ற போது உங்கள் மக்கள் தொகை என்பது கணக்கில் கொள்ள வேண்டிய ஒரு விடயமே அல்ல என்பதுதான் சர்வாதிகார ஆட்சியாளர்களுக்கு சல்மானின் புதிய செய்தியாக உள்ளது. அதாவது உங்கள் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள உங்கள் மக்களில் எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் நீங்கள் செய்யலாம் என்பதுதான் அந்த செய்தியின் பொருள்.

கஷோகியின் விதியை தீர்மானித்தது சவூதி அரேபியா தான் என்பது இப்போது தீர்க்கமான முடிவாகி உள்ளது. அது ஒரு அரபு சர்வாதிகாரத்துக்கு தாங்கள் அளித்து வரும் ஆதரவு குறித்து சர்வதேச சமூகத்தின் ஞானம் மீண்டும் ஒரு விவாதத்தை தொடங்கி உள்ளது. இந்த அரபு சர்வாதிகாரம் மனித உரிமை மீறல்களில் அதன் கொடூரத்தை வெட்கக் கேடான விதத்தில் வெளிப்படுத்தி உள்ளது. சர்வதேச சட்டங்களையும் சாசனங்களையும் அது பொருட் படுத்துவதில்லை என்பதும் தெட்டத் தெளிவாகி உள்ளது.

கஷோகியின் படுகொலை ஏற்கனவே உலகளாவிய ரீதியில் எதிரொளிக்கத் தொடங்கி உள்ளது. சவூதிக்கு மிகப் பெரிய அளவில் தனது ஆயுதங்களை ஏற்றுமதி செய்யும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் பங்கும் இதில் அடங்கும்.

எவ்வாறேனும் சில தகவல்களின் படி ஜமால் கஷோகி ஒரு சர்ச்சைக்குரிய நபர். ஒரு காலத்தில் ஊடகத்துறைக்கும் உளவுத்துறைக்கும் இடையில் நிலவிய நிழல் உலக ஒத்துழைப்புக்களின் பிரதிநிதிகளில் ஒருவராக இருந்தவர். அவர் அமெரிக்க - சவூதி அரேபிய உளவுச் சேவைகளில் ஒத்துழைப்பாக இருந்தவர். ஆப்கானிஸ்தானில் சோவியத் ரஷ்யாவின் பிரசன்னம் இருந்த காலத்தில் சவூதி அரேபியாவாலும் CIA ஆலும் சேவையில் அமர்த்தப்பட்டிருந்த ஒருவர் தான் கஷோகி என்பது சவூதி அரேபிய ஆளும் குடும்பத்தின் உத்தியோகப்பூர்வ வட்டாரங்கள் மூலம் பெரும்பாலும் ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது.

கஷோகியின் கொலையானது மத்திய கிழக்கில் பல அதிர்வலைகளையும் அச்ச நிலையையும் உருவாக்கி உள்ளது. துருக்கி – சவூதி உறவுகள் மட்டுமன்றி மத்திய கிழக்கில் பல தவறான கோடுகளை நிர்ணயிக்கும் அமெரிக்க - சவூதி கூட்டணி கூட தற்போது மிகப் பெரிய அச்சுறுத்தலை எதிர்நோக்கி உள்ளது.

கஷோகியின் விதியை விசாரிக்கும் அமெரிக்க விசாரணைக்கு அந்த நாட்டின் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆணை வழங்கி உள்ளனர். இதன் முடிவு சவூதி அரேபியா மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பா தலைமையிலான ஆயுத விற்பனை தடைகள் உற்பட சில தடைகளுக்கு வழியமைக்கக் கூடும். அது ஈரானுடனும் யெமனுடனும் சவூதி தொடுத்துள்ள கொடூரமான பினாமி யுத்தத்தில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தவும் கூடும்.

இந்தக் கொலையானது சவூதி அரேபியாவை சர்வதேச அரங்கில் ஒரு ரௌடி ராஜ்ஜியமாக நிலை நிறுத்த வழியமைக்கும். சர்வதேச பயங்கரவாதத்துக்கு ஈரான் தான் பிரதானமாக ஆதரவளிக்கின்றது என்ற ரீதியில் அமெரிக்காவும் சவூதி அரேபியாவும் தெரிவித்து வரும் குற்றச்சாட்டுக்களை இது கேள்விக்குரியாக்கி விடும். கடந்த 15 மாத காலமாக சவூதியும் ஐக்கிய அரபு இராச்சியமும் கத்தாரை இராஜதந்திர ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் தனிமைப்படுத்த எடுத்துள்ள முயற்சிகளையும் இது கோள்விக்குரியதாக்கி விடும். கத்தாரை தனிமைப்படுத்தும் முயற்சியில் எகிப்து பஹ்ரேன் என்பனவும் சம்பந்தப்பட்டுள்ளன.

சவூதி அரேபியா மீதான சர்வதேச சமூகத்தின் கண்டனங்கள் மற்றும் தடைகள் என்பன சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் அவர்களின் முயற்சிகளில் தாராளமாக வழியை திறந்து விடக் கூடும். சவூதி ஈரான் போட்டியால் தாங்கள் பாதிக்கப்படவில்லை என்பதை அவர்கள் உறுதி செய்து கொள்ள முடியும்.

கஷோகி காணாமல் போனதற்கு சவூதி அரேபியாதான் பொறுப்பு என்பது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டால் அது தொடர்பான தடைகள் பற்றிய தீர்மானம் ஐ.நா பாதகாப்புச் சபைக்கு கொண்டு வரப்பட்டால் சீனாவும் ரஷ்யாவும் குறுக்கு முனையில் நிற்கும் நிலைக்கு தள்ளப்படும்.
குறிப்பிடத்தக்களவு பலவீனம் அடைந்துள்ள சவூதி அரேபியா இஸ்ரேல் பலஸ்தீன முரண்பாட்டில் பலஸ்தீன மக்களைப் பலிகொடுத்து இஸ்ரேலுக்கு ஆதரவாக டிரம்ப் அமுல் செய்ய நினைக்கும் தீர்வு முயற்சிகளுக்கு அரபுலக பாதுகாப்பாக சவூதி வழங்கிவரும் ஆதரவு நிலையையும் மேலும் குறைத்து மதிப்பிடும்.

மேலும் கஷோகியின் கதி எதுவாக இருப்பினும் அதை எல்லாம் மீறி சல்மானின் செல்வாக்கு கணிசமான அளவு பாதிக்கப்பட்டுள்ளது. சவூதி அரேபியா சர்வதேச ரீதியாக பெரும் கண்டனத்தக்கு ஆளாகின்ற போது அவரின் நம்பகத் தன்மையை எவ்வாறு தக்க வைத்துக் கொள்ள முடியும், அந்த நாட்டின் ஸ்திரப்பாட்டை எவ்வாறு தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பதெல்லாம் கேள்விக்குறியாகியுள்ளன. மத்திய கிழக்கு தொடர்பான அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா என்பனவற்றின் கொள்கை நிலைப்பாடுகளும் இதனால் ஆபத்தை எதிர்நோக்கி உள்ளன.

கஷோகி மாயமானதற்கான காரணத்தை முழுமையாக அறிந்து கொள்ள கஷோகியின் அரசியல் பாதுகாவலரான துருக்கி பின் பைஸால் அல் சவூத் பற்றிய ஒரு தீவிர ஆய்வும் அவசியமாகின்றது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நவதாராளவாத அலகுக்கு எதிரான போராட்டத்தோடு பின்னிப் பிணைந்து காணப்படும் அச்சிலான சிக்கல்மிக்க சியோனிஸ – சவூதி நவமரபுவாத போராட்டத்துக்கு எதிரான ஒரு அதிருப்தியாளரின் கதையை பெரும்பாலும் ஒத்திராத வகையில் தான் இது காணப்படுகின்றது. அமெரிக்க அரசியலின் தொந்தரவுகளுக்கு பின்னால் மறைந்துள்ள காட்சிகள், சவூதி சர்வாதிகாரம் என்று வருகின்ற போது ஊடகங்களின் நயவஞ்சகப் போக்கு, துருக்கியின் தெளிவற்ற பங்களிப்பு என பல விடயங்கள் இங்கே ஆராயப்பட வேண்டி உள்ளன.

ஓபாமா ஆட்சி காலத்தில் சவூதி அரேபிய ராஜ்ஜியத்தின் இருப்புக்கு அவசியமாக அங்கு முக்கியமான மறுசீரமைப்புக்களை ஊக்குவிப்பதற்கு ஊடகவியலாளர்கள் முக்கியமான பங்களிப்பை வழங்க வேண்டிய ஒரு சூழல் இருந்தது.

சவூதி அரேபியாவில் அல்சவூத் குடும்பத்தில் இருந்து தவிர்ந்து கொள்ள அரபு வசந்த எழுச்சியை ஒபாமா பயன்படுத்துகின்றாரா என்ற பலத்த சந்தேகம் சவூதி அரச குடும்பத்தில் பலரிடையே பரவலாகக் காணப்பட்டது. இதனால் வாஷிங்டனுக்கும் றியாத்தக்கும் இடையிலான உறவுகள் கூட மிகவும் கீழ் நிலைக்கு வந்தன. றியாததுக்கு எதிரான இந்த அரசியல் மற்றும் ஊடக மூலோபாயத்தின் ஈட்டி முனையாக இருந்தவர் தான் கஷோகி. அவர் அரச குடும்பத்தின் மிக நெருக்கமான நண்பராக இருந்தார். கடைசியில் அவர் அரச குடும்பத்தின் கடும் விமர்சகராக மாறினார். இதனால் அவரது எழுத்துக்கள் மீது கவனம் ஈர்க்கப்பட்தோடு அவற்றுக்கு நல்ல விலையும் கிடைத்தன.

மன்னர் சல்மான் பதவிக்கு வந்ததோடு, விஷேடமாக டொனால்ட் டிரம்ப்பும் ஆட்சிக்கு வந்ததோடு இந்த பிராந்தியத்தில் எல்லாமே மோசமாக மாறியதோடு அதிருப்தி ஊடகவியலாளருக்கும் அதே நிலை ஏற்பட்டது. சவூதி அரேபியாவின் அதிகாரம் இளவரசர் பின் சல்மானின் கைகளுக்கு மாறி அவர் அதிகாரம் மிக்க மனிதரானார். அல் ஜஸீரா விடயத்தை விஷேடமாக மையப்படுத்தி டிரம்ப்பின் முடிச்சில் சிக்கி கிட்டத்தட்ட கத்தாருடன் ஒரு யுத்த நிலை ஏற்பட்டது. அல்ஜஸீரா கஷோக்கியை அடிக்கடி பேட்டி கண்டது. அதில் அவர் பின் சல்மானின் சவூதி இராச்சியத்துக்கான எதிர்கால தூர நோக்கை (விஷன் 2030) வன்மையாகச் சாடினார்.

பின் சல்மானின் அடக்குமுறை பிரசாரத்தின் போது அவர் சகல எதிரிகளையும் தாக்கும் சந்தர்ப்பத்தை பெற்றுக் கொண்டார். இதில் கஷோக்கிக்கு நெருக்கமான பலர் கைது செய்யப்பட்டனர், இன்னும் பலர் சித்திரவதை செய்யப்பட்டனர். மேலும் பலர் கொல்லவும் பட்டனர்.

சவூதி அரசைக் கண்டிக்கும் தனது பத்தி எழுத்தை கஷோக்கி தொடர்ந்தார். யெமன் அல்ஜஸீரா என்பனவற்றின் மீதான நடவடிக்கைகளை சாடினார். பின் சல்மானை கண்டபடி தாக்கினார். சவூதியில் ஒரு புரட்சி சாத்தியப்படலாம் என்றார். தனது நாட்டில் காணப்படும் ஜனநாயகக் குறைபாட்டை கஷோகி விமர்சித்தார். சவூதி ராஜ்ஜியத்தின் மேல்மட்டத்தை அவர் வெகுவாக சாடினார். இந்த விமர்சனங்கள் சல்மானை கொதிப்படைய வைத்தன. அதன் விளைவு கஷோகி என்ற ஊடகவியலாளருக்கு முடிவு கட்ட வேண்டிய முடிவுக்கு அவர் வந்தார்.

திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட நாடகத்தின் இறுதிக் காட்சிகள் தான் துருக்கியில் இடம்பெற்றவை. இந்தப் பிராந்தியத்தில் டிரம்ப் தனது நெருங்கிய சகாக்களான இஸ்ரேலுக்கும் சவூதி அரேபியாவுக்கும் கொடுத்துள்ள சுதந்திரத்தின் பலன்கள் தான் அவை. கடந்த 24 மாதங்களில் இவ்விரு நாடுகளினதும் செயற்பாடுகளை மதிப்பீடு செய்கின்ற போது வாஷிங்டனின் சுதந்திர செயற்பாட்டை தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகின்றது.

பெயர் குறிப்பிடாத சவூதி மூலாதாரங்களை அடிப்படையாகக் கொண்டு கஷோகியின் மரணம் குறித்து பல முடிவுகளுக்கு நாம் வரலாம். அல்லது மிகவும் தெளிவான ஒரு முடிவுக்கு நாம் இலகுவாக வரலாம்.

கஷோகி சித்திரவதை செய்யப்படு முன் தூதரக அலுவலகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அதன் பிறகு அவர் கொல்லப்பட்டு கூறு போடப்பட்டுள்ளார். இதற்கென சவூதியில் இருந்து விஷேட விமானத்தில் வருகை தந்த 15 பேர் கொண்ட ஒரு குழு இந்தக் காரியத்தில் ஈடுபட்டுள்ளது. பின்னர் ஒரு சில மணி நேரத்தில் அவர்கள் அங்கிருந்து வெளியேறிச் சென்றுள்ளனர். எப்போதுமே இரு மடங்கு அல்லது மும்மடங்கு விழிப்பாக இருக்கும் துருக்கி அதிகாரிகள் என்ன நடக்கின்றது என்பதை தெரியாமல் இருந்துள்ளனர் என்பதும் ஆச்சரியமாகவே உள்ளது. தனக்கு தேவையான ஆவணங்களைப் பெற்றுக் கொள்ள மிகவும் பாதுகாப்பான இடம் துருக்கியிலுள்ள சவூதி அலுவலகம் தான் என கஷோகிக்கு உறுதியாக நம்ப வைக்கப்பட்டுள்ளது. அவர் மிகவும் உறுதியாக நம்பிய யாரோ ஒருவர் அவரை நன்கு ஏமாற்றி உள்ளார்.

கஷோகியின் கொலைச் சம்பவம் அதனைத் தொடர்ந்து ஒலித்த ஊடகங்களின் அழுகுரல்கள், டிரம்ப்புக்கு எதிரான பிரதான பிரிவு ஊடகங்களின் கருத்தியல் எதிர்ப்பு, நெத்தன்யாஹுவின் நிலையற்ற தன்மைகள் (அவரின் மனைவி மீதும் கூட ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது) என்பனவற்றின் நடுவே மேல்மட்டத்தினரிடையேயான அரசியல் யுத்தத்தின் வெடிபொருளாகத்தான் இந்தச் சம்பவம் இருக்கும் என்பதில் ஆச்சரியம் இல்லை. இதில் எந்த குறைவும் ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. மாறாக அது நாளுக்கு நாள் அதிகரித்தே வருகின்றது.

மோசமான ஆலோசனைகள் மூலம் பின் சல்மான் மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் விளைவாக மத்திய கிழக்கு பிராந்தியமே ஒரு ஆபத்தை எதிர்நோக்கி உள்ளது. மத்திய கிழக்கில் அமெரிக்கா செல்வாக்கு செலுத்தக் கூடிய கடைசிக் கூட்டணிகளில் ஒன்றாகவும் இதுவே அமைந்துள்ளது.
- BY: லத்தீப் பாரூக்

Author: verified_user

0 comments: