Monday, 10 September 2018

நான் கத்தாரில் பணிபுரியும் வரை கத்தார் எனது சொந்த நாடு தான்! - KEEP QATAR CLEAN

“தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்” என்பாங்க, தப்பேயில்ல, அது நல்ல பழக்க வழக்கங்களாக இருக்கும் பட்சத்தில், கட்டார், சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருக்க அதிகம் பிரயத்தனம் எடுக்கும் ஒரு நாடு,

வீதிகள், பாதையோரம் என எல்லா இடங்களையும் குப்பைகளின்றி சுத்தமாக வைத்திருக்க மில்லியன்களில் செலவு செய்யும் நாடு.

இங்கு 90 சதவீதமானவர்கள் வெளிநாட்டவர்களே வாழ்கின்றனர், வருசத்துக்கு ஒரு மாதத்துக்கும் குறைந்த காலங்களே சொந்த ஊருக்கு செல்பவர்கள் தமது வாலிபத்தில், சில நேரம் ஆயுளில் முக்கியமான தருணங்களை அரபு நாடுகளிலேயே கழித்து விடுகிறோம்.

வெளிநாடுகளுக்கு போய் அந்நிய மொழிகளை கலாச்சாரங்களை, ஏன்? பரிச்சயமே இல்லாத பெறுமதி வாய்ந்த டிசைனர் ப்ரேண்டுகளை கூட உள்வாங்கிக்கொள்ளும் நாம், எமக்கு சோறு போடும் இந்த நாடுகளை பராமரிப்பதில் ஈடுபாடு காட்டுவதில்லை,

“இது நம்ம நாடில்லையே, நாம நிரந்தமாகவா இங்கு தங்கப்போறோம்?” என்ற ஒரு குறுகிய மனப்பான்மையிலேயே ஆயுளில் பாதியை இங்கு கழித்து விடுகிறோம், இப்போ நிறைய பேர் மண்ணறை கூட இங்குதான் என்பது சமீபத்திய மரணங்கள் கட்டியம் கூறுகின்றன.

குறிப்பாக டீக்கடைகள், ஹோட்டல்கள் பக்கத்தில் டீ குடித்து முடிந்து கப்களை, டீ பேக்குகளை வீதியோரங்களில் அநாயாசமாக வீசிச்செல்பவர்களை அவதானிக்கலாம்.

நல்ல பதவிகளில் இருக்கும் படித்த, குறிப்பாக முஸ்லிம்கள் இந்த மோசமான பழக்க வழக்களை கொண்டவர்களாக இருப்பதை பார்க்கும் போது கவலையளிக்கிறது.

“சுத்தம் ஈமானின் பாதியென ஏற்றுக்கொண்ட கூட்டம்”

“நீர்நிலைகளில் சிறுநீர் கழிப்பது தடையென்று சொன்ன ஒரு மார்க்கத்தை வாழ்க்கை நெறியாக கொண்ட ஒரு சமூகம்”

இப்படி நடந்து கொள்ளலாமா?

நாட்டில் கூட மரங்களை, இயற்கையை, நீர்நிலைகளை நாசப்படுத்தும் நாம், இங்கும் அதே மனநிலையில், தெருவுக்கு நான்கு குப்பை தொட்டி தெரிந்தாலும் கண்டு கொள்வதில்லை நாம், உண்மையான பரிணாமம் தீயவற்றில் இருந்து நல்லதை நோக்கிச் செல்வதே!

பூனை கூட ‘காரியம்’ முடிந்து தனது மலத்தை மூடி விட எத்தனிக்கிறது, ஆனால் ஆறறிவு கொண்டவர்களாக பீத்திக்கொள்ளும் நாம்?

“பல் கிண்டிய டூத்பிக்கை கூட பாக்கெட்டில் போட்டு வந்து குப்பையில் போடும் வழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வோம்”

“This is my country, As far as I live here”
“ KEEP QATAR CLEAN & SAFE “❤️
-P L E A S E S H A R E-

நன்றி - Iriz Shaheed







Author: verified_user

0 comments: