Monday, 6 August 2018

சவூதியில் வாழும் தலையில் பூ மாலை அணியும் வழமை கொண்ட பழங்குடிகள்!

சவூதி அரேபியாவின் தென் பகுதியில் யெமனை எல்லையாகக் கொண்டுள்ள அஸீர் பிராந்தியத்தில் ஹபலா மலையடிவாரத்தில் வாழும் அரேபிய பூர்வ பழங்குடிகள். 2000 வருடங்களாக இந்த மக்கள் இம்மலைப்பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். மலையடிவாரத்தில் விளையும் மூலிகைகள், நறுமணம் மிக்க மலர்களால் செய்யப்பட்ட கிரீடமொன்றை இக்கோத்திர ஆண்கள் அணிவது மரபு. வண்ண வண்ண மலர்களை அணிபவர்களாக இருந்தாலும் மூர்க்க குணமுடையவர்கள் என்றும் சொல்லப்படுகிறது. தமது கோத்திர சட்டதிட்டங்கள் அல்லாத வேறு எந்த அதிகாரங்களுக்கும் கட்டுப்படாத குணத்தை இயல்பிலேயே கொண்டவர்கள்.

அரபியில் ‘ஹப்லா’ என்றால் கயிறு என்று பொருள். முன்பு இவர்களின் குடியிருப்புகள் மலைகளுக்கு நடுவே பள்ளத்தாக்குகளில் அமைந்திருந்தன. கயிறுகள் மூலம் இறங்கியே கிராமத்தினுள் நுழையும் விதமாய் இயற்கையான பாதுகாப்போடு தமது குடியிருப்புகளை அமைத்து வாழ்ந்து வந்திருக்கின்றனர். அதனால் தான் இப்பிரதேசம் ஹபலா என்று அழைக்கப்படுகிறது. இவ்வமைப்பு இவர்களுக்கு அந்நியர்களிடமிருந்து இயற்கையான பாதுகாப்பை அளித்திருக்கிறது. தமது எல்லைப்பகுதிக்குள் நுழையும் அந்நியர்களோடு (சவூதி பிரஜைகளாயினும் சரி) மோதல்களில் ஈடுபட்டுள்ளனர். ஹபலா மலைப் பிரதேசம் தற்போது சவூதி அரேபியாவின் ரம்மியமான பச்சை அழகைக் காண வரும் சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழிகிறது. 90களில் பிராந்தியத்தில் சுற்றுலாத்துறையை விஸ்தரிக்கும் அரசின் திட்டங்களால் இவர்கள் அதே பிரதேசத்தில் வேறு இடங்களில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களது குடியிருப்புப் பகுதிகளினுள் நுழைய சவூதி அரேபிய பொலிஸாரே அஞ்சுகின்றனராம். பதற்றம் நிகழும் யெமன் எல்லையில் இப்பழங்குடியினர் வசிப்பது எல்லைப் பாதுகாப்பில் சிக்கல்களையும் உண்டாக்காமல் இல்லை.

Eric Lafforgue எனும் பிரெஞ்சு புகைப்படக் கலைஞர் 2011 இல் பொலிஸ் பாதுகாப்புடன் முறையாக அனுமதி பெற்று ஹபலா கிராமத்திற்கு சென்று இம்மக்களின் வாழ்வையும் கலாசாரத்தையும் பதிவு செய்துள்ளார். இணையத்தில் இம்மக்களின் பெரும்பாலான புகைப்படங்கள் Eric Lafforgue இனால் எடுக்கப்பட்டவையாக உள்ளன.

மேலுள்ள புகைப்படம் (மஞ்சள் சட்டை சிறுவன்) ஹபலா குன்றுகளுக்கு செல்லும் வழியில் என்னால் எடு்க்கப்பட்டது. பயணம் முடிந்து வந்து சேரும் வரை எனக்கு இந்த விபரங்கள் எதுவும் தெரிந்து இருக்கவில்லை! இந்தப் புகைப்படத்தின் கதை மற்றும்
பயண விபரங்களை அடுத்த பதிவில் பார்க்கலாம்....
- முகம்மத் முஜாஹித்-

Author: verified_user

0 comments: