Thursday, 24 May 2018

கத்தாரில் உங்களது உறவினர்கள், நெருக்கமானவர் மரணமடைந்தால் என்ன செய்ய வேண்டும்?

கத்தாரில் மரணமடையும் வெளிநாட்டிலுள்ளோரின் உடலைச் சொந்த நாட்டுக்குக் கொண்டு செல்லவோ அல்லது கத்தரிலேயே அவரவர் மதச் சடங்குகள் பேணி இறுதி கிரியைகள் செய்யவோ செய்யலாம். இதற்கான எல்லாவித அடிப்படை வசதிகளும் கத்தர் அரசு செய்துகொடுத்துள்ளது.

கத்தரில் மரணமடையும் எவருடைய உடலும் எல்லாவித நடைமுறைகளும் முடிந்த பின்னர் இறுதியில் ஹமத் மருத்துவமனை மார்ச்சுவரிக்குக் கொண்டு வரப்படும். இங்கிருந்தே உடலைச் சொந்த ஊருக்கோ அல்லது கத்தரிலேயே இறுதி சடங்குகள் செய்வதற்கோ பெற வேண்டும்.

இங்கிருந்து உடலைப் பெறுவதற்கு முன்னர், காவல்துறை சான்றிதழ், மருத்துவ சான்றிதழ், இறப்பு சான்றிதழ், தூதரக எதிர்ப்பின்மை சான்றிதழ், ஊருக்குக் கொண்டு செல்வது எனில் கத்தர் ஏர்வேய்ஸ் கார்கோ புக்கிங் மற்றும் டிக்கட் 
நகல், கத்தரிலேயே இறுதிகிரியை செய்வது எனில் அதற்கான அனுமதி எனப் பல்வேறு முக்கியமான பல ஆவணங்கள் பெற்று சமர்ப்பிக்க வேண்டியிருக்கும்.

இவற்றைப் பெற முன்னர், காவல் நிலையம், ஃபாரன்ஸிக் அலுவலகம், கத்தர் ஏர்வேய்ஸ் அலுவலகம், தூதரகம், உள்துறை அமைச்சகம், ஆரோக்கியத் துறை, மருத்துவத்துறை முதலான பல்வெறு அலுவலகங்களுக்கு அலைய வேண்டும். இதனால், இரண்டு மூன்று நாட்கள் வரை உடல் மார்ச்சுவரியிலேயே இருக்கும் நிலை இருந்தது. இதுவே, மரணமடைந்தவரின் மரணத்தில் சந்தேகம் ஏதும் இருந்து வழக்கானால் இன்னும் அதிக நாட்கள் எடுக்கும். மட்டுமல்லாமல், ஒவ்வொரு அலுவலகத்திலும் குறிப்பிட்ட சான்றிதழ்களும் அனுமதி பத்திரங்களும் பெற செலவும் இருந்தது.

தற்போது கத்தர் அரசு இப்பிரச்சனைக்கு எளிய முறையில் தீர்வுகண்டுள்ளது. மரணமடைந்தவரின் உடலைப் பெற எல்லா அலுவலகங்களுக்கும் சென்று ஏறி இறங்க வேண்டிய தேவை இப்போது இல்லை. ஹமத் மருத்துவமனை மார்ச்சுவரியின் பின்பக்கம், ஹமத் மருத்துவமனை HR அலுவலகத்தின் அருகிலேயே ஒரு அலுவலகம் இதற்காகத் திறக்கப்பட்டுள்ளது. இங்கு, ஒவ்வொரு துறைக்கும் தனித்தனி கவுண்டர் ஒதுக்கப்பட்டு எல்லா சான்றிதழ்கள், அனுமதி பத்திரங்கள், கத்தர் ஏர்வேய்ஸ் கார்கோ மற்றும் டிக்கட் புக்கிங் எல்லாவற்றையும் ஒரே இடத்தில் சில மணி நேரங்களிலேயே முடிக்கும் வகையில் வசதி (Single Window Sysytem) செய்யப்பட்டுள்ளது. முக்கியமாக, இந்த ஆவணங்கள் பெறுவதற்கு ஆகியிருந்த செலவு முழுமையும் கத்தர் அரசு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

கத்தர் ஏர்வேய்ஸ் கார்கோ மற்றும் டிக்கட் புக்கிங் தவிர வேறு எந்தச் செலவும் ஊருக்கு அனுப்புவதற்கு இல்லை. அதேசமயம் கத்தரிலேயே இறுதிசடங்குகள் செய்வது எனில்,

முஸ்லிம்களுக்கு மெஸைமீர் அடக்கஸ்தலத்திலும் மற்ற மதத்தவர்களின் உடல்களில் அடக்கப்படும் உடல்களுக்கு துகான் பகுதியிலும் எரிக்கப்படும் உடல்களுக்கு அல்கோர் பகுதியிலும் கத்தர் வசதிகள் செய்துகொடுத்துள்ளது. இங்கு உடல்களை எடுத்துச் செல்வதற்கும் அங்கு அவரவர் மத சம்பிரதாயமுறையில் ஈமக்கிரியை முடிப்பது வரையிலான அனைத்து செலவுகளையும் கத்தர் அரசே ஏற்கிறது.

நெருக்கமானவர்கள், தெரிந்தவர்கள் யாரேனும் மரணத்துக்குள்ளானால் கீழ்கண்ட வழிமுறைகளைக் கையாள வேண்டும்.

1. ஹமத் மருத்துவமனைக்கு வெளியே மரணம் நிகழ்ந்தால், உடனடியாக 999 எண்ணுக்கு டயல் செய்து ரிப்போர்ட் செய்ய வேண்டும். உடனடியாக மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸும் காவல்துறையினரும் சம்பவ இடம் வந்து ஆரம்ப நடைமுறைகள் முடித்து, மரணத்தைப் பதிவு செய்து கொள்வர். இதன் அடிப்படையில் காவல்துறை சான்றிதழ் கிடைக்கும்.

2. உடல் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டு மார்ச்சுவரியில் வைக்கப்படும். சந்தேகத்துக்கிடமான மரணம் எனில், உடல் பரிசோதனை முடிந்து ஃபாரன்ஸிக் டெஸ்டுக்குரியவை அனுப்பப்பட்டதன் பின்னர் மார்ச்சுவரிக்குக் கொண்டு வரப்படும்.

3. உடலைப் பெறுபவர் மரணமடைந்தவருக்கு உறவினர் எனில் அதற்கான ஆவணம் அல்லது நெருக்கமானவர் எனில், ஊரிலிருந்து மரணமடைந்தவரின் பெற்றோர் அல்லது கணவன்/மனைவியிடமிருந்து தாம் உடலைப் பெறுவதற்கான உறுதிபத்திரம் ஃபேக்ஸ் வழி பெற்று ஹமத் மருத்துவமனை மார்ச்சுவரியின் பின்பக்கமிருக்கும் Humanitarian Services அலுவலகம் செல்ல வேண்டும்.

4. அங்கு கவுண்டர் 1, 2 லிருந்து படிவம் பெற்று பூர்த்தி செய்து கொடுத்தால் ஹமத் மருத்துவமனை மருத்துவர் சான்றிதழ் கிடைக்கும். இதற்கு மரணமடைந்தவரின் பாஸ்போர்ட், ஐடி, உடலைப் பெறுபவரின் ஐடி கைவசம் வைத்திருக்கவேண்டும்.

5. கவுண்டர் 3,4 லிருந்து ஆரோக்கியத்துறையிடமிருந்து மரணச் சான்றிதழும், மார்ச்சுவரியிலிருந்து உடலை ரிலீஸ் செய்வதற்கான அனுமதியும் கூடவே, ஊருக்குக் கொண்டு செல்வது எனில் கஸ்டம்ஸில் சமர்ப்பிப்பதற்கான சான்றிதழும் கத்தரிலேயே இறுதி சடங்கு முடிப்பது எனில் அதற்கு அனுமதியளிக்கும் உத்தரவும் கிடைக்கும்.

இவை கிடைப்பதற்கு, 1,2 கவுண்டரிலிருந்து கிடைத்த மருத்துவர் சான்றிதழ், காவல்துறை ரிப்போர்ட் நகல், இறந்தவர் பாஸ்போர்ட் மற்றும் ஐடி, உடலைப் பெறுபவர் ஐடி முதலானவை கைவசம் வைத்திருக்க வேண்டும்.

6. அடுத்து 5,6,7 லுள்ள உள்துறை அமைச்சக கவுண்டர்களில் இறந்தவரின் விசா-RP கேன்சல் செய்து எக்ஸிட் பெர்மிட் பெற வேண்டும். இதற்கு, முந்தைய கவுண்டர்களிலிருந்து பெற்ற அனைத்து ஆவணங்களும் தேவை.

7. 8 ஆவது கவுண்டரில் கத்தர் ஏர்வேய்ஸ் கார்கோ மற்றும் டிக்கட் புக்கிங் செய்யலாம். இதற்கு மரணச் சான்றிதழுடன் எக்சிட் பெர்மிட் மற்றும் எம்பஸி கடிதம் சமர்ப்பிக்க வேண்டும். எம்பசி கடிதம் பெறவும் அங்கேயே வெளிநாட்டுத் தூதரக கவுண்டரில் வசதி செய்யப்பட்டுள்ளது.

கார்கோ மற்றும் டிக்கட் புக்கிங் முடிந்துவிட்டால், நேரடியாக மார்ச்சுவரி சென்று மார்ச்சுவரி உடல் ரிலீஸ் சான்றிதழ் சமர்ப்பிக்கும்பட்சத்தில், ஊருக்கு அனுப்புவது எனில் கஸ்டம்ஸுக்கோ அல்லது கத்தரிலேயே இறுதிகிரியை செய்வது எனில் குறிப்பிட்டப் பகுதிக்கோ உடலை ஆம்புலன்ஸில் கொண்டு வந்து சேர்ப்பர்.

ஊருக்குக் கொண்டு செல்லும்பட்சத்தில் உடலுடன் ஒருவர் செல்ல வேண்டும். கத்தர் ஏர்வேய்ஸ் கவுண்டரிலேயே அவருக்குரிய டிக்கெட்டும் சேர்த்து புக் செய்ய வேண்டும்.

இவையன்றி,

பிரார்த்தனை செய்ய வேண்டுமென விரும்புபவர்களுக்கு முஸ்லிம்கள் எனில், ஹமத் பெண்கள் மருத்துவமனையின் பின்பக்கமிருக்கும் பள்ளிவாசலிலும் முஸ்லிமல்லாதவர் எனில் வக்ரா எமர்ஜென்ஸியில் அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள தனி அறையிலும் வசதி செய்யப்பட்டுள்ளது. மெஸைமீர் சர்ச்சிலும் பிரார்த்தனை செய்யலாம்.

இம்முறையினால், ஒரே நாளில் சில மணி நேரங்களிலேயே அனைத்து நடைமுறைகளையும் முடித்து உடலைப் பெற்றுக்கொள்ள முடியும்.

மேலதிக விபரம் தேவைப்படுவோர்,

ஹமத் மருத்துவமனை மார்ச்சுவரியின் பின்புறம் அமைந்துள்ள Humanitarian Services அலுவலகத்தின் குறிப்பிட்ட கவுண்டர்களைக் கீழ்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளலாம்:

* Ministry of Interior - 4025 3369, 4025 3371, 4025 3372

* Ministry of Public Health - 4025 3370, 4025 3364

* Hamad Medical Corporation - 4025 3368, 4025 3365

* Qatar Airways - 4025 3374

முக்கிய குறிப்பு : பல்லாண்டுகளாக, கத்தரில் மரணமடையும் வெளிநாட்டினரின் உடல்களுக்கு இறுதி கிரியை செய்யவும் அல்லது ஊருக்கு அனுப்பி வைக்கவும் எல்லா விதமான உதவிகளையும் ஜாதி, மதம், இனம், மொழி, நாடு வித்தியாசம் பாராமல் செய்து வந்தவர் ஹாஜிக்கா என அறியப்பட்ட அப்துல் காதர் ஹாஜி. கத்தரில் எந்த மூலையில் ஒரு மரணம் நிகழ்ந்தாலும் சரி, ஒரு ஃபோன் கால் செய்தால் போதும். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இறுதிவரை நின்று எல்லா உதவிகளையும் செய்துமுடிப்பார். எவ்வித பிரதிபலனும் எதிர்பாராமல் பன்னெடுங்காலம் இவர் செய்து வந்த இந்தச் சமூகப்பணிக்குக் கத்தர் அரசும் தூதரகங்களும் எல்லாவித உதவிகளும் செய்து கொடுத்துள்ளன. தற்போது இவரின் சீடர் என்றே அறியப்படும் திரு. அப்துல் ஸலாம் இப்பணியினைத் தொடர்கிறார்.

மரணம் தொடர்பான விசயத்தில் சந்தேகங்களுக்கும் உதவிக்கும் 6642 6696 எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
( சகோ - அப்துர் ரஹ்மான் - அநட)

Author: verified_user

0 comments: