Tuesday, 10 April 2018

திருமண ஆசையில் சவுதிக்கு சென்ற பெண்: பாலியல் கொடுமைக்கு ஆளான அவலம்

ஹைதராபாத்தை சேர்ந்த பெண் திருமண ஆசை காட்டப்பட்டு சவுதிக்கு கடத்தி செல்லப்பட்ட நிலையில், அவர் தற்போது எங்கு இருக்கிறார் என தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஷகிரா பேகம் என்ற பெண் கடந்த 2014-லிருந்து சவுதியின் மிடினா நகரில் காணாமல் போயுள்ளார்.

முன்னர் தனது குடும்பத்தாருடன் ஷகிரா தொடர்பு கொண்ட செல்போன் நம்பரை தற்போது தொடர்பு கொள்ளமுடியவில்லை. இதையடுத்து ஷகிராவின் தாய் ஜகிதா பேகமின் புகாரின் பேரில், சவுதியில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் ஷகிராவை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

ஜகிதா கூறுகையில், என் மகளிடம் கடைசியாக கடந்தாண்டு யூன் மாதம் போனில் பேசினேன், அப்போது தனது முதலாளி தனக்கு பாலியல் துன்புறுத்தல் அளிப்பதாக அவர் கூறினார்.

தற்போது ஷகிராவின் நிலை என்னவென்றே தெரியவில்லை. இது குறித்து இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு கடிதம் எழுதியுள்ளேன் என கூறியுள்ளார். அதில், தனது மகள் ஏஜண்டால் சவுதியில் ஏமாற்றி விற்கபட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

ஷகிராவுக்கு திருமணமாகி 4 குழந்தைகள் உள்ள நிலையில் அவர் கணவர் உயிரிழந்துள்ளார். பின்னர் அவர் உறவினரான முகமது ஜாபர் என்பவர் ஷகிராவை மறுமணம் செய்யவிரும்புவதாக கூறியுள்ளார்.

மேலும், சவுதிக்கு சென்று தான் ஓட்டுனராகவும், ஷகிரா வீட்டு வேலையும் செய்து பிழைத்து கொள்கிறோம் என கூறி ஷகிராவை துபாய்க்கு கூட்டி சென்றுள்ளார்.

பின்னர் நைசாக ஷகிராவை கழற்றிவிட்டு முகமது ஹைதராபாத் திரும்பியுள்ளார், ஷகிரா சவுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

பின்னர் முகமதை, ஜகிதா சந்தித்த போது முதல் மனைவியுடன் அவர் வாழ்ந்து வருவது தெரியவந்தது. மேலும், ஷகிரா சவுதிக்கு அனுப்பட்டதற்கும் தனக்கும் எந்த தொடர்பும் கிடையாது என முகமது கூறியுள்ளார்.

இதையடுத்தே ஜகிதா சுஷ்மா சுவராஜிடம் தனது மகளை மீட்டு தருமாறு கோரிக்கை வைத்துள்ளார்.

Author: verified_user

0 comments: