Sunday, 11 March 2018

சவூதிக் கூட்டணி நாடுகளின் பொருளாதாரத் தடை கத்தாரை துளியளவும் பாதிக்கவில்லை - IMF தெரிவிப்பு!

கத்தர் மீது பிற அரபுநாடுகள் விதித்த தடை நாளுக்குநாள் வளர்ந்து வரும் கத்தரின் சுயசார்பு திறனால் பிசுபிசுத்துக் கொண்டிருக்கிறது என சர்வதேச நிதியம் அறிவித்துள்ளது.

கத்தர் தம்முடைய 80 சதவீதத்துக்கும் அதிகமான உணவுபொருள் தேவைக்கு அதன் சகோதர நாடுகளான அமீரகம் மற்றும் சவூதியினையே சார்ந்திருந்தது. கத்தரின் ஒரே தரைவழி சர்வதேச போக்குவரத்து சவூதியின் வழியாக மட்டுமே சாத்தியம் என்பதால், கிட்டத்தட்ட முழுமையாக அது சவூதியினைச் சார்ந்திருந்தது. துபை மற்றும் இன்ன பிற நாடுகளிலிருந்து தரைவழி பொருட்கள் சவூதி சாலை வழியாகவே கத்தரினுள் நுழைந்தாக வேண்டும். ஆனால், இப்பாதையினை சவூதி மூடிவிட்டதால், கத்தர் தம் குடிமக்களுக்குத் தேவையான உணவுபொருட்கள் வினியோகிக்க முடியாமல் உடனடியாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடுமென சவூதி எதிர்பார்த்தது.

ஆனால், தடை விதித்த நிமிடம் முதல் சுழன்று இயங்கிய கத்தர் அரசு நிர்வாகம், அனைத்து உணவு பொருட்களுக்கும் சுயசார்பு அடையும் விதத்தில் உள்நாட்டு உற்பத்தியை முடுக்கி விட்டது. தடை விதித்த அடுத்த சில நாட்களிலேயே 4000 ஜெர்சி பசுக்களை விமானம் மூலம் கத்தர் கொண்டு வந்து இறக்கி, பால் பொருட்களுக்கான உற்பத்தி பண்ணையினைத் தொடங்கியது.

இது போன்றே, காய்கறி, இறைச்சி, மீன் முதலான தினசரி அத்தியாவசிய பொருட்கள் அனைத்தையும் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யும் வகையில் பல பண்ணைகளும் தோட்டங்களும் அதிவேகத்தில் உருவாக்கப்பட்டன.

தடைக்குப் பின்னர் மட்டும் இந்த 9 மாத கால அளவில் 4000 புதிய வியாபாரங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக கத்தர் வணிகத்துறை அறிவித்துள்ளது.

கிட்டத்தட்ட முழுமையாக தற்சார்பு அடையும் விதத்தில் கத்தர் மாறிவருகிறது. இந்நிலையில், எவரையும் சாராமல் தனித்து இயங்கத்தக்க வகையில் கத்தர் தம்மீதான தடையினைச் சமாளித்து ஸ்திரத்தன்மையை அடைந்துவிட்டது எனவும் அதன் மீது பிற அரபு நாடுகள் கொண்டு வந்த பொருளாதாரத் தடையால் எந்தப் பலனும் ஏற்படவில்லை எனவும் தடை நாளுக்கு நாள் பிசுபிசுத்து வருகிறது எனவும் சர்வதேச நிதியமான International Monetary Fund(IMF) தெரிவித்துள்ளது.
(அப்துர் ரஹ்மான்)

Author: verified_user

0 comments: