Tuesday, 6 March 2018

சவூதியிலிருந்து மறைத்து இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்ட பூனை! திருப்பி அனுப்பப்பட்டது

சவுதி அரேபியாவிலிருந்து கேரள விமான நிலையம் வந்த தம்பதியினர், பூனைக்குட்டி ஒன்றைத் தங்கள் பையில்போட்டு தூக்கிக் கொண்டு வந்த சம்பவம், வைரலாகப் பரவிவருகிறது. 

சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் தங்கி பணிபுரிந்துவந்த கேரளாவைச் சேர்ந்த தம்பதியினர், கடந்த 2-ம் தேதி அன்று ஜெட்டாவிலிருந்து சவுதி ஏர்லைன்ஸ் விமானம்மூலம் கொச்சியில் உள்ள நெடும்பாச்சேரி விமான நிலையம் வந்தடைந்தனர். 

சவுதியிலிருந்து, அவர்கள் கொண்டுவந்த உடைமைகளை, சுங்கத்துறை அதிகாரிகள் சோதனைசெய்தனர். அப்போது, அவர்களின் பொருள்கள் அடங்கிய பை ஒன்றில் பூனைக்குட்டி இருப்பதைக் கண்ட அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இதைப்பற்றி, அந்தத் தம்பதியினரிடம் விசாரித்ததில், பூனைக்குட்டி எவ்வாறு இந்தப் பைக்குள் வந்தது என்று தெரியவில்லை என்றும் பூனையை இந்தியாவுக்குக் கொண்டுவருவதற்கான ஆவணங்களும் இல்லை என்றும் தெரிவித்தனர். இதையடுத்து, பூனைக்குட்டியை சுங்க அதிகாரிகள் கைப்பற்றினர். 

இந்தச் சம்பவம்பற்றி அதிகாரி ஒருவர் கூறுகையில், வெளிநாட்டிலிருந்து செல்லப் பிராணிகளை, இந்தியாவில் உள்ள டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் விமான நிலையங்கள் வழியாகத்தான் கொண்டு வரவேண்டும். இந்த விமான நிலையங்களில்தான் பிராணிகளைச் சோதனைசெய்யும் அறை மற்றும் அதிகாரிகள் உள்ளனர். மேலும், வெளிநாட்டிலிருந்து பிராணிகளை இங்கு கொண்டுவர உரிய ஆவணங்களும் இருக்க வேண்டும் என்றார். 

ஆனால், இந்தத் தம்பதியினரிடம் உரிய ஆவணங்கள் இல்லை. அதுமட்டுமன்றி, அவர்கள் கொச்சி வழியாகப் பூனையைக் கொண்டு வந்தது தவறு. அதனால், அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். பூனையை மீண்டும் சவுதி அரேபியாவுக்குத் திருப்பி அனுப்ப ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

 அதனால், கேரளாவிலிருந்து சவுதி அரேபியா சென்ற, நண்பர் குடும்பத்தினர் மூலம் அந்தப் பூனையை மீண்டும் சவுதி அரேபியாவுக்கு அனுப்பி வைக்க அந்தத் தம்பதியினர் ஏற்பாடு செய்தனர். இதையடுத்து, நேற்று அந்தப் பூனை கொச்சியிலிருந்து மீண்டும் சவுதி அரேபியாவுக்குப் அனுப்பி வைக்கப்பட்டது.

Author: verified_user

0 comments: