Wednesday, 21 March 2018

இஸ்லாமிய மாணவிகளின் மார்பகங்கள் குறித்து பேராசிரியர் சர்ச்சை பேச்சு: கேரளாவில் தர்பூசணி பேரணி

இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப்பை சரியாக அணிவதில்லை, மார்பகங்கள் தெரியுமாறு ஆடை அணிகின்றனர் என்று விமர்சித்த பேராசிரியரை கண்டித்து கேரளாவில் கல்லூரி மாணவ-மாணவிகள் தர்பூசணி பேரணி நடத்தினர்.

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள ஃபரூக் பயிற்சி கல்லூரியில் ஏராளமான இஸ்லாமிய மாணவிகள் படித்து வருகின்றனர். அந்தக் கல்லூரியில் ஜுஹர் முனவர் என்பவர் பேராசிரியராக பணியாற்றுகிறார். இந்நிலையில், அதில் இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நிறைய பேர் கலந்து நிகழ்ச்சி ஒன்றில் அவர் உரையாற்றினார்.



அந்த நிகழ்ச்சியில் ஜுஹர் முனவர் பேசுகையில், “இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப்பை சரியாக அணிவதில்லை. தர்பூசணி பழத்தை பிளந்தால் எவ்வாறு இருக்குமோ, அவ்வாறு தங்களின் மார்பகங்கள் தெரியுமாறு ஆடை அணிகின்றனர். இஸ்லாமிய பெண்கள் லெக்கிங்ஸ் தெரியுமாறு புர்கா அணிகின்றனர் என்றார்.

மேலும் அவர் பேசுகையில், இஸ்லாமிய பெண்கள் முப்தா அணிய வேண்டாம். அதற்கு பதிலாக ஷால்ஸ்கார்ப் மூலம் தலையை மூடிக் கொள்ள வேண்டும். ஆண்களைக் கவரும் முக்கிய பாகங்களில் பெண்களின் மார்பகமும் ஒன்று. அதனை மறைத்துக் கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் வழிகாட்டியுள்ளது என்று கூறினார்.

அவரது இந்தப் பேச்சைக் கேட்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, கல்லூரி மாணவ அமைப்புகள் சார்பில் பேராசிரியர் ஜுஹர் முனவருக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும், “ஆசிரியர் தங்கள் முகத்தைப் பார்த்து பாடம் நடத்தினால் போதும். உடலைப் பார்த்து பாடம் எடுக்க வேண்டாம்” என்று கோழிக்கோடு பல்கலைக்கழக மாணவர் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்தது.

இந்நிலையில், பேராசிரியர் ஜுஹர் முனவரை கண்டித்து கேரளாவில் உள்ள ஒரு கல்லூரியின் மாணவ-மாணவிகள் நூதனமான முறையில் தர்ப்பூசணி பேரணி நடத்தினர். மேலும், தர்பூசணி பழங்களை அனைவருக்கும் வழங்கியும், உடைத்தும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் குறித்து பரூக் பயிற்சி கல்லூரியின் முதல்வர் சி.ஏ. ஜவஹர் பேசுகையில், “இது 3 மாதங்களுக்கு முன் கல்லூரிக்கு வெளியே பேசப்பட்ட நிகழ்வு. இது தொடர்பாக புகார் எதுவும் வரவில்லை. அதனால் இது தொடர்பாக எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாது” என்று தெரிவித்துள்ளார்.



Author: verified_user

0 comments: