Thursday, 29 March 2018

கத்தர், துருக்கியிலுள்ள தமது இராணுவ தளங்களை மூடும் எண்ணமில்லை - அமெரிக்கா

கத்தர் மற்றும் துருக்கியில் அமைந்துள்ள தமது இராணுவ தளங்களை மூடும் எண்ணமில்லை என அமெரிக்கா அறிவித்துள்ளது.

சுமார் 9000 வீரர்களைக் கொண்ட, விமான ஓடுபாதையுடன் கூடிய அமெரிக்காவின் பெரிய இராணுவ தளம் கத்தரில் அமைந்துள்ளது. அதே போன்று துருக்கியிலும் அதன் இராணுவ தளம் உள்ளது.

சிரியாவில் அமெரிக்கா ஆதரிக்கும் குர்துகளிடமிருந்து அஃப்ரின் நகரை துருக்கி சமீபத்தில் மீட்டது. இதனால் அமெரிக்காவுக்கும் துருக்கிக்குமிடையே பிரச்சனை மூண்டுள்ளது.

ஏற்கெனவே, சவூதி முதலான அரபு நாடுகள் கத்தரின் மீதான தடையின்போது அமெரிக்கா தம் இராணுவ தளத்தைக் கத்தரிலிருந்து மாற்றி தம் நாட்டில் அமைக்கக் கோரிக்கை விடுத்தன. தடை விதிக்கப்பட்ட நிமிடத்திலேயே, துருக்கியின் 5000 துருப்புகளைக் கத்தர் இறக்கியதோடு, துருக்கியின் இராணுவ தளம் ஒன்றை கத்தரில் அமைப்பதற்கான ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டு அதற்கான வேலைகள் வேகமாக நடந்து வருகின்றன.

அமெரிக்கா கத்தரிலிருந்து தம் தளத்தை விலக்கிக் கொள்ளும்பட்சத்தில், அடுத்த நிமிடத்திலேயே கத்தரின் மீது சவூதி முதலான நாடுகள் இராணுவ நடவடிக்கையினை மேற்கொள்ளும் என கருதப்படுகிறது. இதற்காகவே அமெரிக்காவின் தளத்தினைக் கத்தரிலிருந்து நீக்கி தம் நாட்டில் அமைக்க துபை வெளிப்படையாக கோரிக்கையும் விடுத்தது.

கத்தர் மீது தடை விதித்ததன் பின்னர் கடந்த 9 மாதங்களுக்குள் மட்டும் அமீரகத்தின் விமானப்படை விமானங்கள் கத்தரின் வான் எல்லைக்குள் அனுமதியின்று நுழைந்தது, கத்தருக்கு விடுத்த எச்சரிக்கையாகவும் கருதப்படுகிறது.

அமெரிக்க இராணுவ தளத்தை எப்படியாவது கத்தரிலிருந்து நீக்கிவிட தொடர்ந்து இந்நாடுகள் முயற்சி செய்து வரும் நிலையில், கத்தருக்கு உதவும் துருக்கியுடனும் அமெரிக்கா முட்டிக் கொண்டுள்ள இச்சந்தர்ப்பத்தில் இரு நாட்கள் முன்னர் துருக்கி மற்றும் கத்தரிலிருந்து அமெரிக்கா தம் இராணுவ தளங்களை மூடிவிடப் போவதாக இஸ்ரேல் பத்திரிகையில் செய்தியொன்று வெளியானது. இதற்கான வேலைகளை அமெரிக்கா ஆரம்பித்து விட்டதாகவும் மிக விரைவில் அந்நாடுகளிலிருந்து அமெரிக்காவின் வீரர்கள் மற்றும் இராணுவ தளவாடங்களை அமெரிக்கா பக்கத்திலுள்ள ஒரு அரபு நாட்டுக்கு மாற்றும் எனவும் செய்தி வெளியானது.

இதனையே அமெரிக்க இராணுவ மையம் நிராகரித்துள்ளது. அவ்வாறான எந்த ஒரு எண்ணமும் தமக்கில்லை எனவும் கத்தர் மற்றும் துருக்கியில் தம் இராணுவ தளங்கள் அப்படியே தொடரும் எனவும் அறிவித்துள்ளது.

இதற்கிடையில், ரஷ்ய அதிபர் புடினின் அழைப்பை ஏற்று கத்தர் அமீர் தமீம் பின் ஹமத் அல்தானி நேற்று ரஷ்யா சென்றடைந்தார். அங்கு அதிபர் புடினுடன் சிரிய பிரச்சனை முதலான அரபு பிரதேசப் பிரச்சனைகள் குறித்து அவர் ஆலோசனை நடத்தினார்.

அரபு பிரதேசத்தினுள் ஆதிக்கத்தை வலுப்படுத்த அமெரிக்கா, சவூதி கைப்பாவையின் வழியாக கத்தருக்குக் கொடுக்கும் நெருக்கடி, இப்பிரதேசத்தின் அரசியல் நிகழ்வுகளை வேறொரு திசை நோக்கி நகர்த்தி செல்லும் என்பதையே இந்நிகழ்வுகள் பறைசாற்றுகின்றன.

சவூதியின் மிரட்டலுக்கு அஞ்சாமல், துருக்கி - ஈரான் - ரஷ்யா ஆகியவற்றின் துணையினை வாங்கும் நெருக்கடிக்கு கத்தரைத் தள்ளிய சவூதியின் அரசியல் காய் நகர்த்தல் மத்திய கிழக்கில் புதிய கூட்டணிகளை உருவாக்கும் நிலைமையை ஏற்படுத்தியுள்ளது. 
(Abdur Rahman)

Author: verified_user

0 comments: