Wednesday, 7 March 2018

எச்சரிக்கையாக இருங்கள்! அவசரகால சட்டத்தை மீறுவோருக்கு ஆயுள் தண்டனை

அவசரகால சட்டத்தை மீறுவோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரூவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பிரிவில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

அவசரகால சட்டம் நாட்டில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சட்டத்தின் அடிப்படையிலான குற்றச் செயல்களுக்கு ஆயுள் தண்டனை அல்லது 20 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட முடியும்.

அவசரகால சட்டத்தை மீறுவோரை பொலிஸாரைத் தவிர முப்படையினரும் கைது செய்ய முடியும்.

கைது செய்யப்படும் சந்தேக நபர்கள் 24 மணித்தியாலங்களுக்குள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும்.

அவசரகாலச் சட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலிஸாருக்கும் படையினருக்கும் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

நாட்டின் சில பகுதிகளில் நிலவி வரும் பதற்ற சூழ்நிலையை தணிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், பிரஜைகளின் உரிமைகளுக்கு பங்கம் ஏற்படாத வகையில் நாட்டின் சட்டம் ஒழுங்கினை நிலைநாட்ட வேண்டும் எனவும் ஜனாதிபதி பணித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் குறித்து அரசாங்கம் அடிக்கடி மதிப்பீடுகளை செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

Author: verified_user

0 comments: