Friday, 9 March 2018

துபையில் இந்திய ஓட்டுனருக்கு வெகுமதி, சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு!

துபையில் பொதுவாக போலீஸாரோ அல்லது போக்குவரத்து துறை அதிகாரிகளோ வாகனத்தை ஓரங்கட்டினாலேயே நிச்சயம் அபராதம் எனும் மொய் எழுதவே நிறுத்துவதாக கருதத் தோன்றும் ஆனால் மாற்றாக அவர்கள் பணப்பரிசு வழங்கி கவுரவித்தால் அது இன்பப் பேரதிர்வாகவே அமையும், அமைந்தது.

துபை போலீஸ், ஷார்ஜா போலீஸ் மற்றும் Ciel Marketing and Events நிறுவனம் ஆகியவை இணைந்து 3 நாட்களுக்கு துபை மற்றும் ஷார்ஜா ஆகிய 2 எமிரேட்டுகளில் போக்குவரத்து விதிகளை மதிக்கும் பாதுகாப்பான ஓட்டுனர்கள், சைக்கிள் ஓட்டிகள், சீட் பெல்ட் அணிந்தவர்கள், மொபைல் போன் பேசாமல் வாகனம் ஓட்டுபவர்கள், லேன் ஒழுங்குகளை பேணுபவர்கள், குழந்தைகளுக்கான பாதுகாப்பு இருக்கைகளை உபயோகித்தவர்கள், முறையாக இண்டிகேட்டர்களை உபயோகித்தவர்கள், வேகக் கட்டுப்பாடுகளை மதித்தவர்ககள் போன்றோரை ரகசியமாக கண்காணித்து தீடீர் ஆச்சரியப் பரிசுகளை வழங்கி ஆச்சரியப்படுத்துகின்றனர்.

மேலும் பல ஆண்டுகளாக போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் விபத்துக்களில் சிக்காமல் வாகனம் ஓட்டியவர்களையும் தேர்ந்தெடுத்து பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர். அந்த வகையில் கடந்த 6 வருடங்களாக பள்ளிக்கூடப் பேருந்தை இயக்கி வரும் கேரளாவைச் சேர்ந்த அனில்குமார், 4 வருடங்களாக பாதுகாப்பாக வாகன இயக்கும் பிலிப்பைன்ஸை சேர்ந்த விற்பனை பிரதிநிதி மேக்கி ஜேன் மற்றும் 40 வருடங்களாக வாகனம் ஓட்டும் இமராத்தை சேர்ந்த 60 வயது வர்த்தகர் மட்டார் கலீபா ஆகியோர் சர்ப்ரைஸ் தேர்வுகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு தலா 1,000 திர்ஹம் ரொக்கம் மற்றும் The Responsible Road User Award என்கிற நற்சான்றிதழ் ஆகியவை பொதுமக்கள், போலீஸ் அதிகாரிகள், போக்குவரத்து அதிகாரிகள் முன்னிலையில் வழங்கப்பட்டு பாராட்டப்பட்டனர். இந்த பரிசுத்திட்டம் மார்ச் 7 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்


Author: verified_user

0 comments: