Monday, 19 February 2018

UNP யில் அதிரடி மாற்றங்கள்! 24 வருட தலைமைப் பதவியை துறக்கிறார் ரணில் விக்ரமசிங்க

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவி உட்பட உயர்மட்டப் பதவிகளில் மாற்றம் ஏற்படாவிட்டால் தமக்கு தொகுதி அமைப்பாளர் பதவியைத் துறப்பதைவிட வேறுவழியில்லை என்று ஐ.தே.கவின் உறுப்பினர்கள் நேற்று திட்டவட்டமாக அறிவித்துள்ளனர். அத்துடன், கட்சியில் முன்னெடுக்கப்படவேண்டிய மறுசீரமைப்பு நடவடிக்கைகள் சம்பந்தமாகவும் அவர்கள் கடுந்தொனியில் கருத்துகளை முன்வைத்துள்ளனர்.

இதையடுத்து கட்சியின் தலைமைப் பதவியிலும், ஏனைய முக்கிய பதவிகளிலும் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. இதன்படி கட்சித் தலைவரான ரணில் விக்கிரமசிங்க விரைவில் பதவி துறப்பாரென அறியமுடிகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களுக்கிடையிலான விசேட கூட்டமொன்று கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று பொதுச் செயலாளர் கபீர் ஹாசிம் தலைமையில் நடைபெற்றது.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக எத்தனை உறுப்பினர்கள் இருக்கின்றனர் என்பதை அறிவதற்காகவே இந்தக் கூட்டம் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. நேற்று முற்பகல் முதலே கையொப்பம் திரட்டும் பணி ஆரம்பமாகியது. ஜனாதிபதி மற்றும் சபாநாயகரிடம் கையளிப்பதற்காகவே இவ்வாறு கையொப்பம் திரட்டப்பட்டுவருகின்றது.

பிரதமராக ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் ஆதரவாக இருப்பதற்கு பச்சைக்கொடி காட்டிய உறுப்பினர்கள், கட்சியின் தலைமை உட்பட பாரிய கட்டமைப்பு மாற்றங்களை கட்சிக்குள் ஏற்படுத்தவேண்டும். இத்தீர்மானம் ஒரு மாத காலத்துக்குள் அமுல்படுத்தப்படவேண்டும். அவ்வாறில்லையேல் தொகுதி அமைப்பாளர் பதவிகளை இராஜிநாமா செய்யவேண்டிவரும் என்று எச்சரித்துள்ளனர்.

இதையடுத்து மேற்படி தீர்மானம் ஒரு மாத காலத்துக்குள் நிறைவேற்றப்படும் என்று கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாசிம் உறுதியளித்துள்ளார். இதன்படி 24 வருடங்களாக ஐ.தே.கவின் தலைவர் பதவியை வகித்துவந்த ரணில் விக்கிரமசிங்க பதவி துறப்பார் என்றும், கட்சியின் ஆலோசகர் அல்லது சிரேஷ்ட தலைவர் என்ற பதவி உருவாக்கப்படும் என்றும் தெரியவருகின்றது.

கட்சிக்குள்ளும், வெளியிலிருந்தும் அழுத்தங்கள் வந்ததையடுத்து தலைமைப் பதவியை விட்டுக்கொடுப்பதற்கு தான் தயார் என்ற அறிவிப்பை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Author: verified_user

0 comments: