Monday, 12 February 2018

எனக்கு பிரதமர் பதவி வேண்டாம்.. செய்ய வேண்டிய எத்தனையோ பணிகள் உள்ளன.

எனக்கு பிரதமர் பதவி வேண்டாம், இந்த தேர்தல் முடிவுகளின் பின்னர் செய்ய வேண்டிய எத்தனையோ பணிகள் உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

தாம் நாட்டின் பிரதமர் ஆக விரும்புகிறீர்களா? என தேர்தல் முடிவுகளின் பின்னர் ஊடகவியலாளர் ஒருவர் அவரிடம் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே இதனைக் கூறினார்.

கடந்த 3 வருடங்களாக நாட்டு மக்கள் இந்த அரசாங்கத்தினால் அடைந்த துன்பம் எத்தகையது என்பதை இந்த தேர்தல் மூலம் எடுத்துக் காட்டியுள்ளனர்.

எதிர்க் கட்சியொன்றுக்கு இருக்க வேண்டிய உரிமைகள் கூட இல்லாத ஒரு நிலையில் இதுபோன்ற வரலாறு காணாத வெற்றியை நாம் அடைந்துள்ளோம்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கு வாக்களித்த சகல மக்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் மஹிந்த ராஜபக்ஷ எம்.பி. மேலும் குறிப்பிட்டார். 

மேலும் கிராமத்தை மட்டுமல்ல, எப்போதும் வெற்றி பெறவே முடியாது என்றிருந்த நகரங்களையும் இந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மக்களின் மனங்களை வென்றவர்கள் என்றும் மறையப்போவது கிடையாது. நல்லாட்சி அரசாங்கம் எம்மை பழிவாங்கினாலும். நாட்டு மக்கள் கைவிடவில்லை. நல்லாட்சி அரசாங்கத்தின் மீது நாட்டு மக்கள் கொண்டுள்ள பற்று தற்போது வெளிப்பட்டுள்ளது.


கிடைக்கப்பெற்ற இந்த வெற்றி பாரிய அபிவிருத்திக்கான ஒரு பாதையினை உருவாக்கி கொடுத்துள்ளது. இதனை பயன்படுத்தி எதிர்காலத்தில் நாட்டின் அபிவிருத்தி முன்னேற்றத்தினை ஏற்படுத்த பொதுமக்கள் தொடர்ந்தும் தமது ஆதரவினை வழங்க வேண்டும் எனவும் மஹிந்த ராஜபக்ஷ கேட்டுள்ளார்.

Author: verified_user

0 comments: