Friday, 9 February 2018

அமீரகத் தயாரிப்பில் உருவாகும் 'கலீபாசாட்' இந்த வருடம் விண்ணில் செலுத்த முடிவு !

அமீரகத்தின் முழுமையான சுய தயாரிப்பில் உருவாகும் கலீபாசாட் இந்த வருடம் விண்ணில் ஏவப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு சக்திகளின் உதவியின்றி முழுக்க முழுக்க அமீரக விஞ்ஞானிகள், எஞ்சினியர்களின் தயாரிப்பில் உருவான கலீபாசாட் எனும் தொலைத்தொடர்பு செயற்கைகோள் பல்வேறு கட்ட பரிசோதனைகளுக்குப் பின் இந்த வருட இறுதிக்குள் விண்ணில் ஏவப்படவுள்ளது. கலீபாசாட் செயற்கைகோள் திட்டம் கடந்த 2013 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

இந்த கலீபாசாட் திட்டத்தினை அமீரகத் துணை ஜனாதிபதியும், பிரதமரும், துபை ஆட்சியாளருமான ஷேக் முஹமது பின் ராஷித் அல் மக்தூம் அவர்கள் நேரில் பார்வையிட்டு அதில் ஈடுபட்டிருந்த அமீரக விஞ்ஞானிகள், எஞ்சினியர்களை பாராட்டினார்.

அமீரகம் ஏற்கனவே துபைசாட் - 1 மற்றும் துபைசாட் - 2 ஆகிய 2 சாட்டிலைட்டுகளை பிற நாட்டு விஞ்ஞானிகளின் உதவியுடன் தயாரித்து விண்ணில் நிலைநிறுத்தியுள்ளது. கலீபாசாட் அமீரகத்தின் 3 வது சாட்டிலைட்டாகும் என்றாலும் இதில் பிற நாட்டு விஞ்ஞானிகளின் உதவியின்றி தயாரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த கலீபாசாட் பரிசோதனைகளுக்குப் பின் ஜப்பானுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து மிட்ஷூபிஷி கனரக ராக்கெட்டில் வைத்து ஏவப்படவுள்ளதுடன் பூமியிலிருந்து சுமார் 613 கி.மீ தூர குறைந்த புவி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும் என முஹமது பின் ராஷித் விண்வெளி (Mohammad Bin Rashid Space Centre - MBRSC) ஆய்வு மையத்தினர் தெரிவித்துள்ளனர்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

Author: verified_user

0 comments: