Saturday, 10 February 2018

சிறுவனின் தலையை கவ்வி பிடித்த சிறுத்தை: நெஞ்சை உருக்கும் கோரச் சம்பவம்!

மலையக வாழ்க்கை மகத்தானதுதான்! சிட்டி வாழ்க்கையிலிருக்கும் சிக்கல்கள் மலை வாழ்க்கையில் இல்லைதான். ஆனாலும் கூட உயிருக்கும் உத்திரவாதம் இல்லையே என்பது தான் கொடுமையே! அதுவும் குழந்தைகளின் உயிருக்கு பாதுகாப்பின்றி கிடப்பதுதான் மலைக வாழ்க்கை அச்சத்தின் உச்சம்.

கோயமுத்தூர் மாவட்டம் வால்பாறை பாதுகாக்கப்பட்ட வனம் நிறைந்த பகுதி. நகரை ஒட்டியே வனம் இருக்கிறது. இரவு நேரங்களில் யானை, மான், காட்டு மாடு ஆகியன நகரை ஒட்டிய பகுதிகளில் வந்து மேய்ந்துவிட்டு செல்லும். இவற்றை மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் பெரும் தேயிலைக்காடுகளுக்கு நடுவிலிருக்கும் குடியிருப்புகளில் வாழும் மக்களுக்குதான் தினம் தினம் செத்துப் பிழைக்கும் வாழ்க்கை.காரணம்?

சூரிய வெளிச்சம் முடிந்துவிட்டாலே இந்த மக்கள் தங்களது வீட்டுக்குள் தஞ்சம் புகுந்தே ஆக வேண்டும். இல்லையென்றால் கரடி அல்லது சிறுத்தை ஆகியவற்றிடம் சிக்கி சின்னாபின்னமாவதற்கான வாய்ப்புகள் அதிகமிருக்கின்றன.

அதிலும் பெரிய மனிதர்கள் அசமந்தமாக கரடியிடம் சிக்கினால்தான் உண்டு. ஆனால் சிறுத்தையோ தனக்கு விலங்கு இரை கிடைக்காத நாட்களில் சட்டென்று குழந்தைகளை கவ்விக் கொண்டு சென்று தின்றுவிடும்.

இந்நிலையில் நேற்று மாலையில் வால்பாறை அருகே உள்ள நடுமலை எஸ்டேட்டை சேர்ந்த முஷரப் அலி மற்றும் சுபியா எனும் தொழிலாளர் தம்பதிகளின் மகன் சைதுல்(4) வீட்டின் பின்புறம் விளையாடிக் கொண்டிருந்தான்.

அப்போது அங்கிருக்கும் புதரில் மறைந்திருந்த சிறுத்தை சட்டென்று பாய்ந்து சிறுவனின் கழுத்தை கவ்வியது. இதில் சைதுல் அலற, அக்கம்பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். மக்கள் வருவதை கண்ட சிறுத்தை தனது பிடியை மேலும் இறுக்கியபடி சிறுவனை தரதரவென இழுத்து தேயிலைக்காட்டு புதர்களுக்குள் சென்று மறைந்ததுள்ளது.

முரட்டுத்தனமான தேயிலை செடிகளிலும், கரடுமுரடான பாதையிலும் சிக்கி சிறுவன் துடிக்க, கூடவே சிறுத்தையின் பற்களும் வலுவாக பாய ஒரு கட்டத்தில் சிறுவன் இறந்தான். அவனை தின்பதற்காக சிறுத்தை உதறிய உதறலில், அந்த குழந்தையின் தலைப்பகுதியானது உடம்பிலிருந்து தனியாக விழுந்துள்ளது.

பின் தலையை மட்டும் கவ்விக் கொண்டு சென்ற சிறுத்தை முகம் உள்ளிட்ட பாகங்களை தின்றுவிட்டு வெறும் மண்டை ஓட்டை மட்டும் விட்டுவிட்டு தப்பியுள்ளது.

புதருக்குள் தேடு தேடென தேடி குழந்தையின் உடலையும், மண்டை ஓட்டினையும் கண்டுபிடித்த அவனது பெற்றோர்களும், அக்கம் பக்க மக்களும் அழுது கதறியுள்ளனர்.

இந்நிலையில், என்ன செய்வதென்று அறியாமல் தினறிய வனத்துறை அதிகாரிகள், எஸ்டேட்களில் வசிக்கும் குடும்பங்கள் தங்கள் வீட்டு குட்டிக் குழந்தைகள் மீது எப்போதும் ஒரு கண் வைத்தபடியும், இருட்ட துவங்கியதுமே வீட்டிற்கு வெளியே செல்ல அனுமதிக்காமலும் இருக்கும்படியும் கேட்டுக் கொண்டிருக்கிறது.

தற்போது, வால்பாறையில் தங்களது குடியிருப்பிலிருந்து வனம் வழியே நடந்தே சென்று தூரத்திலுள்ள பள்ளியில் படிக்கும் குழந்தைகளை நினைத்தால்தான் பாவமாய் இருக்கிறது.

Author: verified_user

0 comments: