Tuesday, 13 February 2018

மஹிந்தவின் மீள் வருகை... முஸ்லிம்கள் சிந்திக்க சில விடயங்கள். - சிறப்புக் கட்டுரை

கடந்த 10.02.2018ம் திகதி நடைபெற்ற உள்ளாட்சி மன்றங்களுக்கான தேர்தலில் 340 உள்ளாட்சி சபைகளில் 239 சபைகளை தனிப்பெரும் பலத்துடன் கைப்பற்றியுள்ளது முன்னால் ஜனாதிபதியின் அனுசரணை பெற்ற பொது ஜன பெரமுன.

இலங்கை வரலாற்றில் எந்தவொரு தேர்தலிலும் எந்தவொரு கட்சியும் பெறாத வரலாற்று வெற்றியாகவே இது பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பும் பல தேர்தல்களை சந்தித்த மஹிந்த ராஜபக்ஷ கூட இப்போது பெற்ற வெற்றியை இதற்கு முன் பெறவில்லை.

இந்தத் தேர்தலில் மஹிந்த வென்றார் என்பதை விட இலங்கை வரலாற்றில் இப்படியொரு தோல்வியை எந்தவொரு ஆளும் கட்சியும் பெறவில்லை என்பதே உண்மையும்.

ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் தனித்தனியே போட்டியிட்டாலும் மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றியின் நிழலில் கூட அவர்களின் நிற்க்க முடியாத அளவுக்கு பாரிய வெற்றி மஹிந்தவுக்கும் படு தோல்வி மைத்திரி, ரனிலுக்கும் கிடைத்துள்ளது.

மஹிந்த என்ற தனி மனித செல்வாக்கை வெளிப்படுத்திய தேர்தல்.

இந்தத் தேர்தலைப் பொருத்த வரையில் வழமைக்கு மாறான ஒரு தேர்தலாகவே இது அமைந்துள்ளது.

வழமையான கட்சிகள், பலம்பெரும் தலைவர்கள், பாரம்பரிய கட்சி சின்னங்கள் என்று மக்கள் வாக்களிப்பதற்கு பழகிப் போன கட்சிகளுடன் எந்தவொரு அறிமுகமும் அற்ற ஒரு கட்சியாகவே பொது ஜன பெரமுன களம் கண்டது. கட்சி ஆரம்பித்தே வெரும் ஒன்றரை வருடங்கள் என்ற நிலையில் தான் களம் கண்டது பொது ஜன பெரமுன.

கை சின்னம், வெற்றிலை சின்னம் என ஜனாதிபதியின் மிகப் பிரபலமான சின்னத்துடன் கூடிய கட்சி களத்தில் இருந்தது. பச்சைப் பிள்ளைக்கும் அறிமுகமான ஐ.தே.க வின் யானை சின்னத்துடன் ரனில் தரப்பு களமிறங்கியது.

இந்நிலையில் எந்தவொரு பாரிய அறிமுகமும் அற்ற தாமரை மொட்டு சின்னத்தில் ஒருங்கினைந்த எதிரணி களமிறங்கியது. தமது வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட மஹரகம பகுதியில் மோட்டார் சைக்கில் சின்னத்திலும், பேருவலைப் பகுதியில் சுயேற்சையாகவும் களமிறங்கியது பொது ஜன பெரமுன.

இப்படி எந்தவொரு பாரிய அறிமுகமும் இல்லாத சின்னங்களுடன் களமிறங்கிய போதிலும் வரலாறு காணாத வெற்றியை இவர்கள் பெற்றமைக்கு ஒரே காரணமாக மஹிந்த என்ற தனி மனிதனே பார்க்கப்படுகிறார்.

யுத்தத்தை வெற்றி கொண்டார் என்பது மாத்திரம் இதற்கான காரணம் என்று சுருக்க பதில் சொல்லி விட முடியாது. யுத்தத்தை வெற்றி கொண்டார் என்பதைத் தாண்டி நாட்டில் பல அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்தார் என்பது பெரும் காரணமாகும்.

வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு என நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் இவர் முன்னெடுத்த அபிவிருத்தித் திட்டங்கள் இந்த வெற்றிக்கு பெரும் காரணமாக அமைந்துள்ளது எனலாம். ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு பெரும் காரணமாக அமைவது போக்குவரத்து ஆகும். இலங்கையின் போக்கு வரத்து முன்னேற்றமடைந்தமை என்பது மஹிந்தவின் ஆட்சிக் காலத்திலாகும்.

பாதைகள் சிறப்பாக அமைக்கப்பட்டு, அதிவேக நெடுஞ்சாலைகள் சிறப்பாக அமைக்கப்பட்டன. கொழும்பு உள்ளிட்ட நகரங்கள் தூய்மைப்படுத்தப்பட்டு, அழகாக்கப்பட்டது.

ஊழல் என்பது அனைத்து அரசாங்கங்களிலும் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி விட்டது. அதற்கு மஹிந்தவும், அவருடைய குடும்பம், சகாக்களும் விதி விலக்கல்ல. ஆனால் அவர் செய்த சேவைகள் பெரும்பான்மை மக்களிடம் அவரை ஒரு தேவநம்பிய திஸ்ஸவாகவே காட்சிப்படுத்தியுள்ளது.

மஹிந்தவை பார்த்த நேரத்தில் நாட்டைப் பார்த்திருக்கலாம்

ரனில், மைத்திரி கூட்டாட்சியைப் பொருத்த வரையில் கடந்த 2015ல் ஆட்சி அமைத்து மூன்று வருடங்களுக்குள் மஹிந்தவின் பின்னால் சென்ற நேரத்தில் நாட்டைப் பார்த்திருந்தால், அபிவிருத்திகளுக்கு முன்னுரிமை கொடுத்திருந்தால், கிராமங்களை அபிவிருத்தியின் பால் இட்டுச் சென்றிருந்தால் பாரிய வெற்றியை அவர்கள் இந்த தேர்தலில் சுவைத்திருக்கலாம்.

மஹிந்தவும், அவர் சகாக்களும் ஊழல், கொலை, கொள்ளையடித்தார்கள் என்று அனைத்து மேடைகளிலும் கூறித்திரிந்த ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவோ, பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவினாலோ மஹிந்த தரப்புக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் எடுக்க முடியாமல் போய்விட்டது. இதுவே மஹிந்தவின் மீது இவர்கள் ஆதாரமில்லாமல் குற்றம் சாட்டியுள்ளார்கள் என்ற நிலையை மக்கள் மத்தியில் உண்டாக்கி விட்டது.

இனவாதத்தை ஆரம்பித்தவர்கள் தோற்றுப் போனார்கள்

இனவாதத்தை காரணம் காட்டி முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்ற நல்லாட்சி அரசாங்கத்தினால் இனவாதம் செய்த பொது பல சேனாவையோ, ஞானசார, டான் பிரியசாத், அமித் வீரசிங்க போன்றவர்களையோ என்ன செய்ய முடிந்தது?

இனவாதத்தை தூண்டியது மஹிந்தவென்று கூறியவர்களினால் ஒரு இனவாதிக்கு எதிராகக் கூட நடவடிக்கை எடுக்க முடியாத கையறு நிலையே காணப்பட்டது. இதிலிருந்து இனவாதத்திற்கு காரணம் மஹிந்தவல்ல ஆட்சி பிடிப்பதற்கு நல்லாட்சி காரர்கள் செய்த சதிதான் அது என்பது நிரூபணமானது.

மஹிந்தவின் காலத்தில் அழிக்கப்பட்ட முஸ்லிம்களின் சொத்தை விட அதிகமாக மைத்திரி-ரனில் ஆட்சியில் அழிக்கப்பட்டது. அவர் காலத்தில் ஒரு அலுத்கமை கலவரம் என்றால் இவர்கள் காலத்தில் கிண்தொட்டை கலவரம் என்ற நிலை தான் காணப்பட்டது.

மஹிந்தவுடன் இருந்த அதே பாட்டலி சம்பிக்க ரணவக்க மைத்திரி-ரனில் கூட்டாட்சியிலும் முக்கிய அமைச்சுப் பொருப்பில் அமர்த்தப்பட்டார்.

பொது பல சேனா படமெடுத்து ஆடியது. ஆனால் பொது பல சேனாவின் இனவாதத்திற்கு எதிராக பேசிய தெளஹீத் ஜமாஅத்தின் முன்னால் செயலாளர் அப்துர் ராசிக் மாத்திரம் கைது செய்யப்பட்டு சுமார் ஒரு மாத காலம் சிறையிலும் அடைக்கப்பட்டார்.

இப்படி முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதத்தை தூண்டி அதன் மூலம் ஆட்சியை பிடித்துக் கொண்டவர்கள். தாம் ஆட்சிக்கு வந்தால் இனவாதத்தை முறியடிப்போம் என்று சொன்னாலும் இனவாதத்தின் வாடையை கூட இவர்களினால் இல்லாமலாக்க முடியவில்லை.

தாம் ஆட்சிக்கு வந்தால் பொது பல சேனாவை நாய்க் கூண்டில் அடைப்பேன் என்று சொன்ன சந்திரிக்கா அம்மையாரினால் கிளிக் கூண்டைக் கூட வாங்க முடியாத நிலையே காணப்பட்டது. இப்படி நல்லாட்சி என்ற பெயரில் இவர்கள் ஆடிய நாடகத்தின் இறுதிக் காட்சியே இந்த தேர்தல் தோல்வியாக பார்க்க வேண்டியுள்ளதே தவிர மஹிந்தவின் வருகையினால் மீண்டும் இனவாதம் ஆரம்பமாகும் என்ற பீதியை நாமே ஆரம்பிப்பதை தவிர்க்கலாமே?

மஹிந்த வந்தாலே இனவாதமும், மதவாதமும் வந்து விடும் என்று நினைத்தால் இவ்வளவு நாளாக நடந்தது என்ற மெளனவாதமா? இந்த அரசாங்கத்தின் வெரும் 03 வருட காலங்களில் சுமார் 300 கோடிக்கும் மேற்பட்ட முஸ்லிம்களின் சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டதே அந்த நேரத்தில் மஹிந்த ஆட்சியில் இல்லையே? இந்த 300 கோடிக்கும் நல்லாட்டி கேடிக்கல் தானே பொறுப்பானர்கள்?

என்.எம். அமீன் முந்திரக்கொட்டையாய் முந்திக் கொண்டது ஏன்?

மஹிந்த ராஜபக்ஷவின் பொது ஜன பெரமுன கட்சி வெற்றி பெற்றவுடன் மூத்த பத்திரிக்கையாளரும் ரனில் விக்கிரமசிங்கவின் ஆதரவாளரும், நவமணி பத்திரிக்கையாசிரியருமான என்.எம். அமீன் அவர்கள் பொது ஜன பெறமுன கட்சிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

குறித்த கடிதத்தில் ஒரு பிரதேசத்தில் இடம் பெற்ற தேர்தல் வன்முறையொன்றை சுட்டிக்காட்டி நீங்கள் ஆட்சி பீடம் ஏறியவுடனேயே இது போன்ற சம்பவங்கள் முஸ்லிம்களுக்கு நடைபெற ஆரம்பித்து விட்டது. ஆகவே இதனை தடுத்து நிறுத்துங்கள் என்று கோரியிருக்கிறார்.

என்.எம் அமீன் அவர்களின் கடிதம் பல விடயங்களை சுட்டி நிற்கிறது.

என். எம். அமீன் அவர்களின் முஸ்லிம் கவுன்சில் ஒப் சிரீலங்கா என்ற அமைப்பைப் பொருத்த வரையில் இதுவொரு லெட்டர்பேட் அமைப்பாகும் என்பது அனைவருக்கும் தெரியும். அவருக்கும் நன்றாகவே தெரியும்.

அறிக்கை விடுவதற்கு மாத்திரம் தான் இவர்களின் இந்த லெட்டர்பேட்கள் உபயோகப்படுமே தவிர வேறு எதற்கும் உபயோகமாவது இல்லை.

மக்கள் செல்வாக்கு மிக்க ஒரு இயக்கம் இதுவல்ல என்பது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் முந்திரிக்கொட்டையாய் முந்திக் கொண்டு மூத்த பத்திரிக்கையாளர் இந்த அறிக்கையை ஏன் வெளியிட்டார்?

இதில் உள்ள அரசியல் மிக எளிதானது.

இந்த நேரத்தில் தனக்கு முன்னால் உலமா சபையோ, அல்லது சூரா கவுன்சிலோ அல்லது வேறு ஒரு லெட்டர்பேட் இயக்கமோ இதனை செய்துவிடக் கூடாது என்பதே இவரின் அவசரத்திற்கு முதல் காரணம்.

இரண்டாவது காரணம், தனது ஐக்கிய தேசிய கட்சியின் மீதான அபிமானத்தையும், பிரதமர் ரனில் மீதான விசுவாசத்தையும் காட்டுவதே இதன் பிரதான நோக்கமாகும்.

ஏன் என்றால், தேர்தல் காலத்தில் தேர்தல் வன்முறைகள் நடைபெறுவது என்பது புதிய விடயமல்ல. மட்டுமல்லாமல் ஒரு இடத்தில் நடைபெற்ற சம்பவத்திற்காக உடனடியாக கடிதம் எழுதிய இவர் ஏன் மற்ற அசம்பாவிதங்கள் தொடர்பில் மெளனம் காத்தார்?

காத்தான்குடியில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தேர்தல் அலுவலகமும் இது போல் தாக்கப்பட்டதே இதற்காக ஏன் மைத்திரிபால சிரிசேனவுக்கு என்.எம் அமீன் கடிதம் எழுத வில்லை?

தாமரை மொட்டின் அலுவலகம் அமைந்திருந்த உலப்பனை முஸ்லிம் ஒருவரின் இடம் தாக்கப்பட்டதே அதனை நிறுத்துமாறு கோரி ஏன் ரனிலுக்கு இவர் கடிதம் எழுதவில்லை?

அடிப்படை அறிவற்ற செயலாகவே என்.எம் அமீன் அவர்களின் இந்த செயல் கணிக்கப்பட வேண்டும். காரணம் இது போன்ற அசம்பாவிதங்களை தவிர்ப்பது தான் இவரின் நோக்கமென்றால் உடனடியாக பொலிஸ்மா அதிபரை தொடர்பு கொண்டிருக்கலாம். கடிதம் எழுதியிருக்கலாம். தேர்தல்கள் தினைக்களத்தில் முறையிட்டிருக்கலாம், சட்டம் ஒழுங்கு அமைச்சருக்கு கடிதம் எழுதியிருக்கலாம். புத்திசாலித்தனமாக செய்ய வேண்டிய இத்தனை காரியங்களையும் விட்டு விட்டு உடனடியான பாய்ந்து கொண்டு பொது ஜன பெறமுனவுக்கு கடிதம் எழுதும் தேவையின் ரகசியம் ரனிலின் விசுவாசத்தில் வெளிப்படுகிறது.

புத்திசாலித்தனமாக நடக்க வேண்டிய முஸ்லிம்கள்

நடந்து முடிந்த தேர்தலைப் பொருத்த வரையில் எந்தவொரு முஸ்லிம் கட்சியின் துணையும் இல்லாமல் தனித்து பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது மஹிந்த அணி. இந்நேரத்தில் முஸ்லிம்கள் மிக அவதானமாக தங்கள் காரியங்களை முன்னெடுக்க வேண்டும்.

இனவாதத்தை தூண்டி ஆட்சி அமைத்து அதற்குப் பெயர் நல்லாட்சி என்றும் வைத்துக் கொண்டு மஹிந்த காலத்தில் முஸ்லிம்களுக்கு நடந்த அநியாயத்திற்கு கொஞ்சமும் குறைவில்லாத அநியாயத்தை செய்து வந்த நல்லாட்சி அரசை பெரும்பான்மை மக்கள் மட்டுமல்ல சிறுபான்மை மக்கள் கூட புறக்கணித்திருக்கிறார்கள் என்பதே தேர்தல் முடிவுகள் நமக்கு உணர்த்தும் செய்தியாகும்.

சிறுபான்மை மக்கள் வாழும் வடக்கு, கிழக்கில் கூட பொது ஜன பெறமுன கட்சி தனது ஆற்றலை நிரூபித்துள்ளது.

இந்தத் தேர்தலில் மஹிந்தவுடன் ஹக்கீமும் இல்லை. ரிஷாதும் இல்லை. எந்தவொரு உதிரிக் கட்சிகளும் இல்லை. இந்நிலையில் இப்படியான ஒரு வெற்றியை மஹிந்த தரப்பு பெற்றுள்ள நிலையில், அவர்களை சார்ந்த கூட்டணி கட்சிகளின் தலைவர்களோ, அல்லது மஹிந்தவோ, அல்லது அவர்களின் இன்னபிற தலைவர்களோ கூட இனவாதம் பேசாமல் சிறுபான்மை மக்களுக்கும் குறிப்பாக முஸ்லிம்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்கள். இந்த நிலை வரவேற்க்கத் தக்கதே. ஆனால் இந்த மனமாற்ற நிலையில் மண்ணைப் போடும் விதமாகவே என்.எம் அமீனின் தான்தோன்றித் தனமான இந்த காரியம் அமைந்துள்ளது.

ஆட்டம் போட வேண்டியவர்களே அடங்கி, அரவணைக்க நினைக்கும் நிலையில் தனது ரனில் விசுவாசத்தை காட்டுவற்காக வீரதீர செயலை செய்வதாக எண்ணி முழு சமுதாயத்தின் நலனிலும் மண்ணள்ளிப் போடும் காரியத்தில் தான் இவர் இறங்கியுள்ளார்.

முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தன்னை கடைசி நேரத்தில் கால்வாரிப் போனார்கள் என்ற கருத்தை பல சந்தர்பங்களில் மஹிந்தவே வெளிப்படுத்தியுள்ளார். தற்போது முஸ்லிம் அரசியல் தலைவர்களையோ, ஜம்மிய்யதுல் உலமாவையோ, என்.எம் அமீன் போன்றவர்களையோ நம்பாமல் நேடியாக பொது மக்களுடன் உறவாடும் நிலைக்கு மஹிந்த வந்திருக்கிறார் என்றால் இதுவே பாராட்டத் தக்க ஒன்றுதான்.

ஆகவே, மஹிந்தவுக்கு வாக்களித்தாலும் வாக்களிக்கா விட்டாலும், தற்போதைய நிலையில் காரணம் இல்லாமல் தங்கள் சுய நலன்களுக்காகவும், ரனில்-மைத்தரி விசுவாசத்தை வெளிப்படுத்துவதற்காகவும் மஹிந்தவையோ, அவர் சார்ந்த கட்சியினரையோ என்.எம் அமீன் போன்றவர்கள் தூண்டிவிடாமல் இருந்தால் அதுவே போதுமானது.

ஹாஷா

Author: verified_user

0 comments: