Monday, 22 January 2018

விபத்தில்லாமல் வண்டி ஓட்டனுமா? இந்த டிப்ஸ்களைப் பின்பற்றுங்க நண்பர்களே!

நகரங்களில் பெருகி வரும் வாகன நெரிசலுக்கு இடையே, விபத்தின்றி வாகனம் ஓட்டவும், மகிழ்ச்சியான பயணம் தொடரவும் இதோ சில டிப்ஸ்...

*கார் ஓட்டும்போது மொபைல்போனில் பேசுவது, குறுஞ்செய்தி அனுப்புவது போன்றவற்றை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இது, உங்களது உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும். அவசியம் பேசவேண்டிய நிலை ஏற்படும்போது, சாலை ஓரத்தில் காரை நிறுத்திவிட்டு மொபைல் போனில் பேசுங்கள். சில நிமிடம் கால விரயத்தால் உங்களது உயிருக்கு உலை வைத்துவிடாதீர்கள். 
* காரில் ஏறியவுடன் சீட் பெல்ட் அணிவதையும், இருசக்கர வாகனங்களை இயக்கும்போது ஹெல்மெட் அணிந்து செல்வதையும் வழக்கமாக்கிக்கொள்ளுங்கள். 

* மது அருந்திவிட்டு வாகனம் ஓட்ட மாட்டேன் என உறுதி எடுத்துக்கொள்ளுங்கள். 

* துஷ்டனை கண்டால் தூர விலகு... என்பதுபோல், சாலையில் முரட்டுத்தனமாக கார், பைக் ஓட்டுபவர்களுக்கு வழி விட்டுவிடுங்கள். 

* சாலையில் வரும் இதர வாகன ஓட்டிகளிடம் தேவையற்ற வம்பு செய்வதை விட்டுவிடுங்கள். பிற வாகன ஓட்டிகளை புன்னகையுடன் அணுக பழகிக்கொள்ளுங்கள். நாம் கொடுப்பதுதான், எதிர்முனையில் இருந்து திரும்ப வரும்.

* சரியான தடத்தில் வாகனத்தை இயக்குவேன் என உறுதிமொழி எடுத்து, வாகனம் ஓட்டுங்கள். நெடுஞ்சாலைகளில் தாறுமாறாக செல்லாதீர்கள். சமிக்ஞை செய்து ஓவர்டேக் செய்யுங்கள்.
* சாலை விதிகளை மதிப்பேன் என உறுதிஎடுங்கள். சிக்னல் ஜம்ப், தாறுமாறாக ஓட்டி பிற வாகன ஓட்டிகளை அச்சுறுத்துதல், பொது சாலையில் ரேஸ் அடிப்பது உள்ளிட்ட கெட்ட பழக்கங்களை ஒழித்துக்கட்டுங்கள். 

* வாகனத்தை அதிவேகத்தில் இயக்குவதை தவிர்ந்து விடுங்கள். சீரான வேகத்தில் வாகனத்தை இயக்கினால், அதிக எரிபொருள் சிக்கனம், பாதுகாப்பு, மனஅழுத்தமற்ற ஓட்டுதல் சுகம் கிடைக்கும். 

* உங்களுக்கும், உங்களது காருக்கும் சரியான காலத்தில் பரிசோதனை செய்வது அவசியம். கார் ஓட்டுவதற்கு உங்கள் ஆரோக்கியமும் சம்பந்தப்பட்டது என்பதால், உடல் நல பரிசோதனை செய்வது அவசியம். 

* உங்களது காருக்கு தயாரிப்பாளர் பரிந்துரைத்த குறித்த கால இடைவெளியில் சர்வீஸ் செய்வது அவசியம். வரும் முன் காப்பதுதான் புத்திசாலித்தனம். 

* வாகன ஓட்டுனர் உரிமம் இல்லாமல் கார் ஓட்டுவதை அறவே தவிர்க்க வேண்டும். வாகன ஓட்டுனர் உரிமம் மற்றும் இதர முக்கிய ஆவணங்கள் இல்லாமல் கார் ஓட்டுவதால், நீங்கள் நினைப்பதைவிட அதிக அளவிலான சிக்கல் உங்களை வந்து சேரும். 

* எப்போதுமே காரை எடுப்பதற்கு முன்னர், டயர்களில் காற்றழுத்தம் சரியாக இருக்கிறதா என பரிசோதியுங்கள். மாதத்திற்கு இருமுறை டயரில் காற்றழுத்தம் சரிபார்ப்பதை வழக்கமாக கொள்ளுங்கள். தேய்மானம் அடைந்த டயர்களை உடனே மாற்றி விடுங்கள். இல்லையேல், பேராபத்தை உருவாக்கிவிடும். 
இதுபோன்று சிறு சிறு விஷயங்களை மனதில் வைத்தால்போதும், பயணம் இனிதாகும்.

Author: verified_user

0 comments: