Friday, 12 January 2018

அமீரக விண்வெளி மையத்தின் ஆலோசகராக இந்திய விஞ்ஞானி நியமனம்!

இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் (ISRO) தலைவராக பணியாற்றியவர் கே. ராதாகிருஷ்ணன். இவர் 2014 ஆம் ஆண்டு வெளிவந்த நேச்சர் ஜோர்னல் (Nature Journal) என்ற விஞ்ஞான அறிவியல் பத்திரிக்கையால் உலகில் வாழும் 10 சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். இவர் பல்வேறு ராக்கெட் ஏவு திட்டங்களுக்கு குறிப்பாக இந்தியாவிலிருந்து சந்திரனை ஆராய முதன்முதலாக அனுப்பப்பட்ட 'சந்திராயன் - 1' என்ற வெற்றிகரமான திட்டத்தின் பின்னனியில் இருந்த முக்கிய விஞ்ஞானிகளில் ஒருவர்.

தற்போது அமீரகம் விண்வெளித் திட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றது. குறிப்பாக, செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்புவது மற்றும் குடியேற்றங்களை ஏற்படுத்துவதும் அதன் முக்கியத் திட்டங்களில் ஒன்று. எனவே, அமீரக விண்வெளி திட்டங்களுக்கு உதவுவதற்காக விஞ்ஞானி கே. ராதாகிருஷ்ணன் இந்திய அரசின் ஒப்புதலோடு அமீரக விண்வெளி நிறுவனத்தின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதாக அமீரகத்திற்கான இந்தியத் தூதர் நவ்தீப் சிங் சூரி தெரிவித்துள்ளார்.

2011 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி அனுப்பப்பட்ட ஜிசாட்-12 (GSAT -12) என்ற செயற்கைகோளை ஏவுமுன் அதன் மாதிரி ராக்கெட் பொம்மையை வைத்து திருப்பதி கோயிலிலும், காளஹஸ்தி கோயிலிலும் பூஜைகள் செய்த செயல் இவருக்கு கடும் கண்டனங்களை பெற்றுத் தந்தது குறிப்பிடத்தக்கது.

Source: Gulf News
தமிழில் : நம்ம ஊரான்

Author: verified_user

0 comments: