Friday, 5 January 2018

மனைவி மற்றும் பிள்ளைகளை கொன்றுவிட்டு தற்கொலை: ஆபாச படத்தால் வந்த வினை

அயர்லாந்தில் 2016ம் ஆண்டு தன்னுடைய மனைவி மற்றும் பிள்ளைகளை கொன்று விட்டு தற்கொலை செய்த நபர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

அயர்லாந்தைச் சேர்ந்த 40 வயதான ஆலன் ஹாவ் என்பவர், பள்ளி உதவி தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி க்லோடாக்கும் அதே பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

அமைதியான சுபாவம் கொண்ட ஆலனுக்கு ஆபாசப் படங்களைப் பார்க்கும் ஆர்வம் இருந்துள்ளது. பள்ளியில் தனது மடிக்கணினியில் பலவேளைகளில் அவர் ஆபாசப் படங்களைப் பார்த்துக் கொண்டிருப்பார்.

இந்த விடயம் அவருடைய மனைவி க்லோடாக்கிற்கு தெரிய வந்ததும், அவர் ஆலனிடம் தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு தனது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளை ஆலன் கத்தியால் கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துள்ளார், இதற்கான காரணம் தெரியாமல் இருந்து வந்தது.

இதனைத் தொடர்ந்து க்லோட்டாக்கின் தாயார், தனது மகள் மற்றும் பேரப்பிள்ளைகளின் மரணத்திற்கான காரணம் தெரிய வேண்டும் என வழக்கு தொடர்ந்திருந்தார்.

மனநல மருத்துவத் துறையின் இயக்குநர் ஹாரி கென்னடி இதுகுறித்து கூறுகையில்,

‘ஆசிரியராக இருந்துகொண்டு பள்ளியில் இப்படிச் செய்வது ஆலனுக்கு தவறாக தெரிந்திருக்கிறது. ஆனாலும், அவரால் அந்தப் பழக்கத்தை விட முடியவில்லை.

ஒரு கட்டத்தில் மனநல மருத்துவரை சந்தித்து 3 மாதங்கள் சிகிச்சை பெற்றுள்ளார் ஆலன். இந்த விடயம் அவருடைய மனைவிக்கு தெரிந்துவிட்டதால், தன்னுடைய மதிப்பு குறைந்துவிட்டதாக ஆலன் நினைத்துள்ளார்.

அதனால் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளான ஆலன், ஒருநாள் தனது வீட்டு வாசலில், ‘அழைப்பு மணியை அழுத்தாதீர்கள், காவலர்களுக்குத் தகவல் கொடுங்கள்’ என குறிப்பு எழுதி வைத்துள்ளார்.

பிறகு தனது பெற்றோர், சகோதரர்கள், மனைவியின் பெற்றோர், அவரது சகோதரிகள் என அனைவருக்கும் தனித் தனியாக கடிதங்கள் எழுதியுள்ளார்.  அவற்றில், “என்னை மன்னித்து விடுங்கள், எனக்கு வேறு வழி தெரியவில்லை” என எழுதியிருந்தார்.

பிறகு, தனது மனைவியையும், குழந்தைகளையும் கத்தியால் கொலை செய்தார். அதன் பின்னர், தன் தற்கொலைக்கான நீண்ட கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

இந்த தகவல்களை எல்லாம் ஆலன் எழுதிய கடிதங்கள், மடிக்கணினி, பணிபுரிந்த இடம், நண்பர்கள், மனநல மருத்துவர் ஆகியோரிடம் விசாரித்து அறிந்துகொண்டோம்.

இது மன அழுத்தத்தினால் ஏற்பட்ட கொடூரம் ஆகும். எனினும், ஆலன் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர் என்பதை எந்த விதத்திலும் காட்டிக்கொள்ளவில்லை.

இதனாலேயே அவருக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் போய்விட்டது, இது மிகவும் கவனிக்கத்தக்க ஒன்று’ என தெரிவித்துள்ளார்.

Author: verified_user

0 comments: