Sunday, 7 January 2018

இலங்கை செல்லும் வெளிநாட்டவர்களுக்கு எச்சரிக்கை!


இலங்கைக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு பெண்ணின் கையடக்க தொலைபேசியை திருடிய முன்னாள் கடற்படை வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காலி ரயில் நிலையத்தில் வைத்து இந்த திருட்டுச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

குறித்த வெளிநாட்டு தம்பதியினர் ரயில் வரும் வரை காலி ரயில் நிலையத்தில் உள்ள ஆசனத்தில் அமர்ந்திருந்துள்ளனர். இதன்போது அங்கு வந்த நபர் அவர்களுடன் நட்புறவை ஏற்படுத்தியுள்ளார்.

தனது நட்பினை நிரூபிக்கும் வகையில் வெளிநாட்டவரின் கையடக்க தொலைபேசியில் செல்பி ஒன்றும் எடுத்துள்ளார். அதன் பின்னர் அவர் அங்கிருந்து சென்றுள்ளார்.

அவர் சென்றதையடுத்து வெளிநாட்டுப் பெண் அமர்ந்திருந்த இடத்தில் வைக்கப்பட்டிருந்த கையடக்க தொலைபேசி காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண், ரயில் நிலைய பாதுகாப்பு அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்துள்ளார். மற்றைய கையடக்க தொலைபேசியில் எடுத்து கொண்ட புகைப்படத்தையும் அதிகாரியிடம் காட்டியுள்ளார்.

செல்பி புகைப்படத்தை வைத்து மேற்கொண்ட விசாரணைக்கமைய தொலைபேசியை திருடிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் கடற்படையில் இருந்து தப்பிச் சென்றவர் என தெரியவந்துள்ளது. அவர் ரயிலில் பயணிக்கும் வெளிநாட்டவர்களின் பெறுமதியான பொருட்களை திருடி வருவதாக தெரியவந்துள்ளது.

இலங்கை வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இவ்வாறான மோசடி நபர்கள் குறித்து மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளனர்.

Author: verified_user

0 comments: