Monday, 22 January 2018

82 சதவீத சொத்துக்கள் சனத்தொகையில் ஒரு வீதத்தினரின் கைகளில்

இந்தியாவில், 2017ஆம் ஆண்டு ஒட்டுமொத்த சொத்துக்களில் 73 சதவீதம், ஒரு சதவீத கோடீஸ்வரர்கள் கையில் இருப்பதாகவும், பொருளாதார வளர்ச்சியின் பயன் ஒரு சிலரை மட்டும் சென்றடைவதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

உலகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் பொருளாதார நடவடிக்கைகள், அதனால் மக்களுக்குக கிடைத்து வரும் பயன் குறித்து சர்வதேச பொருளாதார உரிமைகள் அமைப்பான ஒக்ஸ்போம் சமீபத்தில் ஆய்வு நடத்தியது.

இதில் பொருளாதார ஊக்கத்திற்கான நடவடிக்கைகள், அதனால் மக்களின் வருமானம் மற்றும் சொத்து அதிகரிப்பு குறித்து விரிவாக ஆய்வு நடத்தப்பட்டது.

அந்த ஆய்வின் அறிக்கையில் ''கடந்த 2017ம் ஆண்டில் உலகம் முழுவதும் உருவான சொத்து மதிப்பில் 82 சதவீதம் அளவு வெறும் ஒரு சதவீதம் பேரிடம் உள்ளது. அதேசமயம் உலகம் முழுவதும் மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானோர், அதாவது 370 கோடி பேர் கடுமையான வறுமையில் வாடி வருகின்றனர்.

இந்தியாவை பொறுத்தவரையில் கடந்த ஆண்டின் கணக்கீடு அடிப்படையில் மொத்த சொத்துக்களில் 73 சதவீதம், ஒரு சதவீத மக்கள் கையில் உள்ளது.

அவர்களின் சொத்து மதிப்பு என்பது 20.9 இலட்சம் கோடி (இந்திய ரூபாய்) ஆகும். 2016ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2017ஆம் ஆண்டில் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கையும் இந்தியாவில் அதிகரித்துள்ளது.

2016ஆம் ஆண்டு நடத்திய ஆய்வில், மொத்த சொத்துகளில் 58 சதவீதம், ஒரு சதவீதம் பேரிடம் இருப்பதாக தெரியவந்தது. கிராமப்புற கூலித் தொழிலாளியின் சம்பளம், ஒரு நிறுவனத்தின் உயரதிகாரி தற்போது வாங்கும் சம்பளத்திற்கு நிகராக உயர்வதற்கு, இன்னும் 941 ஆண்டுகள் ஆகும்.

அதேசமயம் ஏழைகளின் எண்ணிக்கையும் 58 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இந்த பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகரித்து வருவதற்கு வருவாய் சமநிலை இல்லாததே முக்கிய காரணம் என தெரியவந்துள்ளது. வரி ஏய்ப்பை தவிர்க்கும் வகையில் வரி முறைகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Author: verified_user

0 comments: