Monday, 22 January 2018

இலங்கை வந்த வெளிநாட்டவர்களின் தந்திரமான செயல்! 7 நாட்களுக்குள் சிக்கிய சம்பவம்

மாரவில - கட்டுனேரி பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மிகவும் தந்திரமான முறையில் 28,000 ரூபா பணத்தை திருடிச் சென்ற வெளிநாட்டவர்கள் இருவர் 7 நாட்களுக்குள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பு - ஏத்துக்கால பகுதியில் வைத்து குறித்த இருவரையும் நேற்று காலை மாரவில பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைதாகிய இருவரும் 55 மற்றும் 34 வயதுடைய ஈரான் நாட்டைச்சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மாரவில - கட்டுனேரி பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு கடந்த 14ஆம் திகதி சென்ற இரு வெளிநாட்டவர்களும், அங்கு பணியாற்றும் நபரிடம் சிலிண்டர் ஒன்றின் விலையை விசாரித்துள்ளனர்.

ஒருவர் விலை தொடர்பில் விசாரிக்க மற்றைய நபர் அப்பணியாளரிடம் பல்வேறு கேள்விகளைக் கேட்டுள்ளார்.

இதன்போது, இந்த நாட்டில் உள்ள பெறுமதி கூடிய நாணயம் பற்றியும் விசாரித்துள்ளனர்.

மேலும், பணியாளரின் கையிலிருந்த பணத்தை பார்க்க வேண்டும் எனக் கூறியுள்ளனர்.

இதையடுத்து அந்த ஊழியர் தன்னிடமிருந்த 28,000 ரூபா பணத்தைக் காண்பித்த நிலையில், அப்பணத்தை மிக நூதனமான முறையில் குறித்த வெளிநாட்டவர்கள் அபகரித்துள்ளனர்.

அதன்பின் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்த பணத்தை நிறுவன முகாமையாளரிடம் ஒப்படைக்கும் போது அதில் பணம் குறைவாக இருப்பதாக ஊழியர் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை சோதனையிட்டுள்ளனர்.

அதில், குறித்த பணியாளரிடம் அங்கு வந்த இரு வெளிநாட்டவர்களும் பணத்தைப் பெற்றுக் கொள்ளும் காட்சிகள் பதிவாகி இருப்பதை நிறுவன பணியாளர்கள் அவதானித்துள்ளனர்.

இது தொடர்பில் மாரவில பொலிஸ் நிலையத்தில் நிறுவன முகாமையாளர் முறைப்பாடு செய்துள்ளார்.

இவ்வாறு பணத்தை மோசடி செய்த இரு வெளிநாட்டவர்களும் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளமை விசாரணைகள் மூலம் தெரிய வந்திருந்தது.

மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட மாரவில பொலிஸார் 7 நாட்களுக்குள் குறித்த வெளிநாட்டவர்களை கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.(TW)

Author: verified_user

0 comments: