Thursday, 7 December 2017

ஜெரூசலம் குறித்த அமெரிக்க அறிவிப்பு போருக்கான அழைப்பு என ஹமாஸ் அறிவிப்பு!

இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதரகத்தை டெல் அவிவிலிருந்து ஃபலஸ்தீனின் ஜெரூசலத்துக்கு மாற்ற உத்தரவிட்டுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்பின் அறிவிப்பு போருக்கான அழைப்பாகும் என ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியா கூறியுள்ளார்.

ஃபலஸ்தீனியர்கள் தங்கள் நாட்டின் தலைநகராகவும் சர்வதேச சமூகம் மூன்று முக்கிய ஆபிரகாமிய மதங்களின் புனித ஸ்தலமாக பொதுவான இடமாகவும் அங்கீகரித்துள்ள ஃபலஸ்தீனின் ஜெரூசலம் நகரை இஸ்ரேல் ஆக்ரமித்து வைத்துள்ளது. இதனை இஸ்ரேலின் தலைநகராக மாற்றுவது என்பது இஸ்ரேலின் திட்டம். ஆனால், ஒரு நாட்டிடமிருந்து ஆக்ரமித்து பிடித்து வைத்துள்ள இடத்தில் சிறு மாற்றம்கூட செய்யக்கூடாது என்பது மூன்றாவது ஜெனிவா ஒப்பந்தத்தின்படியான சர்வதேச சட்டமாகும். இதன் அடிப்படையில், ஜெரூசலத்தை இஸ்ரேலின் தலைநகராக எந்த ஒரு நாடும் இதுவரை அங்கீகரித்ததில்லை. உலக நாடுகளின் இஸ்ரேலுக்கான தூதரகங்கள் அனைத்துமே இஸ்ரேலின் தற்போதைய தலைநகரான டெல் அவிவில் அமைந்துள்ளது.

கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலின்போது, இஸ்ரேலின் தலைநகராக ஜெரூசலத்தை அங்கீகரிக்கும் முகமாக அமெரிக்கத் தூதரகத்தை ஜெரூசலத்துக்கு மாற்றுவோம் என இஸ்ரேலியருக்கு ட்ரம்ப் தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தார். இதன் அடிப்படையில் பல இஸ்ரேலிய ஆதரவு அமெரிக்க நிறுவனங்கள் கடந்தத் தேர்தலின் போது ட்ரம்பின் வெற்றிக்காக மில்லியன் கணக்கான டாலர்கள் செலவு செய்திருந்தன.

தேர்தல் வெற்றிக்குப் பின்னர், வாக்குறுதிபடி உடனடியாக ட்ரம்ப் செயல்படவில்லை என குறிப்பிட்ட நிறுவனங்கள் ட்ரம்பிற்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுப்பியிருந்த நிலையில், வளைகுடா நாடுகளினுள் நடக்கும் அதிகாரப் போட்டியினால் விளைந்துள்ள குழப்ப நிலையைப் பயன்படுத்திக் கொண்டு இஸ்ரேலின் தலைநகராக ஜெரூசலத்தை அங்கீகரிக்கும் முகமாக அமெரிக்க தூதரகத்தை ஜெரூசலத்துக்கு மாற்றுவதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

முன்னதாக இது குறித்த தகவலை அவர் ஃபலஸ்தீன் அதாரிட்டி தலைவர் மஹ்மூத் அப்பாஸ் மற்றும் சவூதி அரசர் சல்மான் ஆகியோருக்குத் தொலைபேசியில் தெரிவித்திருந்தார். அதற்கு இருவருமே கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து உலகின் பல்வேறு நாடுகளும் ட்ரம்பின் முடிவை விமர்சித்ததோடு, அவ்வாறான அறிவிப்பு வெளியிடுவது மத்திய கிழக்கின் அமைதியைச் சீர்குலைக்கும் எனவும் இஸ்ரேல் ஃபலஸ்தீனுக்கு இடையிலான அமைதி பேச்சுவார்த்தையினைப் பாதிக்கும் எனவும் எதிர்காலத்தில் மிக மோசமான விளைவுகளை அது தோற்றுவிக்கும் எனவும் சர்வதேச சட்டங்களுக்கு எதிராக செயல்படும் இஸ்ரேலின் செயல்பாடுகளை அங்கீகரிப்பதற்கு ஒப்பான அமெரிக்காவின் இம்முடிவினால் இஸ்ரேல் செய்யும் அனைத்து சர்வதேச சட்ட விதிமீறலில் அமெரிக்காவும் குற்றவாளியாகும் எனவும் பலவிதமான எதிர்ப்புகளைப் பதிவு செய்திருந்தனர்.

ஆனால், இவை எதனையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் ஒரு நாட்டிடமிருந்து ஆக்ரமித்து பிடித்து வைத்துள்ள இடத்திற்குச் சட்ட அங்கீகாரம் கொடுக்கும் வகையில், ஜெரூசலத்திற்கு அமெரிக்காவின் இஸ்ரேலுக்கான தூதரகத்தை மாற்றுவதாக அவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அவரின் அறிவிப்பில், 'ஜெரூசலத்தை மூன்று மதங்களுக்கும் சொந்தமானதாக கருதுவதை ஏற்றுக்கொள்ளவில்லை. அதனைவிட, இறையாண்மைமிக்க ஒரு ஜனநாயகநாட்டிற்குச் சொந்தமானதாக இருப்பது சிறந்தது' எனக் கூறியுள்ளார்.

அவரின் அறிவிப்பினைத் தொடர்ந்து, ஃபலஸ்தீன் விடுதலைக்காக போராடி வரும் ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியா, 'அமெரிக்காவின் அறிவிப்பு போருக்கான அழைப்பாகும். இஸ்ரேலுக்கு எதிராக இரண்டாவது இந்திஃபாதா - எழுச்சி -வுக்கான நேரம் வந்துவிட்டது. ஜெரூசலத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்துள்ளது, ஃபலஸ்தீன் - இஸ்ரேலுக்கு இடையிலான அமைதி பேச்சுவார்த்தையினைக் கொன்றுவிட்டது; ஓஸ்லோ ஒப்பந்தத்தைக் கொன்று விட்டது. ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச சட்டங்கள் என அனைத்தையும் தூக்கி எறிந்துவிட்டது.

ஃபலஸ்தீனின் வரலாற்றில் இப்போது முக்கியமானதொரு இக்கட்டான சூழலில் நாங்கள் நிற்கிறோம். நேர்மையற்ற அமெரிக்காவின் இம்முடிவுக்கு எதிராக ஃபலஸ்தீனுக்காக போராடும் அனைவரும் ஒன்றாக நிற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

முழு ஜெரூசலேமும் எங்களுக்குச் சொந்தமானது. அமெரிக்க நிர்வாகம் அதனை எங்களிடமிருந்து பிடுங்கி எடுக்க முனைகிறது. இதற்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இப்போது ஃபலஸ்தீனுக்கான போராட்டத்தின் மையப்புள்ளியாக ஜெரூசலம் ஆகிவிட்டது. அதற்காக, இஸ்ரேலிய எதிரிகளை எதிர்கொள்வதற்காக மீண்டுமொரு இந்திஃபாதாவை நாம் ஆரம்பிப்போம்' என அறிவித்துள்ளார்.

இவரைப் போன்றே,

ஃபலஸ்தீன் தேசிய உருவாக்கத்துக்கான பொது செயலாளர் முஸ்தஃபா பர்கூத்தி, 'இஸ்ரேலின் போர்க் குற்றங்களில் அமெரிக்காவும் இணைந்துள்ளது. இஸ்ரேல் ஆக்ரமித்து வைத்துள்ள இடங்களை அமெரிக்கா ஏற்றுக் கொண்டுள்ளது என்பதை இது உறுதிபடுத்தியுள்ளது.

இந்த அமெரிக்க குழுவுடன் இனிமேல் ஃபலஸ்தீனியன் அதாரிட்டியினர் எவ்வித பேச்சுவார்த்தையும் வைத்துக் கொள்ள மாட்டார்கள் என நான் நம்புகிறேன்.

இஸ்ரேல் அனைத்தையும் எடுத்துக் கொள்ள தீர்மானித்துவிட்டது. அவர்களுக்கு அனைத்துமே வேண்டுமா? நல்லது. நாங்களும் அனைத்தையும் எடுத்துக் கொள்வதற்காக போராடப் போகிறோம்.

வன்முறையற்ற முதலாம் இந்திஃபாதாவைப் போன்று மற்றுமொரு எழுச்சியினை நாங்கள் எதிர்நோக்குகிறோம். அதுதான் இப்போது எங்களுக்குத் தேவை. ஃபலஸ்தீனியரின் எதிர்ப்பை இனிமேல் இஸ்ரேல் எல்லா இடங்களிலும் எதிர்கொள்ளும்' எனத் தெரிவித்துள்ளார். (அப்துர் ரஹ்மான்) 

Author: verified_user

0 comments: