Tuesday, 26 December 2017

கணவன், மனைவிக்கு இடையில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு பாலுறவில் பிரச்சினையே காரணம்!

கணவன், மனைவிக்கு இடையில் ஏற்படும் பல பிரச்சினைகளுக்கு பாலுறவில் ஏற்படும் பிரச்சினைகளே காரணமாக இருக்கின்றது என பெண்ணியச் செயற்பாட்டாளரும், மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான எஸ்.ரி.நளினி ரெட்ணராஜா தெரிவித்துள்ளார்.

புலம் பெயர் எழுத்தாளர் மீராபாரதியின் பால் பாலியல் காமம் காதல் பெண் பெண்ணியம் பற்றிய நூலின் அறிமுகமும், கலந்துரையாடலும் நேற்று மாலை மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில்,

எழுத்தாளர் மீராபாரதியின் பால் பாலியல் காமம் காதல் பெண் பெண்ணியம் பற்றிய நூலானது பெண்களுடைய பாலியல் ரீதியான பிரச்சினைகளையும், அவர்கள் சமூகத்தில் எதிர்நோக்கும் இடர்பாடுகளையும் மிகவும் வெளிப்படையாகப் பேசுகின்றது.

இவ்வாறு வெளிப்படையாக பாலியல் சார்ந்து ஏற்படுகின்ற பிரச்சினைகளை பேசுகின்ற நூல்கள் வெளிவருவது மிகக் குறைவாகும். அவ்வாறான நூல்களை வெளியிடுபவர்களை சமூகம் அருவருப்பானவர்களாகவும், சமூகத்தில் வேண்டப்படாதவர்களாகவும் நோக்குகின்றனர்.

இன்று பாலியல் ரீதியான விழிப்புணர்வுகள் மாணவர்களிடத்தும், மக்களிடத்தும் இல்லாததன் காரணமாகவே பல்வேறு துஷ்பிரயோகச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

பாலுறவு என்பது தியானம் போன்றது. இதனை கீழ்த்தரமாக பேசக்கூடாது. கணவன், மனைவிக்கு இடையில் ஏற்படும் பல பிரச்சினைகளுக்கு இந்த பாலுறவில் ஏற்படும் பிரச்சினைகளே காரணமாக இருக்கின்றன.

இதனை எவரும் வெளிப்படுத்துவதில்லை. அதைப்பற்றிய அறிவில்லாமலே நாம் வாழ்கிறோம். இந்த நிலையில் எழுத்தாளர் மீராபாரதியின் பால் பாலியல் காமம் காதல் பெண் பெண்ணியம் பற்றி பேசுகின்ற நூலானது இன்றைய காலத்துக்கு மிகவும் அவசியமானதாகும்.

பாலியல் கல்வியை அறிமுகப்படுத்துவதற்கு இந்த நூல் வழிகாட்டியாக அமையும் என நினைக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Author: verified_user

0 comments: