Thursday, 14 December 2017

தற்போது யுத்த பூமியாக மாறியுள்ள யெமன் குறித்து அறிந்து கொள்வோம்! - விசேட பதிவு

யெமனின் ஹூதிகளுக்கும் சவூதி தலைமையிலான அரபு நாடுகளுக்கும் இடையில் நடக்கும் போரைக் கிட்டத்தட்ட ஷியா - ஸுன்னி தரப்பினருக்கிடையே நடக்கும் போராட்டமாக சித்தரிக்கப்படுகிறது. ஆனால் யதார்த்தம் வேறு. ஹூதிகள் யார் என்பதிலிருந்து ஆரம்பித்தால், யெமனில் நடப்பது என்ன என்பது குறித்த தெளிவு கிடைக்கும்.
ஹூதிகள் யார்?
யெமனின் வடக்கு பகுதியிலுள்ள பழங்குடி தலைவர் அப்துல் மாலிக் அல் ஹூதியிடமிருந்து ஹூதி அமைப்பினர் தோன்றினர். 1990 கால கட்டங்களில் இவரின் குடும்பம் ஆளும் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதிலிருந்து இக்குடும்பத்தின் தலைமையில் மக்கள் அணி திரள ஆரம்பித்தனர்.
அப்போது அதிபராக இருந்த அலி அப்துல்லாஹ் ஸாலிஹ் சவூதி மற்றும் அமெரிக்காவுக்கு ஆதரவாக செயல்படுவதற்கு எதிராக அப்துல் மாலிக் அல் ஹூதி குடும்பம் விமர்சிக்க ஆரம்பித்ததோடு, நாட்டிலுள்ள சிறுபான்மையின மக்கள் உட்பட அனைத்து மக்களுக்கும் சரிசமமான உரிமை மற்றும் அனுகூலங்களை வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தது.
இதனைத் தொடர்ந்து இக்குடும்பத்தினருக்கு மக்களிடையே ஆதரவு பெருக ஆரம்பித்தது. இவர்களின் ஆதரவாளர்கள் ஹூதி இயக்கத்தினர் எனத் தம்மை அழைத்துக் கொள்ள ஆரம்பித்தனர். இதில், நாட்டின் எல்லாத் தரப்பு மக்களும் அங்கத்தவர்களாக உள்ளனர்.

ஆனால், ஹூதி பழங்குடி குடும்பம் முஸ்லிம்களில் ஒரு பிரிவான ஸைதிசத்தினரைப் பின்பற்றுபவராவர். இது, ஷியாக்களின் உட்பிரிவினைச் சேர்ந்தது என்றாலும் அதன் கொள்கைகள் ஸுன்னி பிரிவுக்கு நெருக்கமானவை. ஈரானின் ஷியாயிசத்திடமிருந்து வேறுபட்டது.

யெமனில் ஸைதிசத்தினைப் பின்பற்றுபவர்கள் 35 சதவீதத்தினர். ஆனால், இவர்கள் அனைவரின் ஆதரவும் ஹூதி அமைப்பினருக்கு இல்லை.

முன்னர் குறிப்பிட்டதுபோல் ஹூதி அமைப்பில், ஸுன்னி, ஸைதி, ஷியா என நாட்டின் அனைத்து தரப்பினரும் அங்கத்தவர்களாக உள்ளனர். இந்த அமைப்பு பின்னர் ஆயுதம் தாங்கியப் போராட்ட அமைப்பாக வடிவம் எடுத்ததன் பின்னர், ஆயுதப் போராட்டத்துக்காக உருவாக்கிக் கொண்ட ஆயுதப் படையின் பெயர் அன்ஸாருல்லாஹ் - லெபனானின் ஹிஸ்புல்லாஹ் ஆயுதப்படையினை ஒத்தது.

ஆக, யெமன் ஆட்சிக்கு எதிராக கிளர்ந்தெழுந்த ஹூதிகளீண் போராட்டத்துக்கும் மதத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. ஆனால், அங்கு நடக்கும் போராட்டத்தில் ஒவ்வொரு தரப்பினரும் இறைவனின் உதவி தமக்கே என உரிமை கொண்டாடுகின்றனர். யெமன், இஸ்லாமிய வரலாற்றுக்கு முன்னர் பாரசீகப் பேரரசின் அங்கமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஹூதிகளின் கோரிக்கை என்ன?

1990 காலக் கட்டத்தில் அரசின் திட்டங்கள், செயல்பாடுகளுக்கு எதிராக பேச ஆரம்பித்த ஹூதிகளின் போராட்டம், 2004 ல் அதன் முக்கியத் தலைவரான பதருத்தீன் ஹூதியினை அப்போதைய அதிபர் அலி அப்துல்லாஹ் ஸாலஹின் படைகள் படுகொலை செய்த பின்னர் அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டமாக வடிவெடுத்தது.

2011 ஆம் ஆண்டு எழுந்த அரபு மல்லிகை புரட்சியின் போது, யெமனிலும் ஆளும் ஸாலிஹின் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் வலுத்தது. இப்போராட்டத்தில் ஹூதிகளும் இணைந்து கொண்டனர். ஹூதிகள் ஆட்சியினைப் பிடித்துவிடுவர் என்ற அச்சம் நிலவியபோது, சவூதி தலைமையில் அரபு நாடுகள் ஸாலிஹிற்கு ஆதரவாக சமரசத்தில் ஈடுபட்டு மக்கள் கிளர்ச்சியை முடிவுக்குக் கொண்டு வர முயன்றது. ஆனால், அது பயனின்றி போகவே ஐக்கிய நாடுகள் மத்தியஸ்தத்தில் ஸாலிஹ் ஆட்சியினை இழக்க வேண்டி வந்தது.
அனைத்து மக்களுக்கும் சம உரிமைகள், வசதிகள் அளிக்கும் வகையில் அரசியல் சட்டத் திருத்தம் என்ற வாக்குறுதியின் அடிப்படையில், அப்போது துணை அதிபராக இருந்த அப்த் ரப் ஹாதிக்கு 2012 ல் ஆட்சி கைமாறப்பட்டது.

ஆனால், கொடுக்கப்பட்ட வாக்குறுதியினை நிறைவேற்றாமல் சவூதிக்குக் கைப்பாவை போன்று ஹாதி செயல்பட்டதால், மீண்டும் அரசுக்கு எதிராக 2014 ல் கிளர்ச்சி ஏற்பட்டது.

இப்போது கிளர்ச்சியினைத் துவங்கியவர்கள் ஹூதிகள். இவர்களுக்கு அலி அப்துல்லாஹ் ஸாலஹின் ஆதரவு அமைப்பினரும் அவருக்கு ஆதரவான இராணுவப் பிரிவினரும் துணை புரிந்தனர். காவல்துறை, இராணுவம் என அனைத்தும் கைக்கட்டி வேடிக்கை பார்க்க, 2014 செப்டம்பரில் ஹூதிகள் யெமனின் தலைநகர் சனாவைக் கைப்பற்றினர்

இதனைத் தொடர்ந்து அப்த் ரப் ஹாதி சவூதிக்குத் தப்பியோடினார். விசயத்தில் தன்னிச்சையாக தலையிட்ட சவூதி தலைமையிலான அரபு நாடுகள், யெமன் மீது இராணுவ நடவடிக்கையினைத் தொடங்கியது. ஹூதிக்கு ஆதரவாக செயல்பட்டதால், முன்னாள் அதிபர் அலி அப்துல்லாஹ் ஸாலஹின் வீட்டின் மீதும் சவூதி கூட்டுப்படைகள் தாக்குதல் நடத்தின. இதனைத் தொடர்ந்து ஸாலிஹ், தாம் ஹூதிகளுக்கு ஆதரவு அளிப்பதாக வெளிப்படையாக அறிவித்தார்.

சவூதி கூட்டுப்படையின் இராணுவ நடவடிக்கையினை ஹூதிகளின் அன்ஸாருல்லாஹ்வுடன் இணைந்து ஸாலிஹின் இராணுவமும் எதிர்கொண்டது. 2015 ல், ஹூதிகளும் ஸாலிஹின் பொது மக்கள் சபை கட்சியும் இணைந்து ஒப்பந்தம் செய்து கொண்டதன் அடிப்படையில் கூட்டாட்சி பிரகடனம் செய்யப்பட்டு ஸாலிஹ் மீண்டும் அதிபரானார்.

சவூதியின் இராணுவ நடவடிக்கை இரு ஆண்டுகளைக் கடந்த நிலையில், சமீபத்தில் ரியாத் விமானநிலையம் மீது சுமார் 800 கிலோ மீட்டர்கள் கடந்து ஹூதிகள் ஏவுகணை வீசினர். யெமன் மீதான தாக்குதலை நிறுத்தவில்லையேல், அமீரகம் மீதும் ஏவுகணை வீசப்போவதாக மிரட்டல் விடுத்தனர்.

ஏற்கெனவே இரண்டாண்டு நீண்ட போரினால் கடுமையான செலவீனத்தில் அலைகழிக்கப்பட்டு வரும் சவூதிக்கு, ஹூதியின் புது மிரட்டல் போரினை எவ்வகையிலாவது முடிவுக்குக் கொண்டு வரவேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியது. ஆனால், ஹூதிகளின் கைகளில் அதிகாரம் போய்விடாமல் இருக்கவும் வேண்டுமென யோசித்த சவூதி கூட்டணி, ஹூதிகளுடன் சமரசம் செய்து கொண்ட அதே அலி அப்துல்லாஹ் ஸாலஹிடம் மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்தியது.

ஸாலஹின் மகன் அஹ்மதை அதிபராக்குவது என்ற ரகசிய ஒப்பந்தத்தின் பேரில், ஸாலிஹ் ஹூதியுடனான ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டு நான்கு நாட்களுக்கு முன்னர் சவூதியைச் சமரசப் பேச்சுவார்த்தைக்கு வெளிப்படையாக அழைப்பு விடுத்தார்.

சுதாரித்துக் கொண்ட ஹூதிகள், ஸாலிஹின் வீட்டைச் சுற்றி வளைத்தனர். ஸாலிஹின் படைகளுக்கும் ஹூதிகளுக்குமிடையே கடந்த நான்கு நாட்களாக உள்நாட்டு சண்டை நடந்தது. இதன் இறுதியில், வீட்டை விட்டுத் தப்பிச் செல்ல முயன்ற ஸாலிஹை ஹூதிகள் கொலை செய்தனர்.

தற்போது யெமன் ஹூதிகளின் முழு கட்டுப்பாட்டில் வந்துள்ளது. தலைவர் இழந்த ஸாலிஹின் பொது மக்கள் சபை கட்சிக்கு அமீரகத்தில் இருக்கும் அவர் மகன் அஹ்மத் தலைமையேற்க வருவார் என கருதப்படுகிறது.

அனைத்து மக்களுக்கும் சம உரிமையும் அந்தஸ்தையும் தரும் வகையில் அரசியல் சாசன சட்டத் திருத்தம் என்பதே ஹூதிகளின் பிரதான கோரிக்கை.

இப்பிரச்சனை ஆரம்பித்ததன் பின்னர், யெமன் மீது அனைத்து தடைகளையும் சவூதி விதித்துள்ளது. துறைமுகங்கள், விமானநிலையங்கள் அடைக்கப்பட்டுள்ளன.

அரபு நாடுகளிலேயே மிகவும் ஏழ்மை நாடு யெமன். 27 மில்லியன் மக்கள் வாழும் இந்நாட்டில், போரில் கடுமையான உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இவர்களில் சுமார் 17 மில்லியன் மக்கள் உணவு கிடைக்காமல் வாடுகின்றனர் எனவும் அதிலும் 6.8 மில்லியன் மக்களுக்கு உடனடி உணவு வினியோகம் நடத்த வேண்டுமெனவும் ஐக்கிய நாடுகள் சபை கணக்கு அதிர்ச்சியளிக்கும் தகவலை வெளியிட்டுள்ளது.

ஹூதிகளைப் புறம்தள்ளி யெமன் பிரச்சனைக்குத் தீர்வு என்பது சாத்தியமே கிடையாது. ஆனால், அதிகாரப் பசி நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள சவூதி, அரபு பிரதேசத்தில் தம்முடைய அதிகாரம் விட்டுப் போய்விடக்கூடாது என்பதற்காக சொந்தம் மக்களின் இரத்தத்தின் மீது நர்த்தனமாடிக் கொண்டிருக்கிறது. ஊடாகவே மதமும் பலிகடாவாகிக் கொண்டிருக்கிறது.

Author: verified_user

0 comments: