Monday, 25 December 2017

அமெரிக்க தீர்மானத்தை அடுத்து ஜெரூசலத்தில் பாரிய குடியிருப்புக்களை அமைக்க முஸ்தீபு

ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பலஸ்தீன் மேட்குக் கரை பிரதேசத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பாரிய குடியிருப்புக்களை அமைக்க இஸ்ரேல் திட்டமிட்டு வருவதாக அந்நாட்டு வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் யோவ் கலாந்த் அறிவித்துள்ளார்.

எதிர்வரும் இருபது ஆண்டுகளில் அமைக்கப்பட இருக்கும் இந்த குடியிருப்புக்களில் சுமார் 20% முதல் 30% வீதமானவை ஜெரூஸல நகரில் அமைக்கப் படவுள்ளது என இஸ்ரேல் அமைச்சர் சுட்டிக்காட்டி உள்ளார்.

அதேவேளை இதனை, ஜெரூசலத்தை இஸ்ரேலின் தலைநகராக அறிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தீர்மானத்தை நடைமுறை படுத்தும் செயட்பாடு என பலஸ்தீன் வெளிவிவகார மற்றும் குடியேற்ற அமைச்சு குற்றம் சுமத்தி உள்ளது.

இவ்வாறு அமைக்கப்படவுள்ள இந்த குடியிருப்புக்கள் தற்போது அமையப்பெற்றுள்ள ஜெரூஸல எல்லைகளை தவிர்த்து, ஏற்கனவே நிர்மாணிக்கப் பட்டுள்ள குடியிருப்புக்களை ஒன்றிணைத்து, சாக்கடல் வரை மேலும் நீண்ட எல்லைகளை ஆக்கிரமித்து நிர்மாணிக்கப் படவுள்ள பாரிய ஜெரூஸல நகர திட்டத்தின் ஒரு பகுதியாகும் என இஸ்ரேல் அமைச்சர் அந்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலின் தலைநகரான ஜெரூசலத்தில் புதிய யூத குடியிருப்புக்களை நிர்மாணிப்பதே இந்த திட்டத்தின் பிரதான நோக்கம் என இஸ்ரேலிய அமைச்சர் யோவ் கலாந்த் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத் தக்கது. (மக்தூம்)

Author: verified_user

0 comments: