Monday, 25 December 2017

நீரிலும், நிலத்திலும் இயங்கும் விமானம் ~ சோதனை வெற்றி! சீனா அபாரம்!

நீரிலும் நிலத்திலும் செல்லக்கூடிய விமானத்தை சீனா வெற்றிகரமாக சோதித்தது.

நீரிலும் நிலத்திலும் செல்லக்கூடிய விமான ரகங்களிலேயே உலகின் பெரிய விமானம் ஒன்றை சொந்தமாக தயாரித்து சீனா வெற்றிகரமாக சோதித்தது (China’s domestically developed AG600, the world’s largest amphibious aircraft). இந்த சோதனையோட்ட வெற்றி அதன் ராணுவ கட்டமைப்பை மேலும் பலப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

AG600 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விமானம் தென் சீன பிரதேசமான குவாங்டோங் மாகாணத்தின் ஜூஹாய் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட இந்த நீர் நில விமானம் (amphibious aircraft) தென் சீனக் கடலில் வெற்றிகரமாக இறங்கியது. தென் சீனக் கடல் யாருக்குச் சொந்தம் என சீனாவுடன் பிலிப்பைன்ஸ், ஜப்பான், மலேஷியா, புருணை, தைவான், இந்தோனேஷியா, வியட்னாம் போன்ற நாடுகள் மல்லுக்கட்டி வரும் நிலையிலும், வட கொரியாவைச் சுற்றி போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையிலும் இச்சோதனை ஓட்ட வெற்றி ராணுவ முக்கியத்துவம் பெறுவதாக சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

இந்த நீர் நில விமானத்தில் (amphibious aircraft) அவசரகாலம் மற்றும் கடல் தேடுதல் பணிகளின் போது 50 பேர் வரை பயணம் செய்யலாம். 12 மெட்ரிக் டன் எடையளவு நீரை எடுத்துச் சென்று 20 நிமிடங்களில் காட்டுத்தீயின் மீது ஊற்ற முடியும். சுமார் 53.5 டன் எடையுடன் 4,500 கி.மீ (2,800 மைல்) இடை நிற்காமல் பறக்கக்கூடியது.

சீன அரசுக்குச் சொந்தமான விமான தயாரிப்பு நிறுவனத்தால் கடந்த 8 ஆண்டுகளாக கட்டப்பட்டு வந்தது. இந்த விமானம் போயிங் 737 விமானத்தை போன்ற அளவுள்ளது. இந்த வருடம் ஆரம்பத்தில் சோதனை செய்ய திட்டமிடப்பட்டது ஆண்டின் கடைசியில் சோனை செய்யப்பட்டுள்ளது. தாமதத்திற்கான காரணம் வெளியிடப்படவில்லை.

Source: Emirates 247
தமிழில் - நம்மஊரான்

Author: verified_user

0 comments: