Friday, 1 December 2017

எயிட்ஸ் நோளாளி அழுகின்றான்( கவிதை) - இன்று உலக எயிட்ஸ் தினம்

(அப்துர் ரஹ்மான் - அக்கரைப்பற்று) தவறான முறையில் எயிட்ஸ் தொற்றி மரணப்படுக்கையில் கிடக்கும் ஓர் எயிட்ஸ் நோயாளி அழுகிறான். 

அற்ப துளிக்காக
ஆயுள் கடல் 
முழுவதும்
வடிந்து கிடக்கிறது.

வீசப்பட்ட துளி
என் உடம்புக்கு 
நானே வீசிய 
அசிட் வீச்சு..

புண்களால்
உருக்குலைந்து கிடக்கிறேன் . 
மின் குமிழை
அணைத்தேன்.

இருளடைந்தது வாழ்க்கை.
சுகத்தை எதிர்பார்த்து
கட்டிலிற் கிடந்தேன்.

இப்போது
மரணத்தை எதிர்பார்த்து
கட்டிலில் கிடக்கிறேன்.

தாள்களை
எண்ணிக் கொடுத்தேன்..
எண்ணில் அடங்காத புண்களை
என்னில்
வாங்கிக் கொண்டேன்.


மானத்தை
ஒருத்தியிடம் இழந்தேன்.
குடும்ப மானமே
இழந்து போக
காரணமானேன்.

எயிட்ஸ் விலைமாதுவின்
எச்சில் தட்டில்
துப்பப்பட்ட
என் சுண்ணாம்பு.
ஊரே துப்புகிறது

என்னை.
தாகப் பட்ட நான்
சாபப் பட்டேன்.
பரிதாபப்படுகிறீர்கள்
பிழைக்காக
பச்சாதபப்படுகிறேன்.


பிழைக்காக 
பிழைபொறுப்புத்தேடியும்
பிழைக்க மாட்டேனே.
அந்தோ!

அன்று
ஆசையை
அடக்கத் தெரியவில்லை.


இன்று
கண்ணீரை
அடக்கத் தெரியவில்லை.

அறைக்குள்ளே
அடக்கி வைக்கப்பட்டிருக்கிறேன்.
என்னை
அடக்கம் செய்யும் வரை.

இவ்வளவு தான்
என் வாழ்க்கையின்
உள் அடக்கம். 

தலைப்பிட சொல்கிறீர்களா
இடுகிறேன்.
"சுகத்துக்காக
நோயாளியானவன்."

Author: verified_user

0 comments: