Sunday, 3 December 2017

டுபாயிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட இலங்கையர்களுக்கு இந்தியாவில் நேர்ந்த கதி!

போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி சட்டவிரோதமாக டுபாய் சென்று, அங்குள்ள குடியுரிமைப் பிரிவு அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட்ட இலங்கை அகதிகள் இருவர் கோவையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை - குப்பம் சீனிவாச நகரில் வசித்து வந்த 31 வதுடைய பகீரதன் மற்றும் திருச்சி - சுந்தர் நகர் 6ஆவது வீதியில் வசித்து வந்த 23 வயதுடைய சசிதரன் இருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் சில ஆண்டுகளுக்கு முன் இலங்கையில் இருந்து உரிய அனுமதியில்லாமல் தமிழகம் வந்து, வெளியில் தங்கி வேலை செய்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் மூலமாக போலி கடவுச்சீட்டு மூலமாக டுபாய் சென்றுள்ளனர்.

டுபாயில் விமான நிலையத்தில் குடியுரிமைப் பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில் இருவரது கடவுச்சீட்டிலும் இலங்கை முகவரி இருந்தது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, இருவரும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஆனால், இலங்கை விமான நிலையத்தில் பகீதரன், சசிதரனிடம் குடியுரிமைப் பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இருவரும் தமிழகத்தில் வசித்து வந்தது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, இருவரையும் இலங்கையில் இருந்து கோவைக்கு வந்த விமானத்தில் வெள்ளிக்கிழமை அனுப்பி வைத்துள்ளனர்.

அது குறித்து, கோவை விமான நிலைய அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணி அளவில் கோவை விமான நிலையம் வந்தடைந்த பகீரதன், சசிதரன் ஆகியோரை குடியுரிமைப் பிரிவு அதிகாரிகள் பிடித்து பீளமேடு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இருவர் மீதும் கடவுச்சீட்டு மோசடிப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கோவை நீதிமன்றத்தில் சனிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர்.

இருப்பினும், இருவரும் இலங்கை அகதிகள் என்பதால் மாவட்ட ஆட்சியர் பரிந்துரையின் பேரில் சென்னை, புழல் சிறையில் அடைக்கவும் பொலிஸார் திட்டமிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.(TW)

Author: verified_user

0 comments: