Saturday, 2 December 2017

சின்னத்திரையால் வந்த விபரீதம் - 7 வயது சிறுமி பரிதாபமாக பலி

இந்தியா - கர்நாடகாவில் தொலைக்காட்சி சீரியலைப் பார்த்து, அதில் வரும் கதாபாத்திரத்தைப் போல தீ நடனம் ஆடிய 7 வயது சிறுமி, உடல் கருகி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் ஹரிஹரா நகரைச்; சேர்ந்தவர் மஞ்சுநாத். கூலித் தொழிலாளியான இவரது மனைவி சைத்ரா, மகள் பிரார்த்தனா (7). பிரார்த்தனா 2-ம் வகுப்பு படித்து வந்தார். வீட்டில் தொலைக்காட்சியில் ஒரு குறிப்பிட்ட கன்னட சீரியலை பார்ப்பது வழக்கம்.

இந்த சீரியலில் நடிகை ஒருவர் தன் கை, கால்களில் தீ வைத்து, தீப்பந்தம் ஏந்தி நடனமாடும் காட்சிகள் வந்தன.

அதைப் பார்த்த பிரார்த்தனா, கடந்த 11 ஆம் திகதி தானும் கையில் ஒரு பேப்பரை எடுத்து தீ வைத்துக்கொண்டு நடனமாடினாள். அப்போது பிரார்த்தனாவின் ஆடையில் தீப்பற்றிக் கொண்டது. வலி தாங்க முடியாமல் அலறியுள்ளார்.

அயலவர்கள் ஓடிவந்து, சிறுமியின் உடலில் பற்றியிருந்த தீயை அணைத்தனர். உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சிறுமியைக் கொண்டு சென்றனர்.

15 நாட்களுக்கு மேலாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், பிரார்த்தனா சிகிச்சை பலனின்றி கடந்த 29 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து, சிறுமியின் தந்தை மஞ்சுநாத் அளித்த முறைப்பாட்டின் பேரில் ஹரிஹரா நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தாவணகெரே மாவட்ட நிர்வாகம், சீரியல் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை ஆரம்பிப்பதாக அறிவித்துள்ளது.

Author: verified_user

0 comments: