Monday, 25 December 2017

20 வருடமாக துப்பாக்கிச் சூட்டில் அசத்தும் 80 வயது மூதாட்டி!

உத்தரபிரதேச மாநிலத்தில் 80 வயது பாட்டி பர்காஷி தோமர் என்பவர் துப்பாக்கி சுடும் போட்டிகளில் கலந்து கொண்டு பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறார். அவர் அங்குள்ள பெண்களுக்கு முன் மாதிரியாக விளங்குகிறார்.

இது குறித்து பாட்டி பர்காஷி கூறியதாவது:-

என் பெயர் பர்காஷி தோமர். எனக்கு 80 வயது ஆகிறது. நான் 60 வயதில் முதன் முதலாக துப்பாக்கியை தூக்கினேன். எல்லோரும் என்னை துப்பாக்கி பாட்டி என அழைக்கிறார்கள். வரதட்சணை கொடுமையால் பல பெண்கள் பலியாகும் உத்தரபிரதேசத்தில் எனது கிராமம் மட்டும் விதி விலக்கு. இங்கு யாரும் பெண்களிடம் வரதட்சணை கேட்க மாட்டார்கள். கேட்டால் துப்பாக்கி பாட்டி சுட்டுவிடுவார் என்ற பயம் தான்.

நான் பள்ளிக்கூடம் சென்றது இல்லை. என்னை யாரும் படிக்க வைக்கவும் இல்லை. நான் வீடுகளிலும் தோட்டங்களிலும் பணியாற்றினேன். எல்லோரும் ஓய்வு பெறும் வயதில் நான் எனக்கு பிடித்ததை செய்ய தொடங்கினேன். எனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்த எண்ணினேன். 

நான் எனது பேரக்குழந்தைகளுடன் துப்பாக்கி சுடும் பயிற்சி நிலையங்களுக்கு சென்றேன். அங்கு அமர்ந்து அவர்கள் சுடுவதை கவனித்தேன். பிறகு என்னை அவர்கள் சுடச்சொன்னார்கள். நான் சரியாக இலக்குகளை சுட்டேன். என்னால் சிறப்பாக சுட முடியும் என்றும் பயிற்சி எடுத்துக்கொள்ளும் படி பயிற்சியாளர் கூறினார். 

பல கிண்டல்களுக்கு மத்தியிலும் நான் பயிற்சி மேற்கொண்டேன். தற்போது நான் தேசிய அளவில் பல பதக்கங்களை வாங்கி உள்ளேன் என கூறினார்

பாட்டி பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தோன்றி உள்ளார். அவரை ரோல்மாடலாக கொண்டு பல பெண்கள் தற்போது துப்பாக்கி பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

Author: verified_user

0 comments: