Monday, 27 November 2017

அல் ஜஸீரா தொலைக்காட்சி மீது குண்டுவீசுங்கள் - அமீரக இராணுவ ஜெனரலின் பேச்சால் பதற்றம்.

கத்தரிலிருந்து செயல்படும் அல் ஜஸீரா தொலைகாட்சி மீது வெடிகுண்டு வீசி அழிக்க வேண்டும் என ஐக்கிய அரபு அமீரக இராணுவ ஜெனரல் கல்ஃபான் அழைப்பு விடுத்திருப்பது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வெள்ளியன்று எகிப்திலுள்ள சினாய் மலைப்பகுதி பள்ளிவாசல் ஒன்றில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் நூற்றுக்கணக்கான அப்பாவிகள் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலுக்கு அல் ஜஸிராவே காரணம் எனவும் அதனை வெடிகுண்டு வீசி அழிக்கக் கத்தருக்கு எதிரான சக்திகள் ஓன்றிணைய வேண்டுமெனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தம் ட்விட்டர் கணக்கில் வெளியிட்ட கருத்துகள் வருமாறு..

'"கூட்டமைப்பு பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண் மீது குண்டுவீச வேண்டும்... அது ஐ எஸ் ஐ எஸ், அல் காயிதா, அல் நுஸ்ரா போன்றவற்றின் சானலான அல் ஜஸீரா பயங்கரவாதி'"

'"இனியும் எவ்வளவு காலத்துக்குத்தான் எகிப்து மற்றும் அரபு உலகத்தின் பாதுகாப்புக்கு இவர்கள் அச்சுறுத்தலாக தொடர்வர்?'"

இத்துடன் ஐ எஸ் ஐ எஸ் தலைவர் பக்தாதி, அல் காயிதா முன்னாள் தலைவர் பின் லேடன், ஹிஸ்புல்லாஹ் தலைவர் ஹஸன் நஸ்ருல்லாஹ், 21 ஆம் நூற்றாண்டின் சிறந்த அறிஞர் என உலமாக்களால் தேர்வு செய்யப்பட்ட யூசுஃப் அல் கர்ளாவி ஆகியோரின் புகைப்படத்துடன் அல் ஜஸீரா தொலைகாட்சியின் லோகோவினை இணைத்து வெளியிட்டுள்ளார்.

இவரின் இச்செய்கைக்கு எதிராக அல் ஜஸீராவின் நிர்வாக இயக்குநர் யாசிர் அபு ஹிலாலாஹ், '"ஐக்கிய அரபு அமீரகம் இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் அமீரகத்தின் சாதாரணதொரு பிரஜையன்று; அமீரக அரசின் பொறுப்புமிக்க அதிகாரியான அவரின் கருத்துகள் அமீரகத்தின் நிலைப்பாட்டைப் பிரதிபலிப்பதாக அமையும். சினாய் மலை பயங்கரவாதத் தாக்குதலால் எழுந்துள்ள கோபத்தை, அல் ஜஸீராவுக்கு எதிராக திசைதிருப்பிவிட முயற்சி செய்கிறார்.

கஃப்லான் தீவிரவாதத்தைத் தூண்டுகிறார். ஏதேனும் பயங்கரவாதக் குற்றமிழைத்தல் மட்டுமே பயங்கரவாதமல்ல; பயங்கரவாதத்துக்குத் தூண்டும் விதத்தில் பேசுவதும் அதற்கு உரம் சேர்க்கும் வகையிலான செய்கையும் பயங்கரவாதமே.

அல் ஜஸீரா மற்றும் அதன் பணியாளர்களுக்கு எதிராக ஏதேனும் தாக்குதல் நடத்தப்பட்டால் அதற்குரிய முழு பொறுப்பும் கஃப்லானைச் சாரும்'"

என்று கூறியுள்ளார்.

கஃப்லான் இதற்கு முன்னரும் வெறுப்பை விதைக்கும் வகையிலான சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டுள்ளார். எனினும் அமீரகத்தின் வெறுப்பு பேச்சுக்கு எதிரான சட்டப்படி இதுவரை ஒருமுறைகூட அவர்மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

கடந்த ஆண்டு மார்ச் மாதம், '"மத்திய கிழக்கின் எதிரிகளுக்கு எதிராக அரபுகள் இஸ்ரேலுடன் இணைந்து பணியாற்ற முன்வரவேண்டும்'" என ஈரான் மற்றும் ஷியா முஸ்லிம்களுக்கு எதிராக மறைமுக தாக்குதல் தொடுத்திருந்தார்.

இந்த ஆண்டு துவக்கத்தில், சில முஸ்லிம் நாடுகளிலிருந்துள்ள முஸ்லிம்கள் அமெரிக்காவில் நுழைய தடை சட்டமியற்றிய ட்ரம்பின் நடவடிக்கைக்கு முழு ஆதரவு அளிப்பதாக தெரிவித்திருந்தார்.

அதே போன்று, கத்தரைத் தமது எட்டாவது அமீரகமாக ஐக்கிய அரபு அமீரகம் சேர்த்துக் கொள்ள வேண்டுமெனக் கூறியிருந்தார்.

கத்தர் மீதான தடையினை நீக்குவதற்கு சவூதி தலைமையிலான நாடுகள் விதித்த நிபந்தனையில் அல் ஜஸீரா தொலைக்காட்சியினை மூட வேண்டுமென்பதும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.(அப்துர் ரஹ்மான்)

Author: verified_user

0 comments: