Wednesday, 22 November 2017

சவூதி அரேபியா - லெபனான் விவகாரம்! சவூதியிலிருந்து லெபனானுக்குத் திரும்பினார் பிரதமர் ஹரீரி...

கடந்த நவம்பர் 4 ஆம் தேதி சவூதி சென்று, அங்கிருந்து தம் பதவியை ராஜினாமா செய்த லெபனான் பிரதமர் ஹரீரி நாடு திரும்பினார். லெபனான் அரசியல் அமைப்புச் சட்ட முறைப்படி தம் ராஜினாமாவை நாட்டிலிருந்தே செய்வேன் என அவர் அறிவித்துள்ளார். லெபனானின் இன்றைய சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

லெபனானில் அதிபர் மிகேல் அவுன் தலைமையில் சுன்னி - ஷியா கூட்டாட்சி நடைபெறுகிறது. பிரதமராக இருக்கும் ஹரீரி, சவூதி ஆதரவுடைய சுன்னி தலைவர். இவர் லெபனான் மற்றும் சவூதி இரட்டை குடியுரிமையுள்ளவர் என்பதும் சவூத் குடும்ப உறவினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதே சமயம், நாடாளுமன்றத்தில் அதிக உறுப்பினர்களுடனும் இராணுவ வலிமையுடனுமுள்ள ஹிஸ்புல்லாஹ் ஈரான் ஆதரவுடைய ஷியா அமைப்பு. லெபனானின் இஸ்ரேலிய எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் பணிகளின் முழு பொறுப்புகளை ஹிஸ்புல்லாஹ் கவனித்துக் கொள்கிறது. இதன் தலைவராக இருப்பவர் நஸ்ருல்லாஹ்.

கடந்த நவம்பர் 4 ஆம் தேதி சவூதி சுற்றுப்பயணம் சென்ற பிரதமர் ஹரீரி, ரியாதில் சவூதியின் அதிகாரப்பூர்வ தொலைகாட்சியான அல் அரேபியாவில் தோன்றி, தம் பதவியை ராஜினாமா செய்வதாகவும் தம் உயிருக்கு ஹிஸ்புல்லாஹ்வால் ஆபத்து உள்ளதாகவும் அறிவித்தார்.

அரசாங்கச் சுற்றுப்பயணமாக சவூதி சென்ற அவரை, அதிகாரப்பூர்வமாக சவூதி உயர் அதிகாரத்திலுள்ளோர் எவரும் விமான நிலையத்தில் வரவேற்காமல் இருந்தது லெபனான் அரசு அதிகாரிகள் இடையே சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், அவர் சவூதி சென்ற அன்றைய தினமே திடீரென தம் பதவியை ராஜினாமா செய்வதாக சவூதி அரசு தொலைக்காட்சியில் அறிவித்தது லெபனானின் ஆளும் மற்றும் எதிர்கட்சிகளிடையே பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

ஹரீரியின் ஃப்யூசர் மூவ்மென்ட் கட்சியும் எதிர்கட்சியும் இணைந்து, அவரின் ராஜினாமாவை ஏற்கப்போவதில்லை எனவும் லெபனானை மற்றொரு நாடு இயக்குவதற்கு அனுமதிக்க மாட்டோம் எனவும் ஹரீரியைச் சவூதி சிறையிட்டு கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்துள்ளது எனவும் குற்றம்சுமத்தினர்.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமையன்று பாரீஸ் சென்ற ஹரீரி ஃபிரான்ஸ் அதிபர் இமானுவேலைச் சந்தித்து பேசிய பின்னர் லெபனான் வந்தடைந்தார். லெபனானின் அரசியல் அமைப்புச் சட்டமுறைப்படி லெபனானிலிருந்தே தம் ராஜினாமாவை அறிவிக்க இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

லெபனானின் அதிபர் அவ்ன், ஹரீரியின் ராஜினாமாவின் பின்னணியில் சவூதி இருப்பதாக குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சவூதி - ஈரானிடையிலான அதிகாரவெறிச் சண்டை அரபு நாடுகளின் ஸ்திரத்தன்மைக்கு மிகப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

சவூதியின் மன்னர் சல்மான், முறைப்படி தமக்குப் பின்னர் மன்னராக வரிசையில் இருந்த அவரின் சகோதரர்களும் உறவினர்களுமான சுமார் 9 இளவரசர்களின் தகுதியினைக் குறைத்துவிட்டு தம் மகன் முஹம்மது பின் சல்மானை அடுத்த மன்னராவதற்கான தகுதியான பட்டத்து இளவரசராக அறிவித்ததன் பின்னர் அரபு நாடுகளில் நடக்கும் சம்பவங்கள் வளைகுடா பகுதியில் பெரும் பதட்டங்களை உருவாக்கியுள்ளது.(அப்துர் ரஹ்மான்)

Author: verified_user

0 comments: