Thursday, 23 November 2017

சவூதி அரேபியா உருவாக்கி வரும் புதிய சோமாலியா!

யெமன் மீது சவூதி தலைமையிலான அரபு நாடுகள் நடத்தும் தாக்குதலால் அந்நாடு பஞ்சத்தை நோக்கி இழுத்து செல்லப்படுகிறது.

இரண்டரை ஆண்டுகளாக யெமனின் அதிபர் ஹாதிக்கு எதிராக ஹூதிகள் நடத்திய போராட்டத்தின் இறுதியில் யெமன் தலைநகரை 2015 ஆம் ஆண்டு ஹூதிகள் கைப்பற்றினர். அப்த் ரப்பு ஹாதி சவூதியில் தஞ்சமடைந்தார். இதனைத் தொடர்ந்து ஹூதிகளிடமிருந்து யெமனை மீட்கிறோம் என்ற பெயரில் சவூதி தலைமையில் அரபுநாடுகள் யெமனுக்கு எதிராக தாக்குதல் ஆரம்பித்தன.

இத்தாக்குதலில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 10,000 பேருக்கும் அதிகமாக கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 2 மில்லியன் மக்கள் அகதிகளாக்கப்பட்டுள்ளனர். யெமனின் முக்கிய துறைமுகங்கள் மற்றும் சர்வதேச விமானநிலையங்கள் ஹூதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளன. இதனால், துறைமுகவழியான கப்பல் போக்குவரத்தைச் சவூதி தடுத்து நிறுத்தியுள்ளதோடு, விமான நிலையம் மீது தாக்குதல் நடத்தி விமானப் போக்குவரத்தையும் நிறுத்த வைத்துள்ளது.

மருந்து பொருட்களின் குறைவால் தாக்குதலில் காயமடைந்தோருக்கு முதலுதவிகள் கூட செய்ய இயலா நிலை உள்ளது. நாடு முழுவதும் காலரா நோய்ப் பரவியுள்ளது. இந்நிலையில், உணவுப்பொருட்களின் வரத்து குறைவு அத்தியாவசியப் பொருட்களின் விலையினைத் தாறுமாறாக உயர்த்தியுள்ளது. குடிநீர்கூட கிடைக்கா நிலையில் போராடும் மக்களிடையே பஞ்சம் தலைவிரித்தாட ஆரம்பித்துள்ளது.

தினசரி 350,000 மெட்ரிக் டன் உணவுப்பொருள் தேவையுடைய யெமனுக்குத் தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான சேவை வழியாக தினசரி 75,000 மெட்ரிக் டன் உணவு பொருட்கள் மட்டுமே யெமனுக்குச் சென்றடைகின்றன. யெமன் உணவு கிடங்கிகளில் சேமிப்பிலிருக்கும் பொருட்கள் மேலும் 4 வாரங்களுக்கு மட்டுமே தாக்குபிடிக்கும் நிலையில், தற்போதைய நிலை யெமனில் தொடர்ந்தால் வளைகுடா பகுதியிலொரு சோமாலியாவினை மிகச் சமீபத்திலேயே காணலாம்.
(அப்துர் ரஹ்மான்)

Author: verified_user

0 comments: