மன்னர் சல்மானின் அறிவிப்பு, இலங்கையர்களுக்கு பாதிப்பா..? விரிவான சிறப்புப் பார்வை!

Published On Friday, 6 October 2017 | 13:08:00

சவுதி அரேபியாவில் பெண்கள் வாகனத்தை செலுத்துவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என அந்நாட்டு மன்னர் புதிய சட்டம் ஒன்றை கொண்டு வரவுள்ளார்.

இது சர்வதேச ரீதியில் பாரிய வரவேற்பை பெற்றுள்ளது. எனினும், சவுதி அரேபியாவில் சாரதி தொழிலில் ஈடுபட்டுள்ள பலருக்கும் இது பாரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக சவுதி அரேபியாவில் இலங்கை மற்றும் இந்திய நாட்டை சேர்ந்தவர்களே சாரதியாக கடமையாற்றி வரும் நிலையில், அந்நாட்டு மன்னரின் அறிவிப்பால் பலரும் வேலை இழக்கும் ஆபத்து இருப்பதாக அச்சம் கொண்டுள்ளனர்.

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சவுதி அரேபியா நாட்டின் உள்துறை அமைச்சின் தகவல்படி, 190,000 இலங்கையர்கள் அந்நாட்டில் தொழில் செய்து வருகின்றனர் என சவுதிக்கான இலங்கை தூதுவர் அஸ்மி தாசிம் குறிப்பிட்டுள்ளார்.

இவர்களில் சுமார் 90,000 பேர் வீட்டு வேலைகளுடன் தொடர்புடையவர்கள் எனவும், அநேகமானோர் வீட்டுப் பணிப் பெண்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

சவுதி அரேபியாவில் நிறுவனங்களிலும், வீடுகளிலும் வெளிநாட்டவர்கள் சாரதிகளாக கடமையாற்றுகின்றனர்.

இந்நிலையில், அந்நாட்டில் பெண்களுக்கு வாகனம் செலுத்துவதற்கு அனுமதி வழங்கப்படும் பட்சத்தில் நிறுவனங்களில் தொழில் புரியும் சாரதிகள் பாதிப்படைய மாட்டார்கள்.

மாறாக வீடுகளில் சாரதியாக கடமையாற்றுபவர்களுக்கு பாதிப்பாக அமையும்" என அஸ்மி தாசிம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் சாரதிகளுக்கு தட்டுப்பாடு உள்ளதாக சுட்டிக் காட்டியுள்ள சவுதிக்கான இலங்கைத் தூதுவர் அஸ்மி தாசிம், அந்நாட்டில் வீட்டில் சாரதியாக கடமையாற்ற வேண்டும் என்ற ஆர்வம் தற்போது இலங்கையர்களிடம் இல்லை" எனவும் கூறியுள்ளார்.

மேலும், "நிறுவனங்களில் பணி புரியும் சாரதிகளுக்கான உரிமைகள், சலுகைகள் வீட்டு வாகன சாரதிகளுக்கு கிடைப்பது இல்லை. அவர்களின் சுதந்திரம் மட்டுப்படுத்தப்படுகின்றது.

இது போன்ற காரணங்களினால் இலங்கையர்கள் குறிப்பாக வீட்டு சாரதி வேலை வாய்ப்பு தொடர்பாக ஆர்வம் காட்டுவதில்லை” என சவுதிக்கான இலங்கைத் தூதுவர் குறிப்பிட்டுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Loading...
 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved