Breaking News

கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த இலங்கையின் 80 வயதான தாய்

மாத்தறை தெனியாயப் பகுதியில் வசிக்கும் தாயொருவர் 20 பிள்ளையைப் பெற்றெடுத்ததைத் தொடர்ந்து கின்னஸ் சாதனைக்கான உரிமையாளர் ஆகியுள்ளதாக தேசிய முதியோர் அலுவலகத்தின் பணிப்பாளர் சுமின்த சிங்கப்புலி தெரிவித்துள்ளார்.

தற்போது 19 பிள்ளைகளைப் பெற்ற தாய் ஒருவரே கின்னஸ் சாதனையை நிலைநாட்டியுள்ளதாகவும் எனினும் சட்ட ரீதியான சாதனையை ரொசலின் நோனாவுக்கு வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

80 வயதான ரொசலின் நோனா கூறுகையில், தனது 20 பிள்ளைகளில் 15 பிள்ளைகளே தற்போது உயிரோடு உள்ளனர். 05 பிள்ளைகள் வயோதிபராகி உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.

தனது மூத்த மகனுக்கு 60 வயதாகியுள்ளதாகவும் தனது கணவன் ஜினதாசவுக்கு 87 வயதாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தாம் 15 வயதில் திருமணம் முடித்ததாகவும், வருடா வருடம் பிள்ளைகளை பெற்றெடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிள்ளைகளை வளர்ப்பதற்கு தாம் மிகவும் சிரமப்பட்டதாக தெரிவித்த அவர், தனது பிள்ளைகள் அவர்களின் கணவர்மார் மற்றும் மனைவிமார், பேரப்பிள்ளைகள் என்று 151 அங்கத்தவர்கள் உள்ளதாக குறிப்பிட்டார்.

அத்துடன் இறந்த பிள்ளைகளின் நினைவு வரும் போதுதான் கவலையாக உள்ளது என்றும் ரொசலின் நோனா குறிப்பிட்டுள்ளார்.

உலக முதியோர் தின விழா பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்றைய தினம் இடம்பெற்றது.

சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் இந்த விழாவில் கலந்துகொண்டு தெனியாயப் பிரதேசத்தில் வசிக்கும் 80 வயதான 20 பிள்ளைகளைப் பெற்ற ரொசலின் நோனா என்ற தாய்க்கு விசேட பரிசு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

No comments