Sunday, 17 September 2017

இரட்டை குழந்தைகளை கொன்று தாயும் தற்கொலை!! பதை பதைக்கும் சம்பவம்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன்ஊத்துக்குளி அன்னை கஸ்தூரிபாய் வீதியை சேர்ந்தவர் ராஜேஸ் (வயது 28). இவர் திருப்பூரில் பனியன் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி வித்யா (26). இவர்களுக்கு பவின், பவேஷ் என்ற ஒரு வயது இரட்டை ஆண் குழந்தைகள் இருந்தனர்.

ராஜேசின் தந்தை கருப்பசாமி ஓய்வு பெற்ற வங்கி ஊழியர். அவரது தாய் லதா. இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். கடந்த சில நாட்களாக வித்யா தனிக்குடித்தனம் செல்ல வேண்டும் என்று ராஜேசிடம் கூறி வந்ததாக தெரிகிறது. அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து வந்தார். 

இந்த நிலையில் நேற்று வீட்டின் படுக்கை அறையில் உள்புறமாக பூட்டிக் கொண்டு குழந்தைகளுடன் வித்யா உள்ளே இருந்தார். வீட்டில் இருந்த லதா வழக்கம் போல் மதியம் குழந்தைகளும், வித்யாவும் தூங்குவதாக நினைத்து வீட்டின் முன் அறையில் இருந்தார்.

வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் வீட்டிற்கு வந்த ராஜேஸ் படுக்கை அறை கதவை தட்டினார். ஆனால் வித்யா கதவை திறக்கவில்லை. பின்னர் 10 நிமிடம் கழித்து மீண்டும் கதவை தட்டிய போதும், திறக்காததால் வித்யா என்று கூப்பிட்டு பார்த்தார். ஆனால் உள்ளே இருந்து எந்தவித சத்தமும் வராததால் ராஜேஸ் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது வித்யா துப்பட்டாவில் தூக்கில் தொங்கி கொண்டிருந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேஸ் மற்றும் அவரது பெற்றோர், அக்கம், பக்கத்தினர் உதவியுடன் வித்யாவை தூக்கில் தொங்கி கொண்டிருந்த வித்யாவை மீட்டனர். பின்னர் கட்டிலில் படுத்து இருந்த குழந்தைகளை எழுப்பி பார்த்தபோது, குழந்தைகள் எந்தவித அசைவுமின்றி கிடந்தன.

இதையடுத்து குழந்தைகளையும், வித்யாவையும் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே 3 பேரும் இறந்து விட்டதாக கூறினார். 

குழந்தைகளை கொன்றுவிட்டு வித்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. குழந்தைகள் மற்றும் மனைவியின் உடல்களை பார்த்து ராஜேஸ் கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த பொள்ளாச்சி மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேந்திரன் மற்றும் போலீசார் ராஜேசின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் அங்கு படுக்கை அறையில் போலீசார் சோதனை செய்தபோது, வித்யா எழுதிய கடிதம் சிக்கியது.

அந்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் ஆஸ்பத்திரியில் இருந்த ராஜேஸிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வித்யாவுக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகள் மட்டும் ஆவதால் சப்–கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது:–

திருமணத்திற்கு முன் ராஜேசும், வித்யாவும் கோவை ரோடு முள்ளுப்பாடி ரெயில்வே கேட் அருகே ஒரு தனியார் பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 2 பேரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அந்த பெண்ணின் வீட்டில் முதலில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாக தெரிகிறது.

மேலும் வித்யாவின் உறவினர்கள் அவரை எந்த நிகழ்ச்சிகளுக்கும் அழைக்கவில்லை என்றும் மனவருத்தத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் ராஜேசை தனிக்குடித்தனம் செல்ல வேண்டும் என்று வித்யா வற்புறுத்தி வந்து உள்ளார். 

இந்த நிலையில் இன்று (நேற்று) வீட்டின் படுக்கை அறை கதவை பூட்டி கொண்டு 2 குழந்தைகளை கொன்று, தானும் தற்கொலை செய்து கொண்டு உள்ளார். குழந்தைகளுக்கு வி‌ஷம் கொடுத்து கொன்றாரா? அல்லது தலையணையால் முகத்தை அழுத்திய போது, குழந்தைகள் மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்ததா? என்பது தெரியவில்லை. குழந்தைகளின் உடலை பிரேத பரிசோதனை செய்த பிறகே தெரியவரும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

வித்யா தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு கடிதம் எழுதி வைத்து இருந்தார். அதில் எங்கள் சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்று குறிப்பிட்டு இருந்தார். மேலும், கணவர் ராஜேசுக்கு வித்யா எழுதி இருந்த அந்த கடிதத்தில், ஏன்டா வா தனியா போலாம், தனியா போலானு எத்தனை முறை சொன்னேன். ஏன் வரல. 

இப்போ நாங்க இல்லாம நீ மட்டும் தனியா இருக்க போறியா. நம்ம பசங்கள விட்டுட்டு போக முடியல. அதான் அவங்களையும் கூட்டிட்டு போறேன். 

என்னை நீ உண்மையா லவ் பண்ணல. அதான் நீ என் பேச்சை கேட்கல. பரவாயில்ல இப்போ நீ சந்தோ‌ஷமா இரு. நான் பேசுனதை விளையாட்டை எடுத்துகிட்டீங்க இல்ல. எங்க அம்மா, அப்பாவை நல்லா பார்த்துக்கோ பிளீஷ். ஐ லவ் யூ சோ மச் என்று கூறப்பட்டு இருந்தது.

Author: verified_user

0 comments: