கத்தர் அமீர், சவூதி இளவரசர் தொலைபேசி உரையாடல்! - விரிசல்கள் நீங்க இறைவனை பிரார்த்திப்போம்.

Published On Saturday, 9 September 2017 | 17:50:00

கத்தர் மீது சவூதி உட்பட நான்கு அரபு நாடுகள் தடை விதித்து மூன்று மாதங்கள் கடந்த நிலையில், முதன் முறையாக சவூதி இளவரசர் முஹம்மது பின் சல்மானும் கத்தர் அமீர் தமீம் பின் ஹமத் அல் தானியும் தொலைபேசியில் பிரச்சனை குறித்து உரையாடினர். கத்தர் மீதான தடை விசயத்தில் சுமூகத் தீர்வுக்கான சிறந்த முன்னேற்றமாக இந்நிகழ்வு கருதப்படுகிறது.

இரு நாடுகளின் இறையாண்மையும் பாதிக்காத வகையில் பிரச்சனைக்குத் தீர்வு காண தம் புறத்திலிருந்து இரு தூதுவர்களை நியமிக்கப் போவதாக சவூதி இளவரசர் முஹம்மது பின் சல்மான் கொடுத்த வாக்குறுதியினைக் கத்தர் அமீர் தமீம் பின் ஹமத் அல் தானி வரவேற்றுள்ளார்.

அவர்களுக்கிடையிலான உரையாடலில், உருவாகியுள்ள இப்பிரச்சனை விரைந்து தீர்வு காணப்பட வேண்டிய தேவையும், பேச்சு வார்த்தைகளின் மூலம் GCC நாடுகளின் ஒற்றுமை மற்றும் ஸ்திரத்தன்மை உறுதியாக்கப்பட வேண்டிய அவசியமும் பேசப்பட்டதாக கத்தர் நியூஸ் ஏஜன்ஸி தெரிவித்துள்ளது.

மூன்று மாதங்களைக் கடந்து நீண்டு செல்லும் கத்தர் மீதான தடை விவகாரத்தில் சில நாட்கள் முன்னர் கத்தர் மீது தடை விதித்த அரபு நாடுகள் இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப் போவதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இரு நாட்டு தலைவர்களும் நேரடியாக முதன் முறையாகப் பேசிக்கொண்டது விரைவில் இப்பிரச்சனை தீர்க்கப்படும் என்ற நம்பிக்கையினை உருவாக்கியுள்ளது.
(Abdur Rahman)
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved