Tuesday, 5 September 2017

ரோஹிங்ய முஸ்லிம்களுக்கு ஏன் இந்த அவலம் ! - இந்தத் துயரைத் துடைப்பது யார்?

இன்று மியன்மார் குறித்து பலரும் கதறுகின்றனர். துஆக்கள் கூட ஏற்றுக்கொள்ளப்படுவதில்லையா என்று ஏங்குகின்றனர். இது பலம் வாய்ந்த முஸ்லிம் அரசினால் மாத்திரம் தீர்க்க முடியுமான பிரச்சினை என்பதை பாமரரும் அறிவார்கள். ஆனால், துருக்கி அதிபரைத் தவிர வேறு எந்த ஆட்சியாளரும் அதை உணரவில்லை..!?
கிலாபத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து முஸ்லிம் உம்மத் எதிர்நோக்கிய சவால்கள் ஏராளம்.  அதை வெற்றி கொள்வதற்கான வழிகள் பற்றி பலரும் பல்வேறுவிதமாக சிந்தித்தனர். சிலர் ஆன்மீக ரீதியில் தீர்வு தேடினர். இன்னும் சிலர் அரசியல் ரீதியில் தீர்வு தேடினர். பித்அத்களில் இருந்து விடுபடுவதுதான் ஒரே வழி என்றும் சிலர் சிந்தித்தனர். ஒற்றுமைதான் வழி என்று இன்னும் சிலர் அங்கலாய்த்தனர்.
இஸ்லாம் என்றால் ஆன்மீகம், அரசியல், அகீதா, கல்வி மற்றும் ஐக்கியம் போன்ற அனைத்தையும் உள்ளடக்கியது. ஆகவே, இவை அனைத்தையும் சமாந்தரமாகப் பேச வேண்டும் என்று இன்னும் சிலர் சிந்தித்தனர்.
தனிநபர்களின் உள்ளங்களில் தோன்றிய இக்கவலைகள் காலப்போக்கில் சமூத்தைக் காப்பாற்ற உழைக்கும் இஸ்லாமிய இயக்கங்களாகப் பரிணமித்தன. இஸ்லாமிய கிலாபத்தை வீழ்த்திய சக்திகள் மீண்டும் இஸ்லாமிய கிலாபத் தலை தூக்காமல் இருக்க பல உத்திகளைக் கையாண்டன.
இஸ்லாம் என்றால் ஆன்மீகம், அரசியல், அகீதா, கல்வி, ஐக்கியம் என்ற அனைத்தையும் உள்ளடக்கிய பூரண வாழ்க்கை நெறி என்ற சித்தாந்தம் கொண்ட இயக்கங்கள் விடயத்தில் அவர்கள் மிகவும் அவதானமாக இருந்தனர். இவர்களே இஸ்லாமிய வாதிகள் என்பதையும் தமது உண்மையான எதிரிகள் என்பதையும் தீய சக்திகள் நன்கு விளங்கி வைத்திருந்தன.
இக்வானுல் முஸ்லிமூன், ஜமாதே இஸ்லாமி ஆகியன இஸ்லாத்தின் எதிரிகளால் இலக்கு வைக்கப்பட்ட இரு இஸ்லாமிய இயக்கங்களாகும். ஆன்மீகம், அரசியல், கல்வி, அகீதா, ஐக்கியம் என்ற பல தளங்களிலும் இவ்விரு இயக்கங்களும் மேற்கொள்ளும் பணிகள் அபரிமிதமானவை.
இவர்களது சஞ்சிகைகள், பத்திரிகைகள், ஆக்கங்கள் என்பவற்றன் மூலம் ஏனைய இஸ்லாமிய இயக்கங்களும் தனிநபர்களும் பயனடைந்துள்ளன என்பதில் இருகருத்துக்கு இடமில்லை. இவ்விரு இயக்கங்கங்களும் தமது தஃவா வரலாற்றில் எதிர்கொண்ட சோதனைகள் வர்ணிக்க முடியாதவை.

இக்வான்களின் ஸ்தாபகர் இமாம் ஹஸனுல் பன்னா படுகொலை செய்யப்பட்டார்.  அவரது ஆதரவாளர்கள் பலர் தூக்கில் ஏற்றிக் கொலை செய்யப்பட்டனர். அதேபோல் ஜமாதே இஸ்லாமியின் ஸ்தாபகர் மௌலானா மௌதூதியை தூக்கில் ஏற்றிக் கொலை செய்ய முயன்றனர். அவரது ஆதரவாளர்களை சிறைப்பிடித்து சித்திரவதை செய்தனர்.
இதற்கு மத்தியிலும் இவ்விரு இயக்கங்களும் படைத்த சாதனைகள் ஏராளம். துருக்கிய அதிபர் எர்தூகான் அவர்களும் முதலாவது சுதந்திரமான தேர்தல் மூலம் வெற்றி பெற்ற எகிப்திய ஜனாதிபதி கலாநிதி முர்ஸியும் இவ்விரு இயக்கங்களின் சிந்தனையில் வளர்ந்தவர்கள் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றாகும்.
பல முஸ்லிம் நாடுகளில் இவ்விரு இயக்கங்ளின் சிந்தனையில் வளர்ந்த இஸ்லாமிய வாதிகள் பாராளுமன்றங்களையும் அலங்கரித்தனர்.
இஸ்லாமிய வாதிகள் இவ்வாறு அரசியல் சக்தியாக வளர்ந்ததை நினைத்து இஸ்லாத்தின் எதிரிகள் கவலைப்படவில்லை. ஏனெனில், முஸ்லிம்களுக்குள்ளேயே இஸ்லாமிய வாதிகளின் எதிரிகள் காணப்பட்டனர். இரகசியமாகவோ பரகசியமாகவோ இவர்களை ஊட்டி வளர்த்தால் இவர்களே இஸ்லாமிய வாதிகளை அழித்து விடுவார்கள் என்பதை அவர்கள் நன்கு அறிந்துள்ளனர்.
நடந்ததும் அதுதான். எகிப்தில் புரட்சியை ஏற்படுத்தி முர்ஸியைப் பதவிகவிழ்ப்பதற்கு ஆலோசனை வழங்கியவர்கள் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகள். அதற்கு நிதி உதவி வழங்கியவர்கள் சஊதி அரேபியா மற்றும் டுபாய். நயவஞ்சகமாக நடந்து புரட்சிக்கு சந்தர்ப்பத்தை அமைத்துக் கொடுத்தவர்கள் அந்நூர் என்ற ஸஊதி ஆதரவு ஏகத்துவ அரசியல் கட்சியினர். இன்று எகிப்து இஸ்லாத்தற்கு எதிராக பகிரங்கமாக செயற்படுகிறது.
துருக்கியில் அர்தூகானுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட புரட்சிக்கு திட்டம் தீட்டியவர்கள் இஸ்ரேல், அமெரக்கா மற்றும் மேற்கு நாடுகள். டுபாய் அதற்கு நிதி உதவி செய்தது. இஸ்லாத்தின் பெயரால் வளர்க்கப்பட்ட குலானின் கட்சி அதை முன்னின்று செயற்படுத்த முனைந்தது. ஆனால், அம்முயற்சி தோல்வியில் முடிவடைந்தது.
இஸ்லாமிய வாதிகளுக்கு சார்பாக இருக்கும் கட்டாரை வீழ்த்துவதற்கு இஸ்ரேலும் அமெரிக்காவும் திட்டம் தீட்டியன. ஸஊதியும் துபாயும் பஹ்ரைனும் எகிப்தும் அதை நடைமுறைப்படுத்தின. ஷியாக்களுக்குத் தலைமை வகிக்கும் ஈரானுடன் கதார் தொடர்பு வைத்துள்ளது என்று தமது நடவடிக்கையை நியாயப்படுத்தின. கேவலம் இன்று ஸஊதி ஈரானுடன் தன் தொடர்பைப் புதுப்பித்துக் கொள்ள முயற்சிசெய்து வருகிறது.
வங்காளதேசத்தில் இந்தியாவின் சூழ்ச்சிப்படி ஜமாதே இஸ்லாமியின் முக்கிய தலைவர்கள் மற்றும் பல இஸ்லாமியத் தலைவர்கள் தூக்கில் ஏற்றிக் கொலை செய்யப்பட்டனர். வங்காளதேசத்தில் இஸ்லாமிய வாதிகள் அடக்கி ஒடுக்கப்பட்டமைதான் ரோஹின்ய முஸ்லிம்கள் இந்த அளவு பாதிக்கப்படக் காரணம் என்பது தெளிவான ஒன்றாகும்.
ஏனென்றால், பக்கத்தில் உள்ள முஸ்லிம் நாட்டினால் தான் இலேசாக உதவி செய்ய முடியும். என்றாலும், வங்காளதேசம் இஸ்லாமிய வாதிகளைக் கொலை செய்யும் முஸ்லிம் நாடு என்பது பெரும் துர்ப்பாக்கயமே. ஆகவேதான், அவ்வரசு தப்பிவந்த ரோஹிங்ய முஸ்லிம்களை தம் நாட்டுக்குள் நுழைய விடாமல் ஆற்றிலும் கடலிலும் பரிதவிக்க விட்டது.
இன்று ரோஹிங்ய முஸ்லிம்களுக்காக பலரும் கண்ணீர் வடிக்கின்றனர். பிரார்த்திக்கின்றனர். இவர்களுக்கு மத்தியில் ரோஹின்ய முஸ்லிம்களை அந்தக் காட்டுமிராண்டிகளுடன் தனியாக விட்டுவிட முடியாது என்று சூழுரைத்து களத்தில் குதித்த ஒரே முஸ்லிம் கோமகன்தான் ரஜப் தையப் அர்தூகான் என்ற துருகிய அதிபராவார். ரோஹின்ய மக்களைக் காப்பாற்ற அவர் விடுத்த அழைப்புக்கு கடார், பாகஸ்தான், மலேசியா, இந்தோனேசியா, பங்களாதேஷ் முதலிய நாடுகள் பதிலளித்துள்ளன. இது பாராட்டுக்குரிய விடயம்.
முஸ்லிம் உம்மத்தின் விடிவுக்கும் வெற்றிக்கும் பின்னணியில் நிற்கும் இஸ்லாமிய இயக்கங்கள் எவை என்பதை இனம்காண்பது இன்றய காலத்தின் தேவையாகும். எனினும், அது கடினமான விடயமே.
ஏனெனில், வஞ்சகத்தையும் நஞ்சையும் நெஞ்சில் சுமந்து இவ்வியக்கங்களுக்கு எதிராக முஷ்டியை உயர்த்திப்பிடித்து கத்தும் சிலர் சலைக்காமல் உழைத்து வருகின்றனர். பலர் இவர்களது பொய்ப் பிரச்சாரத்தைக் கேட்டுத் தடுமாற்றமுறுகின்றனர்.
இக்வானுல் முஸ்லிமூனும் ஜமாதே இஸ்லாமியும் விமர்சனத்திற்கு அப்பாட்பட்ட இயக்கங்கள் என்று நான் கூற வரவில்லை. விமர்சனத்தற்குப் பதிலாக அவர்கள் அவற்றிற்கெதிராகப் பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொள்வதும் நவீன இஸ்லாமிய எழுச்சிக்காக அவ்வியக்கங்கள் செய்த தியாகங்களையும் காட்டிய முன்மாதிரிகளையும் மூடிமறைத்து தமது கருத்துக்களால் சமூகத்தை முடிவில்லாத கருத்து வேறுபாட்டுக்குள் நுழைவிக்க முயற்சிப்பதுமே வேதனை தரும் விடயமாகும்.
– அஷ்ஷெய்க் பஸ்லுர் ரஹ்மான் (நளீமி), B.A., Dip in Edu.,SLTS –

Author: verified_user

0 comments: