"இலங்கையில் நிகழும் விவாகரத்துகளுக்கு சமூக வலைத்தளங்கள், கையடக்க செல்பேசிகளும் காரணம்"

Published On Friday, 22 September 2017 | 13:01:00

இலங்கையில் நிகழும் விவாகரத்துகளுக்கு, வீட்டு வன்முறைகளும், கணவன் மனைவியின் கள்ளக் காதல் தொடர்புகளும் பிரதான காரணமாக இருப்பதாக சட்டத்துறை வட்டாரத்தை சேர்ந்தோர் தெரிவித்துள்ளனர்.

பொருளாதார பிரச்சினை, மது அருந்துதல், வரதட்சனை, மருமகள்-மாமியார் சண்டை போன்ற பிரச்சினைகளும் இதற்கு காரணமாக இருப்பது போன்று சமூக வலைத்தளங்கள், கையடக்க செல்பேசிகள் ஆகியவற்றில் நடைபெறும் கருத்து பரவலாக்கமும் இதற்கு சாதகமாக அமைவதாக கூறுகின்றார் இலங்கை சட்ட உதவிகள் ஆணையகத்தை சேர்ந்த சட்டத்தரணி சஜிவனி அபேயகோன்.

"இதன் மூலம் பிறரோடு தொடர்பு ஏற்படுத்துதல், பிறரை அறிய வருதல், தொடர்புகளை பலப்படுத்தும் வசதி ஆகியவை எளிதாகிவிட்டது. இதனால், ஆண் - பெண் இரு தரப்பும் கள்ளத் தொடர்புகளை ஏற்படுத்தி கொள்ள இவை சாதகமாக அமைகின்றன. அதுவே குடும்ப அமைதிக்கு பாதிப்பையும் தாக்கத்தையும் ஏற்படுத்துகின்றது" என்றும் அவர் தெரிவிக்கின்றார்.

சமூக வலைத்தளங்கள் ஊடாக படங்களை பரிமாறிக் கொள்ளுதல் மற்றும் இணைய அரட்டை (chat) மூலம் தவறான உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதை தங்களிடம் சட்ட உதவிகளை நாடி வருவது மூலம் அறிய முடிவதாகவும் அவர் கூறியுள்ளார்.

கூகுள் இணைய தளம், ஆபாச இணையதளங்களுக்குள் அதிகமாக நுழைபவர்கள் இலங்கையர்கள் என அண்மையில் தகவல் வெளியாகியிருந்ததையும் சடத்தரணி சஜிவனி அபேயகோன் சுட்டிக் காட்டுகின்றார்

கையடக்க செல்பேசிக்கு வருகின்ற, அழைத்து பின்னர் துண்டிக்கப்படும் அழைப்புகள் (மிஸ்ட் கால்) மூலமும் தொடர்புகளை ஏற்படுத்தி இணையத்தில் ஆபாச வீடியோக்கள் பதிவேற்றப்படுகின்றன.

சில ஆண்கள் இணையத்தில் ஆபாச படங்களை பார்த்து விட்டு அது போன்று மனைவியுடன் பாலிலுறவு கொள்ள முற்படுதல் தொடர்பாகவும் தங்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

"இலங்கையில் 2005-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட 34ஆம் இலக்க குடும்ப வன்முறைகள் தடுப்பு சட்டம் கணவன் மனைவிக்கு அல்லது மனைவி கணவனுக்கு எதிராக வன்முறைகளை பிரயோகித்தால் இந்த சட்டம் மூலம் பாதுகாப்பை பெற முடியும்.

இலங்கை சமூகத்தில் குடும்ப பொருளாதார பலம் கணவனிடமே தங்கியிருப்பதால், பெண்கள் துன்பங்களை சகித்துக் கொண்டு பொறுமையுடன் இருப்பதால் முறைப்பாடு செய்ய முன் வருவதில்லை. சிலர் விவாகரத்துக்கு செல்லாமல் பராமரிப்பு பணத்தை பெற்று குடும்பத்தை நடத்திச் செல்கின்றார்கள்.

எப்படி இருப்பினும், சட்டத்தின் முன் கொண்டு வரப்படும் விவாகரத்து வழக்குகளில் கணவன் - மனைவியை பிரிக்காமல் தீர்க்க முயற்சிகள் எடுக்கப்படும் வேளையில், சில சந்தர்ப்பங்களில் அவர்களின் பிரச்சினை உக்கிரமடையும்போது அதனை தீர்க்க முடியாமல் போகின்றது" என்றும் குறிப்பிட்டார் சட்ட உதவிகள் ஆணையகத்தை சேர்ந்த சட்டத்தரணி சஜிவனி அபேயகோன். BBC
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Loading...
 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved