Thursday, 14 September 2017

சவூதி அரேபியாவில் தொடரும் அறிஞர்களின் கைது வேட்டை! கைதுக்கான காரணம் என்ன தெரியுமா?

(-முஹம்மத் பகீஹீத்தீன்-) அவர்கள் ஒற்றுமைக்கு உழைத்தவர்கள். பிரிந்தவர் சேர வேண்டும் என்று பிராத்தித்தவர்கள். மன்னர்கள் விரும்பாத உறவை காக்க முனைவது துரோகம் என்று ஆளும் வர்க்கம் முடிவு கட்டிவிட்டது.

'தீனுல் இஸ்லாம் அடக்குமுறைக்கு நேர் எதிரானது. இஸ்லாமிய போதனைகள் மக்களை இறைவன் ஒருவனுக்கு மாத்திரம் வணங்கி வழிபடுவதற்கு வழிகாட்டுகிறது. ஆனால் அடக்குமுறை அதிகார வர்க்கத்தின் கட்டளைகள் மக்களை மீண்டும் குடுட்டுத்தனமான அரசியல் சிலை வணக்கத்ததிற்கு திருப்பிவிடுகிறது.'

'இஸ்ரேல் நிச்சயமாக அழியும். அதற்கு முன்பு அப்பாவி மக்களை வஞ்சித்த அரபுலக ஆட்சியமைப்புக்கள் அழியும்'

இவை மர்ஹும் அஷ்ஷெய்க் முஹம்மத் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் கூறிய கசப்பான உண்மைகள்.

அசத்தியம் நிலைப்பதில்லை. அசத்தியத்தில் கட்டப்பட்ட ராஜ்யியங்களும் நிலைப்பதில்லை. அராஜகமும் நிலைப்பதில் அதற்கு உடந்தையாக இருப்பவகளும் நிலைப்பதில்லை.

அடக்குமுறை பல நூறு வருடங்கள் வாழ்ந்தாலும் நிலைப்பதில்லை அதனை ஞாபகப்டுத்தவே 120 தடவை அல்குர்ஆன் மூஸாவின் பெயரை மீட்டுகிறது. பிர்அவ்னிஸம் நீடு வாழ்வதில்லை. இந்த உண்மைகளையே முஹம்மத் கஸ்ஸாலி (ரஹ்) அவரது வார்த்கையில் இஸ்ரேல் அழியும் அதற்கு முன்பு மக்களைப் புரட்டி எடுக்கும் அரபுலக ஆட்சிமுறைகள் அழியும் என கட்டியம் கூறியுள்ளார்.

அன்று முதல் இன்று வரை சத்தியத்திற்கு அஞ்சிய மாமன்னர்கள் சத்தியத்தை பேசும் அறிஞர்களை அடக்கி ஒடுக்கி முடியாவிட்டால் கொலை செய்து வந்துள்ளார்கள். முடிவில் சத்தியம் வென்றது. அசத்தியம் தோற்றது. இது தான் வரலாறு. இதற்கு மாற்றமான ஒரு வரலாற்றை உலகம் காணவில்லை. காணப்போவதுமில்லை. காரணம் அது இறை நியதியாகும். அதற்கு மாற்றங்கள் கிடையாது.

இன்று ஆலு ஸுஊதின் பரம்பரையில் வந்த மன்னர்கள் சவுதி அறிஞர்கள் குழாமொன்றை காரணம் எதுவுமின்றி சிறைப்பிடித்துள்ளனர்.

அறிஞர்களான ஸல்மான் அவ்தா, அலி அல்-உமரி, அவழ் கர்னி போன்ற முக்கியமான 15 அறிஞர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் நூற்றுக்கணக்கான அறிஞர்கள் கைது செய்யப்படலாம்.

அஷ்ஷெய்க் ஸல்மான் அவ்தா அவர்கள் ' யா அல்லாஹ் அவர்களுக்கு மத்தியில் பிணைப்பையும் இணைப்பையும் ஏற்படுத்துவாயாக' என்று பிராத்தனை செய்ததுதான் குற்றமாக பார்க்கப்படுகிறது. சவுதியின் முடிக்குரிய இளவரசருக்கும் கதார் அமீருக்கும் இடையிலான தொலை பேசி உரையாடலுக்கு பின்னர் சல்மான் அவ்தா மேற்கண்டவாறு டுயிடர் வழியாக தனது பிராத்தணையை வெளியிட்டிருந்தார். அது அரச குடும்பத்திற்கு கடுப்பை ஏற்படுத்தி விட்டது.

இதைவிட அநியாயம் வேறு எதுவுமிருக்க முடியாது. ரோஹிங்காயின் அவலம் சிறிய காயம். ஆனால் அது முஸஸ்லிம் சமூகத்தின் பெரிய துன்பம். அது ஆரும் முன்னே அடுத்த காயம். அடுத்த அவலம் என்ன? சமூகத்தின் ஒளி விளக்குகள் அனைக்கப்படுகின்றன.

திரை மறைவில் வாழந்த கனவான்களுக்கு இருட்டுத்தான் ப்ரியம் போலும். இப்படிப்பட்ட அரசுகள் காலத்தால் அழியும் என முஹம்மத் கஸ்ஸாலி கூறிய வாசகம் உண்மையாகும் தருணம் நெருங்கி வருகிறது. காரணம் அசத்தியத்தின் கொற்றம் அழிந்து போகும் வரலாற்று நியதிகள் மாறுவதில்லை.

அநியாயமான முறையில் உலமாக்கள் கைது செய்யப்படுவதை மறுத்தும் கண்டித்தும் சர்வதேச உலாமா சபைகளும் 56 இஸ்லாமிய அறிஞர்களும் கூட்டிணைந்து கண்டன அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.

அந்த அறிக்கையில் காரணமின்றி கைது செய்யப்பட்டுள்ள சவுதியின் தலை சிறந்த அறிஞர்கள் அவசரமாக விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் சவுதி அரசின் உலமாக்களை வேட்டையாடும் இந்த நடவடிக்கைகள் யாவும் ஷரீஆவிற்கும் சர்வதேச சட்டங்களுக்கும் முரானது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில் பின்வருமாறு வேண்டப்பட்டுள்ளது.

1) அறிஞர்கள் நபிமாரின் வாரிசுகள். அவர்கள் முஸ்லிம் உம்மத்தின் நம்பிக்கையாளர்கள். அல்லாஹ் அவர்களை கண்ணியப்படுத்தியுள்ளான். அறிஞர்களுடன் கண்ணியமாகவே நடந்து கொள்ள வேண்டும். நியாயமின்ற அவர்கள் மீது அத்துமீறுவது நபிமார்களின் பரம்பரையில் அத்துமீறுவதாகவே அமையும். நாம் வாழும் காலத்தின் பரம்பரைக்கு வழிகாட்டல்கள் மிகுந்த தேவையாக இருக்கும் போது அவர்களின் பணிகளை முடக்குவது ஒளிவிகக்காக எரியும் தீபந்தங்களை அனைப்பதாகவே அமையும்.

2) எந்த நியாயங்களும் இல்லாமல் அறிஞர்களை கைது செய்வதானது பாரிய பித்னாவிற்கே கட்டியம் கூறுகிறது. அது ஒரு போதும் கைது செய்த அரசுக்கோ நாட்டிற்கோ எந்தப் பயனையும் ஈட்டித்தராது. குழப்பங்கiளும் கடுமைiயான சீர்கேடுகளையும் மாத்திரம்தான் பரவச் செய்யும்.

3) கண்ணியம் மிக்க இஸ்லாமிய அறிஞர்களை கௌரவமான முறையில் சவுதி அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்;. அல்லாஹ்வின் நேசர்களை எதிர்ப்பவனுடன் அல்லாஹ் போர் தொடுப்பதாக ஹதீஸ் எச்சரிக்கிறது. அல்லாஹுத் தஆலாவுடன் யார் தான் போராட முடியும்!!?

4) அநியாயாமாக சிறைப் பிடிக்கப்பட்டுள்ள சவுதி அறிஞர்களின் விடுதலைக்காக ஒட்டுமொத்த முஸ்லிம் உம்மத்தின் அறிஞர்களும் அறிஞர்களுக்கான அமைப்புக்களும் ஒன்றியங்களும் கூட்டினைந்து குரல் கொடுக்குமாறு அறிக்கை வேண்டுகிறது.

Author: verified_user

0 comments: