சவூதியில் 20க்கும் முற்பட்ட முக்கிய அறிஞர்கள் கைது செய்யப்படுவதற்கு இது தான் முக்கிய காரணமாம்!

Published On Sunday, 17 September 2017 | 12:34:00

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரான முகமது பின் சல்மானை விமர்சனம் செய்த 20க்கும் மேற்பட்ட முக்கிய தலைவர்களை அந்நாட்டு ராணுவம் கைது செய்துள்ளது.

சவுதி அரேபியாவின் அரசராக சல்மான் உள்ளார். அங்கு பட்டத்து இளவரசராக அவரது மருமகன் முகமது பின் நயீப் இருந்தார். ஆனால் திடீரென அங்கு பட்டத்து இளவரசர் மாற்றி அமைக்கப்பட்டார். 

ஜூன் 20ல் நடந்த அரச குடும்பத்து கூட்டத்தில் புதிய பட்டத்து இளவரசராக அரசர் சல்மான் மகன், முகமது பின் சல்மான் தேர்வு செய்யப்பட்டார். அதோடு துணை பிரதமர் பதவியும் அவருக்கு வழங்கப்பட்டது.

ராணுவம், எண்ணெய் வளம் உள்ளிட்ட அனைத்து விவகாரங்களையும் கவனிக்கும் அனைத்து பொறுப்பும் ஒதுக்கப்பட்டது. 

ஒட்டுமொத்தத்தில் சவுதியில் மிகவும் சக்திவாய்ந்த அரச குடும்ப வாரிசாக அவர் உருவெடுத்தார். பல்வேறு சீர்திருத்தங்களை அமுல்படுத்திய அவர் வைத்ததுதான் சட்டம் என்ற நிலை தற்போது சவுதியில் உள்ளது. மொத்தத்தில் புதிய அரசர் பதவியை நோக்கி அவர் வேகமாக நகர்வதாக விமர்சனங்கள் எழுந்தன.

சவுதியிலும் புதிய பட்டத்து இளவரசர் முகமதுபின் சல்மானை பலர் விமர்சனம் செய்தனர். மேலும் முன்னாள் பட்டத்து இளவரசரான நயீப்புக்கு ஆதரவாக பலர் களம் இறங்கலாம் என்றும் கூறப்பட்டது. 

அவர்களை தற்போது சவுதி அரசு ஒடுக்கத் துவங்கி உள்ளது. இதுவரை சுமார் 20 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதகுருமார்கள், கல்வியாளர்கள், கவிஞர், பொருளாதார நிபுணர், இளைஞர் அமைப்பின் தலைவர், 2 பெண்கள் இதில் அடங்குவர்.

கைது செய்யப்பட்டவர்களில் மிகவும் முக்கியமாக தற்போதைய இளவரசர் ஒருவரும், முன்னாள் அரசரின் மகன் ஒருவரும் என்பது சவுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

ராணுவத்தை வைத்து இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொருவரின் வீடு புகுந்தும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கம்ப்யூட்டர், செல்போன், தனிப்பட்ட முக்கிய ஆவணங்கள் இவர்களது வீடுகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இவர்கள் எதற்காக கைது செய்யப்பட்டார்கள், இவர்கள் மீதான குற்றம் என்ன என்பது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. 

எதற்காக இவர்கள் குறிவைக்கப்பட்டுள்ளனர் என்ற விவரமும் தெரியவில்லை. ஆனால் பட்டத்து இளவரசர் முகமது பின்சல்மானை விமர்சனம் செய்ததற்காகத்தான் அவர்கள் மீது கைது நடவடிக்கை பாய்ந்துள்ளதாக தெரிகிறது. 

சமூக ஊடகத்தில் அரசுக்கு எதிராக விமர்சித்ததால் இந்த நடவடிக்கை பாய்ந்துள்ளதாக சிலர் தெரிவித்தனர்.

சவுதி அரசின் கைது நடவடிக்கைகள் தற்போது பெரும் விமர்சனம் எழுந்துள்ளதை அடுத்து திடீரென அரசின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதில், "சவுதி அரசுக்கு எதிராக, வெளிநாட்டு அமைப்புகளுடன் சேர்ந்து சதி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

அரசின் பாதுகாப்புக்காக சவுதியை சேர்ந்தவர்கள் மற்றும் வெளிநாட்டு நபர்கள் விசாரணை வளையத்தில் கொண்டு வரப்பட்டுள்ளனர்", என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved