Tuesday, 22 August 2017

உலகமே உச்சரிக்கும் பெயர் மலாலா எழுதிய டயரி (சுவாரஷயமான தொடர்) - Dilshan Mohamed

மலாலா - பாகிஸ்தானின் பின்தங்கிய சர்ச்சைக்குரிய சுவாத் பகுதியில் வளர்ந்து, ஆதரவாகவும் எதிராகவும் என்று இன்று உலகமே உச்சரிக்கும் பெயர். இவள் தாலிபான்களுக்கு அல்லது இஸ்லாத்துக்கு எதிராக எழுதியதே இவள் சுடப்படுவதற்குரிய காரணமாக ஒரு அணியினர் கூற, இல்லையில்லை தாலிபான்களால் பெண்கள் பாடசாலைகள் மூடப்படுவதற்கு எதிராகவும், கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி எழுதியதை பொறுக்காமல் தலிபான்கள் இவளை அநியாயமாக கொலைசெய்ய முயற்சித்தனர் என்று மறுசாரார் வாதிடுகின்றனர். 

சரி!! அப்படி அவள் எழுதியது என்ன என்று கேட்டால் யாரிடமும் விடை இல்லை. 

மலாலா தனது பாடசாலை நாட்கள் பற்றிய எழுதிய டைரிகுறிப்புக்கள், பின்னர் அங்குள்ள உள்ளூர் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதன் காரணமாவே தாலிபான்களால் சுடப்பட்டார். எதை எழுதியதற்காக மலாலா சுடப்பாட்டாரோ அதை மொழிபெயர்க்கவேண்டும் என்று நீண்ட நாட்களாக எனக்குள் ஒரு ஐடியா இருந்தாலும், அந்த டயரிக்குரிப்பை மொழி பெயர்க்க நேரம் இடம் கொடுக்கவில்லை. இப்போதுதான் அது சாத்தியமாகி இருக்கிறது. 

குறிப்பு :- 

1. மலாலா பற்றி Conspiracy theory க்குள் நான் நுழைய விரும்பவில்லை என்பதால் மலாலா எழுதியதை அப்படியே மொழிபெயர்த்தது மட்டும் நான், தீர்மானிப்பது என்னவோ நீங்கள்தான். 

2. தாலிபான்கள் என்று இங்கு குறிப்பிடுவது ஆப்கானிஸ்தானில் செயல்படும் தாலிபான்கள் இல்லை. பாகிஸ்தான் தாலிபான்கள். இரண்டும் வெவ்வேறு அமைப்புக்கள். 

மலாலா எழுதிய டைரிக்குறிப்பு .!!! 
===================================

▶️ 3 JANUARY சனிக்கிழமை- எனக்கு பயமாக இருக்கிறது 

நேற்று இரவு இராணுவ ஹெலிகாப்டர் மற்றும் தாலிபான்களை பற்றிய ஒரு பயங்கர கனவு கண்டேன். சுவாத் பகுதியில் முன்னெடுக்கப்படும் இராணுவ நடவடிக்கையின் பின்னர் இதே போன்ற கனவுகள் பலமுறை கண்டிருக்கிறேன். எனது தாய் எனக்குரிய காலை ஆகாரத்தை தயாரித்து முடித்ததும் நான் பள்ளிக்கூடம் கிளம்பினேன். தாலிபான்கள் பெண் பிள்ளைகள் பள்ளிக்கூடம் செல்வதற்கு தடை என்று அறிவித்த பின்னர் எனக்கு பள்ளிக்கூடம் செல்வதற்கு பயமாக இருந்தது. 

எனது வகுப்பில் இருக்கும் மொத்தம் 27 மாணவிகளில் 11 பேர் மாத்திரமே பள்ளிக்கூடம் வருகின்றனர். மாணவிகளின் எண்ணிக்கை குறைவடைவதற்கு தாலிபான்களின் (தடை ) அறிவிப்பே காரணமாகும். இந்த அறிவிப்பின் பின்னர் எனது நண்பிகளில் மூன்று பேர் குடும்பத்துடன் பெஷாவருக்கும், லாஹூருக்கும் ரவல்பின்டிக்கும் இடம்பெயர்ந்து விட்டனர். 

நான் பள்ளிக்கூடம் செல்லும் வழியில் ஒருவன் வந்து உன்னை கொலை செய்வேன் என்று மிரட்டினான். உடனே நான் எனது நடையின் வேகத்தை கூட்டினேன். கொஞ்ச தூரம் சென்று இன்னும் அவன் என்னை தொடர்ந்து வருகிறானா என்று திரும்பி பார்த்தேன். எனக்கு நிம்மதியாக இருந்தது. அவன் யாருடனோ தொலைபேசியில் பேசிகொண்டு மிரட்டிக்கொண்டு நின்றுகொண்டு இருந்தான். 


4 JANUARY ஞாயிறு – நான் பள்ளிக்கூடம் போகவேண்டும் 

இன்று விடுமுறை என்பதால் ஒரு பத்து மணியளவில் கொஞ்சம் பிந்தியே எழுந்திருந்தேன். மூன்று சடலங்கள் க்ரீன் சவுக் கடவையில் கிடப்பதை பற்றி எனது தந்தை பேசிக்கொண்டு இருப்பது எனக்கு கேட்டது. இந்த செய்தியை கேட்டதும் நான் சோர்ந்து போனேன். இராணுவ நடவடிக்கை ஆரம்பிப்பதற்கு முன்னர் ஞாயிற்று கிழமைகளில் நாங்கள் மர்கசார், பிசா ஹாட், கஞ்சு போன்ற பகுதிகளுக்கு சுற்றி பார்ப்பதற்கு போவது வழமை. ஆனால் கடந்த ஒன்றரை வருடங்களாக நாங்கள் வெளியில் சுற்றுலா செல்வதற்குரிய சூழ்நிலை இல்லை. 

முன்பெல்லாம் இரவு ஆகாரத்தை முடிவிட்டு நாங்கள் வெளியில் ஒரு நடை போடுவது வழக்கம். ஆனால் இப்போதெல்லாம் சூரியன் மறைவதற்கு முன்னரே வீடுகளுக்கு வந்துவிடுகிறோம். இன்று நான் வீட்டு வேலைகள் செய்தேன், ஹோம்வேர்க் பண்ணினேன், தம்பியுடன் விளையாடினேன். ஆனாலும் நான் நாளை பள்ளிக்கூடம் செல்லவேண்டும் என்று நினைக்கும் போது இதய துடிப்பு அதிகரித்தது. 

5 JANUARY திங்கள் கிழமை – கலர் ஆடைகள் அணியவேண்டாம் 

நான் பள்ளிக்கூடம் செல்ல ஆயத்தமாகும் போது, சீருடைகள் அணியந்து வராமல் சாதாரண உடைகளில் பாடசாலை வருமாறு எமது அதிபர் சொன்ன அறிவுரை ஞாபகம் வந்தது. அதனால் எனக்கு விருப்பமான பிங் கலர் ஆடையை அணிந்தேன். ஏனைய மாணவிகளும் கலர் கலராக ஆடை அணிந்து வருவதால் பாடசாலை ஒரு வீடு போல காட்சியளிக்கும். 

எனது நண்பிகளில் ஒருத்தி வந்து என்னிடம் அல்லாஹ்வுக்காக கேட்கிறேன், நமது பாடசாலையை தாலிபான்கள் தாக்கபோகிறார்களாமே என்று கேட்டிருந்தாள். தாலிபான்கள் எதிர்ப்பார்கள் என்று கலர் கலராகவும் ஆடை அணியவேண்டாம் என்று இன்றைய காலை கூட்டத்தில் எமக்கு சொல்லப்பட்டது.

பாடசாலை விட்டுவந்து பகல் சாப்பிட்டுவிட்டு நான் டியுஷன் கிளாசுக்கு சென்றுவிட்டேன். மாலை நேரம் டிவி செய்தியில் 15 நாட்களின் பின்னர் சகர்த்தா பகுதியில் இருந்த ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது. எனக்கு அது சந்தோஷமான செய்தி, ஏனெனில் எமது ஆங்கில பாடத்தின் ஆசிரியர் அந்தபகுதியை சேர்ந்தவர். எனவே அவர் மீண்டும் பாடசாலைக்கு வரகூடும். 

7 JANUARY புதன்கிழமை – சண்டையும் இல்லை, பயமும் இல்லை 

முஹர்ரம் மாத விடுமுறைக்கு நான் புனைருக்கு வந்திருந்தேன். புனைரில் அழகான மலைகளும் பச்சை புல்வெளிகளும் இருப்பதால் எனக்கு பிடித்திருந்தது. எமது பகுதியான சுவாத்தும் அழகானதுதான் ஆனால் அங்கு அமைதி இல்லை. புனைர் அழகாகவும் அமைதியாகவும் இருந்தது. இங்கு சண்டையும் இல்லை, பயமும் இல்லை. நாங்கள் சந்தோசமாக இருந்தோம். 

இன்று நாங்கள் பீர்பாபா தர்க்காவுக்கு சென்றிருந்தோம். அங்கு நிறைய மக்கள் வந்திருந்தார்கள். இங்கு வந்திருக்கும் மக்களில் பலர் தர்க்காவை தரிசிப்பதற்காக வந்திருக்க, நாங்கள் சுற்றுலாவுக்காக வந்திருந்தோம். இங்கு வளையல்கள், காதுப்பூ, மற்றும் ஏனைய ஆபரணங்கள் விற்பனை செய்யும் கடைகள் இருந்தன. எனக்கும் ஏதாச்சும் வாங்கனும் போல இருந்தாலும் எதுவும் எனக்கு பிடித்த மாதிரி இருக்கவில்லை. எனது உம்மா காதுப்பூ மற்றும் வளையல்கள் சிலவும் வாங்கினார். 

9 JANUARY வெள்ளிக்கிழமை – மௌலான விடுமுறையில் சென்றுவிட்டார் ? 

இன்று எனது பாடசாலை நண்பிகளுக்கு எனது புனைர் சுற்றுலா பற்றி சொன்னேன். புனைர் பற்றி தொடர்ந்தும் பலரும் சொல்லிவருவதால் இதை கேட்டு கேட்டு புளித்து போச்சு என்று அவர்கள் சொன்னார்கள். ரேடியோவில் பேசும் மௌலானா சாஹ் தவ்ரான் அவர்கள் இறந்து விட்டார்கள் என்ற வதந்தியை பற்றியும் நாம் கதைத்துக்கொண்டோம். பெண் பிள்ளைகள் பாடசாலைக்கு செல்லக்கூடாது என்ற தடையை அறிவித்ததும் மௌலானாதான். 

சில மாணவிகள் அவர் இறந்துவிட்டதாக சொன்னார்கள், சிலர் இல்லை என்றும் சொன்னார்கள். அவர் நேற்று இரவு ரேடியோவில் பேசி இருக்கவில்லை என்பதால்தான் இந்த வதந்தி உருவாகி இருந்தது. அவர் விடுமுறைக்கு சென்று விட்டதாக ஒரு மாணவி சொன்னாள். 

இன்று வெள்ளிக்கிழமை டியுஷன் இல்லையென்பதால் மாலை முழுவதும் விளையாடினேன். மாலை டிவி செய்தியில் லாஹூரில் குண்டு ஒன்று வெடித்திருந்தாதாக அறிவித்தார்கள். ஏன் பாகிஸ்தானில் தொடந்தும் குண்டு வெடிக்கிறது என்று எனக்குள் நான் சொல்லிக்கொண்டேன். 

(தொடரும் ) மொழி பெயர்ப்பு - தில்ஷான் முஹம்மத்

Author: verified_user

0 comments: