Friday, 18 August 2017

கட்டாரில் இருந்து வந்த ஹஜ் யாத்திரீகர்களை வரவேற்று கௌரவப்படுத்திய சவூதி அரேபிய அரசஅதிகாரிகள்.

-Razana Manaf-
கட்டார் ஹஜ் யாத்திரிகர்களின் நலன் கருதி மீண்டும் திறந்து விடப்பட்ட கட்டார் - சவூதி அரேபிய எல்லையான சல்வா எல்லை வழியாக 100 கட்டார் ஹஜ் யாத்திரிகர்கள் நேற்று சவூதி அரேபியாவை சென்றடைந்துள்ளனர், இவர்களை சவூதி அரேபிய அரச அதிகாரிகள் வரவேற்று கௌரவப்படுத்தியுள்ளது மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று சவூதி அரேபியாவை சென்றடைந்த இந்த குழுவினரில் சிலரிடம் ஹஜ் செய்வதற்கான முறையான அனுமதிப்பத்திரம் காணப்படவில்லை இருந்த போதும் இவர்கள் திருப்பியனுப்பபடாது மன்னர் சல்மானின் விருந்தினர்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதானது கட்டார் - சவூதி உறவில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

மன்னர் சல்மானின் உத்தரவின் பேரில் இந்த ஹஜ் யாத்திரிகர்கள் அனைவரும் கிங் பஹத் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மக்காவின் அஹ்சா விமான நிலையத்திற்கு சவூதி அரேபிய எயார்லைன்ஸ் மூலமாக இலவசமாக அனுப்பிவைக்கப்பட்டனர்.

கேர்னல் ஹசன் அல் டொசாரி அவர்கள் இதுபற்றி சவூதி அரேபிய ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட சமயம், கட்டார் ஹஜ் யாத்திரிகளை நாங்கள் திறந்த மனதுடன் வரவேற்கிறோம் அவர்கள் அனைவரும் இறைவனின் விருந்தினர்கள் அவர்களை நாங்களும் மதித்து வரவேற்கிறோம் மன்னர் சல்மான் அவர்கள் எல்லையை திறந்து விட உத்தரவிட்டதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம் கட்டார் ஹஜ் யாத்திரிகர்கள் தங்களின் ஹஜ் கடமையை முழுதாக நிறைவேற்றிவிட்டு திரும்பி செல்லும் வரை அவர்களுக்கு சேவையாற்ற காத்திருக்கிறோம் என்று கூறி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

சவூதி அரேபிய சிவில் விமான போக்குவரத்து துரையின் தலைவரான அப்துல் ஹகீம் அல் தமிமி விமான நிலையத்தின் அனைத்து அதிகாரிகளுக்கும் மற்றும் ஊழியர்களுக்கும் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கட்டார் ஹஜ் பயணிகள் பூரண மரியாதையுடன் நடத்தப்பட்ட வேண்டுமென்றும் அவர்களுக்கான உதவிகள் மற்றும் சேவைகள் எந்த நேரத்திலும் வழங்கப்பட வேண்டுமென்றும் உத்தரவிட்டுள்ளார்.

இந்த வருடம் 2400 கட்டார் மக்களுக்கு ஹஜ் செய்வதற்கான அனுமதியை சவூதி அரேபிய அரசு வழங்கியிருக்கின்றது இதை தவிர முறையான அனுமதியற்ற வகையில் ஹஜ் செய்வதற்காக வருகை தரும் கட்டார் மக்களின் மூலமாக இத்தொகை இன்னும் அதிகரிக்கலாம் என கருதப்படுகின்றது.

சவூதி அரேபியாவின் பல பாகங்களிலுமிருந்து முறையான ஹஜ் அனுமதிப்பத்திரம் இன்றி ஹரம் சரீப் எல்லைக்குள் நுழைய முற்பட்ட பல்வேறு நாட்டவர்களை சேர்ந்த 95400 பேர் மக்கா எல்லை காவற்படையினரால் திருப்பி அனுப்பட்டிருந்தனர். அத்துடன் பயணிகளை ஏற்றி வந்த 12,000 க்கு மேற்பட்ட வாகனங்களும் முறையான அனுமதிப்பத்திரம் இல்லாமையால் திருப்பி அனுப்பட்டிருந்தன.

சட்டவிரோதமாக ஹஜ் செய்யும் பயணிகள் காவற்படையினரால் கைது செய்யப்படுமிடத்து அவர்களுக்கு 10 வருட சிறைத்தண்டனை வழங்கப்படும் என்று சவூதி அரேபியா அறிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Author: verified_user

0 comments: