Saturday, 26 August 2017

கத்தார் குறித்த அரபு நாடுகளின் நிலைப்பாடு தளருமா! சிறப்புப் பார்வை!

கத்தார் குறித்த அரபு நாடுகளின் நிலைப்பாடு தளருமா இது குறித்து கொழும்பு வார இதழான மீள்பார்வை அலசுகிறது..

ஜூன் 05 இல் கத்தாருடனான ராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளை நான்கு அரபு நாடுகள் முறித்துக் கொண்டதை அடுத்து பிராந்தியத்தில் பெரும் அரசியல் பதட்டம் நிலவுகின்றது. ஜூலை மாதத்தின் இறுதிப் பகுதியில் சவூதி அரேபியா தலைமையிலான வளைகுடா நாடுகளுக்கும் கத்தாருக்கும் இடையிலான ராஜதந்திர உறவில் மேலும் பல புதிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

துருக்கிய ஜனாதிபதி அர்தூகான் சவூதி, குவைத் ஆகிய நாடுகளோடு நடத்திய பேச்சுவார்த்தை செயல் திறன் வாய்ந்ததும் வெற்றிகரமானதும் என வர்ணித்திருந்தார்.

ஜூலை 25 இல் இப்பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. அதேபோன்று லெபனான் பிரதமர் சஅத் ஹரீரி, சவூதி மற்றும் கத்தாருக்கிடையிலான முரண்பாட்டைத் தவிர்ப்பதற்கு பேச்சுவார்த்தை ஒன்றே வழி எனத் தெரிவித்திருந்தார்.

ஜூலை 30 இல் எகிப்து கத்தாருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள 13 நிபந்தனைகளையும் நிறைவேற்றாவிடின் அதனுடன் எந்தப் பேச்சுவார்த் தையிலும் தாம் ஈடுபடப் போவதில்லை என்று அச்சுறுத்தியிருந்தது.

எகிப்தின் வெளிவிவகார அமைச்சர் சமீ சுக்ரி ஐரோப்பிய ஒன்றியத்தின் ராஜதந்திரிகளோடு நடத்திய பேச்சுவார்த்தைகளை அடுத்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில், “இது சமசரம் செய்யும் விவகாரமல்ல.

நாம் பயங்கரவாதத்தின் எந்த வடிவத்துடனும் சமரசம் செய்யப் போவதில்லை. கத்தார் பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் நிலையில் அதனுடனான பேச்சுவார்த்தைகளுக்கு நாம் செல்லத் தயாரில்லை என அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில் அல்ஜஸீரா ஊடகத்தின் மீது கடந்த இரு மாதங்களாக அரபு நாடுகளின் மேற் கொள்ளப்பட்டு வரும் அழுத்தங்கள், தடைகளை சர்வதேச மனித உரிமை நிறுவனங்கள் வன்மையாகக் கண்டித்துள்ளன.

கத்தார் அரசு ஆதரவளிக்கும் ஊடகம் என்ற வகையில் சவூதி, பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து ஆகிய நாடுகளில் அல் ஜஸீரா தொலைக்காட்சி மற்றும் இணைய வசதிகள் அனைத்தும் தடைசெய்யப்பட்டுள்ளமை கருத்துச் சுதந்திரத்தை மீறுவதாகும் என அவை தெரிவித்துள்ளன.

இந்த அரசியல் போக்குகளின் உச்சமாக கத்தாருக்கு எதிரான ஊடகப் போரொன்றைத் தொடங்கியது சவூதி அமெரிக்காவிலுள்ள சவூதி-அமெரிக்க பொது விவகார சபை, பிரபல்யமான அமெரிக்கத் தொலைக்காட்சியில் கத்தார் பற்றிய விளம்பரமொன்றை ஆரம்பித்துள்ளது.

30 செக்கன் நேர இந்த விளம்பரத்திற்கு 138,000 அமெரிக்க டொலர்கள் செலவு செய்யப்பட்டுள்ளதாக அல் ஜஸீரா உறுதி செய்துள்ளது. ஒரு செக்கனுக்கு 1000 டொலர் சவூதி அரசாங்கம் கட்டணம் செலுத்துகின்றது.

வாஷிங்டன் டிசியை தளமாகக் கொண்ட அமெரிக்காவின் தேசிய தொலைக்காட்சி சேவை NBC-4 இல் ஜூலை 23 இலிருந்து கத்தாருக்கு எதிரான இந்த விளம்பரங்கள் ஒளிபரப்பப்படு கின்றன.

கத்தார் பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கின்றது எனவும் பிராந்தியத்தில் அமெரிக்க நேச நாடுகளின் அரசியல் ஸ்திரப்பாட்டை குலைத்து வருகின்றது எனவும் இவ்விளம்பரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதம் தொடர்பான குற்றச்சாட்டுக்களை அடிப்படையற்றவை என கத்தார் அரசாங்கம் ஏற்கனவே தெட்டத் தெளிவாக மறுத்துரைத்துள்ளது. இது போன்ற தொலைக்காட்சி விளம்பரங்கள் சாதாரண பொது மக்களின் அபிப்பிராயங்களை கத்தாருக்கு எதிராகத் திருப்புவதை விட ஆபத்தானதாகும்.

ஏனெனில், இந்த விளம்பரங்கள் தீர்மானமெடுக்கும் இடத்திலுள்ளோரை இலக்கு வைக்கின்றது. குறிப்பாக, அமெரிக்கக் காங்கிரஸ் உறுப்பினர்கள், செனட் சபை அங்கத்தவர்கள், செல்வாக்குள்ள அரசியல் புள்ளிகளின் கருத்து நிலையை மாற்றி விடுவதே இதன் உள்நோக்கம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்காவில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிகளில் நடைபெறும் காலகட்டத்திலேயே இவ் விளம்பரம் திட்டமிட்டு ஒளிபரப்பப்படுகின்றது. இவ் விளம்பரங்கள் மீள மீள ஒளிபரப்பப்படுவது அதன் அரசியல் உள்நோக்கத்தைப் புலப்படுத்துகின்றது என பொரள் அசோசியேட்ஸ் சந்தைப்படுத்தல் நிறுவனத்தின் துணை நிறைவேற்று அதிகாரி கிப் கெசினோ கூறுகின்றார்.

அரசியல் பிரச்சாரத்தில் ஊடகங்களின் தாக்கம் குறித்த நிபுணரும் ரூட் கெஸ் பல்கலைக்கழகத்தின் அரசியல் துறை பேராசிரியருமான ரிச்சட் லோ, இந்த விளம்பரம் தெரிவுசெய்யப்பட்ட பார்வையாளர்களை அதாவது அரசியல்வாதிகளை இலக்கு வைக்கின்றது.

கத்தாருக்கு எதிரான கருத்து நிலைகளையும் மனோ பாவங்களையும் உருவாக்குவதே இதன் திட்டமிட்ட நோக்கம் என்று அவர் குறிப்பிடுகின்றார்.

கத்தார் குறித்த புதிய மக்கள் அபிப்பிராயம் ஒன்றை அமெரிக்காவில் உருவாக்குவதற்கு சவூதி அறேபிய ஒரு புதிய மூலோபாயத்தைக் கையாளத் தொடங்கியுள்ளது எனத் தெரிவித்துள்ள ரிச்சட் லோ, வளைகுடாவில் இயங்கும் பயங்கரவாத நிறுவனங்களுக்கு நிதியாதரவளிக்கும் அரசுகள், நிறுவனங்கள் குறித்து அமெரிக்க அரசியல் தலைவர்கள் ஏற்கனவே அறிந்து வைத்துள்ளனர். இதனால், இந்த விளம்பரத்தின் தாக்கம் சவூதி அறேபியா புதிதாக எதனையும் வழங்கப் போவதில்லை என்று அவர் தெரிவித்தார்.

சவூதி-அமெரிக்க பொது விவகாரங்கள் சபை 2016 மார்ச் மாதம் ஸ்தாபிக்கப்பட்டது. சவூதிக்கு ஆதரவான அரசியல் நிலைப்பாட்டுக்கு அமெரிக்க சிவில் சமூகத்தின் ஆதரித்து வாதிடுதல் அதன் பிரதான நோக்கம். சல்மான் அல் அன்ஸாரி என்பவரே இச்சபைக்கு தலைமை தாங்குகின்றார்.

சவூதியைச் சேர்ந்த எழுத்தாளர் ஆதரித்து வாதிடுபவராகவும் (Logistist) அரசியல் விமர்சகராகவும் உள்ளார். இவரே சவூதி-அமெரிக்க பொது விவகார சபையை நிறுவியவர். 2016 ஒக்டோபரில் இஸ்ரேலுக்கும் சவூதிக்கும் இடையிலான நெருக்கமான உறவுகளின் முக்கியத்துவம் குறித்து இவர் எழுதிய போது சர்ச்சை உருவானது.

முன்னைய பட்டத்து இளவரசர் முஹம்மத் பின் நாயிபுக்குப் பதிலீடாக நியமிக்கப்பட்ட முஹம்மத் பின் சல்மான், இஸ்ரேலுடன் உண்மையானதும் உறுதியானதுமான உறவுகளை வளர்த்துக் கொள்ள ஆர்வத்துடன் செயல்படுகின்றார் என சல்மான் அன்ஸாரி தெரிவித்திருந்தார். தற்போது கத்தாருக்கு எதிரான தொலைக்காட்சி விளம்பரத்திற்கு சவூதி- அமெரிக்க பொது உறவுகள் சபையே நிதி வழங்கு கின்றது.

அமெரிக்காவில் செயல்படும் அமெரிக்க-இஸ்ரேல் பொது விவகார சபை AIPAC நீண்டகாலமாக அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் செல்வாக்குச் செலுத்தி வருகின்றது. அதுபோன்று இஸ்ரேல் சவூதி உறவை வலுப்படுத்தும் நோக்கில் அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட நிறுவனமே அது என்பது குறிப்பிடத்தக்கது.

NBC-4 தொலைக்காட்சி சில ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களால் உருவாக்கப்பட்டது. 2016 தேர்தல் பிரச்சாரத்திற்கு அது 9 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்கியது. தற்போதைய விளம்பரத்திற்கு 20,000 அமெரிக்க டொலர் கொமிஷன் வழங்கியது.

பிராந்தியத்தில் கட்டாரைத் தனிமைப்படுத்தும் அமெரிக்க-இஸ்ரேலியத் திட்டத்தின் முகவர்களாகவே அரபு நாடுகள் செயல்படுகின்றன என்பதற்கு கத்தாருக்கு எதிரான இந்த விளம்பரம் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

எவ்வாறாயினும், அரபு நாடுகள் ராஜதந்திர ரீதியான பாரிய பின்னடைவை எதிர்கொண்டுள்ளன. நிபந்தனைகளுடன் கூடிய பேச்சுவார்த்தைக்கு தாங்கள் தயார் என்று சவூதி கூட்டணி அறிவித்து
ள்ளமை கத்தார் தொடர்பான அவற்றின் நிலை ப்பாட்டில் ஏற்பட்டுள்ள தளர்வையே காட்டுகின்றது.

Author: verified_user

0 comments: